உதிரத்தில் உயிராய் எனைப் பெற்று
கருவாய் சுமந்து -உருவாய் வடித்து
அனுதினமும் அன்பு எனும் சத்தான உணவை
வழங்கி ஒவ்வொரு நொடியும் எனக்காக இயங்கியவளே…
கால் நூற்றாண்டை கடந்த பின்பும் இன்று வரை
கால் சட்டை போட்ட சிறுவனை போல் எனை கவனிப்பவளே
எனக்காக அனுதினமும் பல கனவுகளை அர்பணிப்பவளே…
அன்பு எனும் மொழியை கொண்டு நீயோ
இசைபாடுகிறாய்-அனுதினமும் அதை கேட்டு
நானோ இளைப்பாறுகிறேன்…!
அனைத்து உறவாய் கண்முன்னே காட்சி அளிப்பவளே
அளவில்லா அன்பை கொண்டு என்னுள் ஆட்சி புரிபவளே…!
அழகு யாதெனில் உன் குணம் என்பேன்
அமிர்தம் யாதெனில் நீ தரும் உணவென்பேன்…
தென்னை ஓலைக் கொண்டு உலை வைத்து
மூன்று வேளை எனக்கு பிடித்த உணவை மூச்சு பிடித்து செய்து பசியாற்றுவாய்…!
பொன்நகையை கொண்டு உன்னை நான் அலங்கரிக்க
மறந்தாலும் புன்னகையை தந்து எப்போதும் எனை அரவணைப்பாயே அம்மா!
உன் நலம் வேண்டி நான் எந்த கடவுளையும் வணங்கியது
இல்லை-உன்னை தாண்டிய கடவுள் எனக்கு ஏதுமில்லை….
—மணிபாரதி தங்கசுந்தர், மன்னார்குடி.
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)