Home>>அரசியல்>>வெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் டெல்கிப் பேரணியில் பெ. மணியரசன் வாழ்த்துரை!
வெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் தில்லிப் பேரணியில் தலைவர் பெ. மணியரசன் வாழ்த்துரை
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் டெல்கிப் பேரணியில் பெ. மணியரசன் வாழ்த்துரை!

ஐயா மணியரசன்வெளியாரை வெளியேற்றும் திரிபுரா மக்கள் முன்னணியின் தில்லிப் பேரணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் வாழ்த்துரை வழங்கினார்!


திரிபுராவில் வெளியாரை வெளியேற்ற வேண்டுமெனக் கோரி, நேற்று (04.10.2021) – இந்தியத் தலைநகர் புதுதில்லி ஜந்தர் மந்தரில் “திரிபுரா மக்கள் முன்னணி” (Tripura Peoples Front – TPF) சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

போராட்டத்திற்கு, திரிபுரா மக்கள் முன்னணித் தலைவர் பாட்டல் கன்யா ஜமாத்தியா அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி ஐ.நா. தொடர்பாளர் திரு. ஜீவா டானிங், சீக்கிய இன எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளரான திரு. குர்மீத் சிங், “சீக் சியாசட்” (Sikh Siyasat) ஊடக ஆசிரியர் – வழக்கறிஞர் பர்ம்ஜித் சிங், பந்த் சேவக் சதா தலைவர் மந்திர் சிங், ரவுண்ட் டேபிள் இந்தியா தலைவர் குறிந்தர் ஆசாத், அசாம் சக்தி யுவ பரிசித் கட்சி பொது செயலாளர் உதயன் குமார் குகை, டெல்லி பல்கலைகழக வரலாற்று செயல்பாட்டாளர் – பேராசிரியர் குமார் சஞ்சய் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், தொலைப்பேசி வழியே போராட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார். அவரது உரையை திரு. குர்மீத் சிங் அவர்கள் இந்தியில் மொழிபெயர்த்தார். ஐயா மணியரசன் அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் வருமாறு :

“பெருமதிப்பிற்குரிய தலைவர் அம்மா பி.கே. (பாட்டல் கன்யா ஜமாத்தியா – Patal Kanya Jamatia) அவர்களே,
இந்திய ஏகாதிபத்தியத்தின் தலைநகரமான புதுதில்லி வீதிகளில் “திரிபுரா மக்கள் முன்னணி (Tripura Peoples Front – TPF) பதாகையின்கீழ் அணிதிரண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திரிபுரா மக்களே (Tripurasa Borok), உங்களுக்கு எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் (Thamizh National Movement) சார்பில் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களும் திவிபிரசா போரோக் மக்களும் – இரு மாநிலத்தவரும் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்கும் இன ஒதுக்கலுக்கும் உள்ளானவர்கள்.

இந்தியாவோடு திரிபுரா 1949-இல் இணைந்தபோது, மண்ணின் மக்களின் எண்ணிக்கை 89%. ஆனால், அன்றிலிருந்து ஆரிய இந்திய ஆட்சியாளர்களின் துணையுடன் வெளியார் வெள்ளம் திரிபுராவில் புகுந்துவிட்டது. இப்போது திரிபுரி மக்கள் தொகை வெறும் 20%. இதனால்தான் வீரஞ்செறிந்த திரிபுரி மக்கள் தங்களின் தாயக உரிமைக்காகவும், தன்னுரிமைக்காகவும் போராடுகிறார்கள்.

ஒரு காலத்தில் மண்ணின் மக்கள் உரிமை மீட்பிற்காகப் போராடிய பிஜோய் ஹிரங்காவல் அவர்களுக்கும் அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி அவர்களுக்கும் இடையே 1988-இல் ஏற்பட்ட உடன்படிக்கை, திரிபுராவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றி விடுவது என்று உறுதி அளித்தது. ஆனால் அந்த உடன்படிக்கையைச் செயல்படுத்தாமல் இரண்டகம் செய்தார்கள் தில்லி ஆட்சியாளர்கள்.

மீண்டும் 1993-இல் அகர்தலா உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை 1971 மார்ச்சு 24-க்குப் பின், திரிபுராவில் குடியேறியவர்களை வெளியேற்றிவிட உறுதி அளித்தது. அத்துடன் மட்டுமின்றி, உள் அனுமதி அதிகாரத்தையும் (Inner Line Permit) திரிபுரா அரசுக்கு வழங்கிட உறுதி அளித்தது. இதன்மூலம் மேலும் வெளியார் திரிபுராவுக்குள் நுழைவதைத் தடுக்கலாம் என்று கூறியது. இந்திய அரசின் அதிகார மையம் இந்த உடன்படிக்கைக்கும் இரண்டகம் செய்தது; இதைச் செயல்படுத்தவில்லை.

தமிழர்களாகிய நாங்கள் உங்களின் பட்டறிவிலிருந்து இந்திய அரசு குறித்துப் பாடம் கற்றுக் கொள்கிறோம்.
ஆனால், மகத்தான துவிப்பிரசா போரோக் மக்களை வீழ்த்த முடியாது. ஆற்றல்மிகு தலைவரான அம்மா பாட்டல் கன்யா ஜமாத்தியா அவர்களின் தலைமையில் திரிபுரா மக்கள் முன்னணி இயங்குகிறது. உங்களின் முழக்கம், “எங்கள் தாயகம்! எங்கள் உரிமை!” என்பதாகும்!

உங்களின் போராட்டத்தில் இன்றைய தில்லிப் பேரணி மிக முக்கியமான திருப்புமுனையாகும். எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் (பெ. மணியரசன்), அதன் தலைவர் என்ற முறையில் உங்களின் தில்லிப் பேரணிக்கு எழுச்சிமிகு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கான போராட்டத்தில் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரிபுராவில் நடப்பதைப் போலவே, தமிழ்நாட்டிலும் வெளியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்தும், வேறு சில மாநிலங்களிலிருந்தும் வந்து தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கிறார்கள். எங்களின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு அனைத்தையும் மார்வாரி குசராத்தி சேட்டுகளும், இந்திக்காரர்களும் பறித்துக் கொண்டார்கள். நாங்களும் தமிழ்நாட்டிற்கு உள் அனுமதி அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறோம். இந்த அதிகாரம் கிடைத்தால்தான் தமிழ்த்தேசத்தில் வெளியார் புகுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

வெளியாரை வெளியேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்திருக்கும் வரம்பு ஆண்டு (Cutoff) – 1948. நாங்கள் வைத்திருக்கும் வரம்பு ஆண்டு 1956 நவம்பர் 1. அந்த நாளில்தான் தமிழர்களின் மொழிவழித் தேசத் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டது.

வெளியார் வெள்ளம் புகுவதைத் தடுத்துத் தமிழர் தாயகத்தைப் பாதுகாத்திடத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. 1956 நவம்பர் 1-க்குப் பின் தமிழ்நாட்டில் குடியேறிய வெளியார் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும் என்று கோருகிறோம். இந்திய அரசு தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள அலுவலகங்களில் – நிறுவனங்களில் இந்திக்காரர்களையே அமர்த்துகிறது.
அயலாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்கள் தாயகத்தை மீட்கும் வரை துவிப்பிரசா போரோக் மக்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிட மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். நீதிக்கான உங்கள் போராட்டத்தில் – தாயக மீட்பிற்கான உங்கள் போராட்டத்தில் எங்களது மகத்தான தமிழ்த்தேசம் உங்களோடு நிற்கும்!
மீண்டும் எங்களது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், உங்களின் எழுச்சிமிகு தில்லிப் பேரணிக்கு நெகிழ்ச்சிமிகு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா பிகே. அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த வணக்கம்! திரிபுரா மண்ணின் மகன்களுக்கும் மகள்களுக்கும் எழுச்சிமிகு வணக்கம்! நன்றி!”.

இவ்வாறு ஐயா பெ. மணியரசன் அவர்கள் உரையாற்றினார்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply