திரு.இராஜப்பா அவர்கள் ஆசிரியரா அல்லது மாணவரா என்று கேட்கும் அளவிற்கு இரண்டு கோணங்களிலும் சிறப்பாக செயல்படுகிறார். காரணம் ஒருபுறம் கற்பிக்கவும் செய்கிறார், மறுபுறம் தொடர்ந்து கற்கவும் செய்கிறார். நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக தனது பதில்களை அளித்துள்ளார்.
அவைகளை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. கேள்வி, பதில்களை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்கிறோம்.
உங்கள் ஆசிரியர் பணி பற்றி கூறுங்கள்?
வலிவலம் தேசிகர் கல்வி நிலையத்தில் DME படிப்பை வெற்றிகரமாக முடித்தப்பின்னர், தொழில் பழகுநர் பயிற்சிக்காக ராணிப்பேட்டை BHELயில் பணியாற்றினேன்.
அதன்பிறகு 1986 முதல் மன்னார்குடி தேசிய மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக 33 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராகவும், திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் ஆகவும் பங்களித்து வருகிறேன்.
நீங்கள் மாணக்கர்களுடன் கலந்துக்கொண்ட போட்டிகள் பற்றி கூறுங்கள்?
ஆண்டு தோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. M.Phil. ஆய்வு அளவிற்கு, குழந்தைகள் ஆய்வு பற்றி விழிப்புணர்வு பெற இந்த போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் தலைப்பு அவர்களால் வழங்கப்படும், 3 மாதங்கள் விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டு ஆய்வு அறிக்கையாக உருவாக்கி சமர்பிக்க வேண்டும்.
தேசிய அளவில் 5 முறை, மாநில அளவில் 11 முறையும், மாவட்ட அளவில் 26 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து உள்ளோம் மற்றும் இளம் விஞ்ஞானிகள் என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.
பிற்காலத்தில் மாணாக்கர்கள் இந்த பயிற்சி எங்களுக்கு பெரிதும் வேலைவாய்ப்பில் உதவியது என்று கூறியுள்ளார்கள்.
பாடம் பயிற்றுவிப்பது தவிர, நீங்கள் பள்ளிகளில் மேற்கொள்ளும் பணிகள் என்னென்ன?
2009ல் மாவட்ட நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளராக வந்த பின்னர், ஒவ்வொரு பள்ளியிலும் நூலக வாசிப்பு இயக்கம் மூலம் நூல் வாசிப்புகளை ஏற்பாடு செய்து தருகிறோம்.
நூல்களை மாணவர்களிடம் சுயமாக வாசிக்க செய்து, அதற்கு பரிசுகளும் வழங்குகிறோம். இதன் மூலம் நூல் வாசிக்கும் பழக்கம் அதிகமாக வழி வகுக்கிறது.
15 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி, பொங்கல் காலங்களில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியை காவல்துறையுடன் இணைந்து செய்து வருகிறோம்.
இதில் ஈடுபடும் மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இது பெரும் உதவியாக உள்ளது, அவர்கள் காவல்துறை பணிக்கோ அல்லது தீயணைப்பு துறை பணிக்கு செல்லும் பொழுது.
மாதம் ஒரு உள்ளூர் மற்றும் வெளியூர் அமைப்புகளுடன் இணைந்து 350க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை முகாம்களை தேசிய மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்களிப்புடன் ஒருங்கிணைத்துள்ளேன்.
1998, 2003, 2005, 2007 ஆண்டுகளில் கணினி பாடத்தில் மாநில அளவில் தேசிய பள்ளி மாணாக்கர்கள் முதலிடம் பெற்றுள்ளார்கள்.
பள்ளி பணிகளுக்கு இடையில் நீங்கள் தொடர்ந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், சமீபத்தில் நீங்கள் பங்களித்த குறிப்பிடத்தக்க சமூக பணிகள் பற்றி கூறுங்கள்?
கடலூர் வெள்ள நிவாரண நிதி, கேரளா வெள்ள நிவாரண நிதி, கஜா புயல் நிவாரண நிதி.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் மூலம் பெற்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களை நேரடியாக மன்னார்குடிக்கு வழங்கினார்கள், அந்த நிவாரண பொருள்களை காவிரிப்படுகை மாவட்ட பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் கொண்டு சேர்த்தோம்.
சென்னை உதவும் கரங்கள் அமைப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் பழைய ஆடைகளை தொகுத்து வழங்கி வருகிறோம்.
மற்றும் ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் ரூ.10000/- அளவிற்கு ஆடைகளை வாங்கி தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம்.
பள்ளி பணிகள், சமூக பணிகள், குடும்ப சூழலுக்கு என்று எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?
நான் செய்யும் பணிகளை அதிக ஆர்வத்துடன் எப்பொழுதும் கையாள்வதால், அதற்கான நேரம் தானாகவே அமைகிறது என்று சொல்வேன். இதற்கென தனியாக திட்டமிட்டு ஒதுக்குவதில்லை.
வார விடுமுறையிலும் சமூக பணிகளுக்கு எனது நேரத்தை ஒதுக்குகிறேன்.
மன்னார்குடியில் வளர்ச்சிக்கு நாம் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? மற்றும் தங்கள் தரப்பில் அதற்காக செய்துவரும் பணிகள் பற்றி கூறுங்கள்.
மன்னார்குடியில் நேசக்கரம் அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். அதன் மூலம் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10 – 12 குளங்களின் நீர்வழித்தடங்களை சரிசெய்து அந்த குளங்களில் நீர் நிரப்பும் வசதி செய்துள்ளோம், மற்றும் இதை தொடர்ந்து பிற பகுதிகளிலும் செய்து வருகிறோம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர வாய்ப்புள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு வேளாண் கல்லூரி வேண்டும்.
அரசினர் கலைக்கல்லூரிக்கு கூடுதலாக பாடத்திட்ட பிரிவுகள் (Additional courses) வேண்டும், அதிக வகுப்பறைகள் வேண்டும்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். உதாரணத்திற்கு தற்பொழுது இருதய தொடர்பான நோய்களை கையாள சிறப்பு மருத்துவர்கள் என்று யாரும் நம் தலைமை மருத்துவமனையில் இல்லை. இதை போன்று சிறுநீரக பிரிவு, மூளை நரம்பியல் பிரிவு சிறப்பு மருத்துவர்களும் தேவை.
இரத்த கொடையாளர்கள் நிறைய முன் வருகிறார்கள், நிறைய விழிப்புணர்வு பெற்றுள்ளோம். அதை சேமிக்க மன்னார்குடி தலைமை மருத்துவமனையில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மன்னார்குடி நகராட்சியின் ஒவ்வொரு பகுதிக்கும் பூங்கா, மற்றும் நடைப்பயிற்சி வசதிகளை செய்து தர வேண்டும். இதன் மூலம் வயதானவர்கள், குழந்தைகள் காலை அல்லது மாலை பொழுதை செலவிட நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவையில்லை. தற்பொழுது பள்ளி மைதானங்களும், பெரிய கோவில் சுற்று பகுதிகளுமே இதற்கு ஏற்றாற்போல் உள்ளது.
குளங்களை மீட்டெத்து, வேலி அமைத்து நடந்து செல்ல வசதிகள் செய்து தர வேண்டும்.
கும்பகோணம், பட்டுக்கோட்டை அளவில் நாம் வணிகம் பெறவில்லை. அதை ஆய்விற்கு உட்படுத்தி நாம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும்.
சவால்களாக நீங்கள் எதையெல்லாம் நினைக்கிறீர்கள்?
முன்னர் இருந்த ஆசிரியர், மாணவர் உறவு தற்பொழுது இல்லை. அவை மேம்பட வேண்டும்.
பாடத்திட்டங்கள் அதிகமாக இருப்பதால், மாணாக்கர்களுக்கு சோர்வு தான் ஏற்படுகிறது. சுமை தெரியாத அளவிற்கான பாடத்திட்டங்கள் தேவை.
கொரோனா காலத்தில், வசதி உள்ளவர்களுக்கு ஒரு கல்வியும், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு கல்வியும் உள்ளதால், அவர்களுக்கு இடையே ஒரு வித உளவியல் தாக்குதலை கொண்டு வந்துள்ளது.
ஒருபுறம் மக்கள் தரப்பில் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கிறது. பலர் நிதி உதவியும் செய்து உதவுகிறார்கள். ஊருக்கு செய்ய வேண்டும் என்று பலரும் தன்னால் ஆன பங்கை வழங்கி வருகிறார்கள்.
மறுபுறம் சமூக விழிப்புணர்வு கொஞ்சம் குறைவாக உள்ளது. 6ஆம் எண் வாய்க்காலை தூர்வாரிய பின்னரும் மீண்டும் காக்காமல் கழிவுகளை கொட்ட செய்கிறார்கள். விழிப்புணர்வு இருந்தால் இதை செய்யமாட்டார்கள். ஒருவகையில் இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்லவில்லையோ என்ற எண்ணமும் என்னுள் எழுந்துள்ளது.
மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் விதமாக நீங்கள் கூற நினைப்பது?
33 ஆண்டுகளாக இந்த ஆசிரியர் பணியை செய்கிறேன். ஆரம்பக்கட்டத்தில் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது கொஞ்சம் குறைந்து வருகிறது.
நம் மாவட்ட மக்கள் உழவு சார்ந்த தொழிலை அதிகம் நம்பியுள்ளதால், படிப்பவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்று பெரும்பாலும் பார்ப்பதில்லை. பலர் அந்த மாணாக்கர்கள் என்ன படித்தாலும் கண்டுகொள்வதில்லை.
பெற்றோரை அழைத்து வர சொன்னாலும் 10 – 15 நாட்கள் ஆகிறது. பல பெற்றோர்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் இருப்பதால், அதை தேடி ஓட வேண்டிய சூழலில் உள்ளார்கள். இதனால் அவர்களின் வீடுகளிலும் சுமூகமாக இல்லை என்பதே உண்மை.
அரசின் அறிவிப்பினால் மாணவர்களை கண்டிக்கவோ, நெறிப்படுத்தவோ இயலாத சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள். ஆக படிப்பவர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை கூடுதல் கவனம் செலுத்தி கேட்க வேண்டும். இதன் மூலம் தங்களை நெறிப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று அரசு சார்பில் பல நடவடிக்கைகளை பள்ளியில் எடுத்து வருகிறது. அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எந்தெந்த பாடப்பிரிவை ஏன் படிக்க வேண்டும் என்று பாடபுத்தங்களின் முதல் 2 பக்கங்களில் அரசு தெரிவிக்கிறது. அவைகளை அவ்வப்பொழுது படித்து புரிந்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி கல்வியுடன், நாட்டு நலப்பணி திட்டங்கள் போன்ற அமைப்புடன் மாணவர்கள் அதிகம் சேர வேண்டும். அவர்கள் சமூக அக்கறை உள்ள மாணவர்களாக மாற இதுவும் ஒரு வழிமுறையே.
பள்ளி கல்வி, சமூக கல்வியின் அவசியம்?
இரண்டுமே இரண்டு கண்கள் போன்று தான்.
பழைய மாணவர்கள் சந்திப்பு ஒன்று சமீபத்தில் நடந்தது, அதில் இத்தனை மாணவர்கள் மருத்துவர்கள், இத்தனை மாணவர்கள் பொறியாளர்கள் என்று பெருமையாக கூறுவார்கள்.
என்னுடைய பார்வையில், கல்விக்கூடம் என்பது இதை செய்ய தான், இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்பேன்.
நம் பள்ளியில் படித்த எத்தனை பேரை இந்த சமூகத்தின் சிறந்த மனிதராக உருவாக்கினோம் என்பதே என் கேள்வி.
அண்மைக்காலமாக, போக்குவரத்து நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை மாணாக்கர்கள் செய்யும் பொழுது இயல்பாகவே அவர்களுக்கு தலைமை பண்பை உயர்த்தவும் உதவுகிறது.
அரசிடம் இருந்து நீங்கள் எந்த வகையிலான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?
இதுபோன்று பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி பெற்று வருபவர்களை அரசுப்பணிகளில் இடம்பெற செய்ய முன்னுரிமை வழங்கலாம். பள்ளி, கல்லூரிகளில் சமூக பணிகளை செய்பவர்களை அதிகப்படுத்த கூடுதல் நிதியையும் அரசு தரப்பில் இருந்து ஒதுக்கலாம்.
நாட்டு நலப்பணி திட்ட அணியில் தற்பொழுது ஒரு பள்ளியில் 500 பேர்கள் படித்தாலும், 1000 பேர்கள் படித்தாலும் 50 பேரை தான் தேர்வு செய்ய இயலும். ஒரு பள்ளிக்கு ஒரு unit தான் கொடுக்கிறார்கள். இதை அரசு தரப்பில் கூடுதலாக வழங்கலாம்.
இறுதியாக “என் பள்ளியில் சமூக பணியில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், நேசக்கரம் அமைப்பிலும் பங்களித்து வருகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்று கூறி நமது ஆசிரியர் இராஜப்பா அவர்கள் விடைபெற்றார்.
—
படஉதவி: Vasa Photography