ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் நாம் நம் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது கட்சி சார்பற்ற ஒருவரை சுயேட்சையாக நிற்கும் ஒருவரை தேர்வு செய்யவும் வாக்களிக்கிறோம்.
அப்படி வெற்றி பெற்று பதவிக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்களின் பணிகள் என்ன என்பது பற்றியும், அரசு நம் தொகுதி மேம்பாட்டிற்கான நிதி எவ்வளவு அளிக்கிறது என்பது பற்றி எல்லாம் நம்மில் பலருக்கு முழுமையாக தெரியாது. அதைப்பற்றி எல்லாம் முழுமையாக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு ஆண்டு தோறும் தொகுதி மேம்பாட்டு நிதியாக 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
அது குறிப்பிட்ட பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட நிதி 1.5 கோடி ஆகவும் மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்காக மட்டும் வரையறுக்கப்படாத நிதி 1 கோடியாகவும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதலில் வரையறுக்கப்பட்ட 1.50 கோடி நிதிகாண பணிகளை அது எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றி பார்ப்போம்.
1.அரசுப்பள்ளிகள் உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 25 லட்சம்.
அதாவது தொகுதிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டுதல்,கழிவறை கட்டுதல்,புதிய வகுப்புகள் கட்டுதல் என இது போன்ற பணிகள் அடங்கும். உதாரணமாக ஒரு தொகுதியில் 50 அரசுப்பள்ளிகள் எனில் சராசரியாக ஒரு பள்ளிக்கு வருடம் 50,000ரூ வரும். ஆனால் இது கட்டாயம் அல்ல. ஏதேனும் மிக மோசமான நிலையில் உள்ள பள்ளிக்கு அதிக தொகை செலவு செய்யப்படும் போது, அந்த குறிப்பிட்ட ஆண்டில் வேறு பள்ளிகளுக்கு நிதி கிடைக்காமல் போகலாம். அடுத்து
2. அரசுப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் 20 லட்சம்.
மாணவர்களுக்கு நல்ல தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்(ro) வழங்க 20 லட்சம். 50 பள்ளிகள் என்றால் சரசாரியாக 40,000 ரூ. இந்த தொகை நிச்சயம் அனைத்து பள்ளிகளுக்கும் செலவிட வேண்டும். இதில் எந்த மாற்றம் இல்லை.இந்த 40,000ரூ தொகையை அந்த பள்ளி வருடம் முழுதும் ஆகும் குடிநீர் சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
3. அங்கன்வாடி நிலையங்களின் உள் கட்டமைப்பு மற்றும் குடிநீர் செலவிற்கு 20 லட்சம் ரூ
அரசுப் பள்ளிகளில் இயங்கும் சத்துணவு போடும் மையங்களான அங்கன்வாடி கட்டிட மேம்பாடு, குடிநீர் வசதி, எரி வாயு வசதி, சமையல் கூடங்கள் மேம்பாடு, அங்கன்வாடி குழந்தை நேய கழிப்பறைகள் கட்டுதல் போன்றவற்றிற்காக 20 லட்சம் ரூ.
4. குடிநீர் செலவிற்காக 30 லட்சம் ரூ.
குறிப்பாக கோடை காலத்தில் குடிநீர் வறட்சியை போக்க ஆழ் துளை கிணறு, கிணறு வெட்டுதல், தூர் வாறுதல், ஆழப்படுத்துதல், கைப்பம்புகள் அமைத்தல்,மோட்டார் மூலம் நீர் இறைத்தல், மோட்டார் இயந்திரங்கள் புதுப்பித்தல், நீர்த் தொட்டிகள் கட்டுதல் போன்ற பணிகளுக்காக 30 லட்சம் ரூபாய்.
5. இதர வரையறுக்கப்பட்ட பணிகளுக்காக 55 லட்சம்
இந்த நிதி குறிப்பிட்ட ஒரு பணிக்கு என்று இல்லாமால் அடுத்து நான் சொல்லப் போகும் பலதரப்பட்ட பணிகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது மற்றும் பல பணிகளையோ செய்யலாம்.
ஊரக நகர்ப்புற பகுதிகளில், சூரிய ஒளி மின் விளக்குகள் பொறுத்துதல், சரளை, கப்பி, தார் சாலைகளை மேம்படுத்துதல், மிகவும் பழுதடைந்த சாலைகளை புதுப்பித்தல் (அதாவது தார், ஜல்லி போன்றவற்றை பயன் படுத்தி நிரப்புதல்)
தெருக்கள் மற்றும் பாதைகளில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைத்தல்,
அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டடங்கள் கட்டுதல், சுற்று சுவர் எழுப்புதல், பூங்கா அமைத்தல்,உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், இடுகாடு அமைத்தல், பொது கழிப்பிடங்கள் கட்டுதல், பொது விநியோக கட்டிடம் கட்டுதல் என்று.
இது மாதிரி உள்ள பல தேவைகளுக்கு இந்த 55 லட்ச ரூ நிதியில் இருந்து செலவழிக்க முடியும். இவை அனைத்தையும் செய்வது இயலாத காரியம். ஆனால் இவற்றில் எது மிக மிக அவசியமோ அதை செய்யலாம்.
அடுத்து வரையறுக்கப்படாத நிதி 1 கோடி ரூபாயை பின்வரும் பணிகளுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன் சொந்த விருப்பத்தின் பேரில் செய்யலாம், பல பணிகள் உள்ளன. குறிப்பிட்ட சில முக்கிய பணிகளை பார்ப்போம்
1. பராமரிப்பு, புதுப்பித்தல் பணிகள்
2. ஆறு, குளம், குட்டை, ஊருணி தூர்வாறுதல்.
3. சரளை, கப்பி சாலைகள் அமைத்தல்.
4. உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்துதல்.
5.மத வழிபாட்டு இடங்களில் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த 1 கோடி ரூபாயை பயன்படுத்தலாம்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட பணிகளையும், ஏற்கனவே சிறப்பு நிதி ஒதுக்கப்பட்ட பணிகளையும் செய்ய முடியாது.
பாத்தீங்களா!! இவ்ளோ பணிகள் நம்ம சட்ட மன்ற உறுப்பினர்க்கு இருக்கு. இந்த காணொளியை பார்த்தவர்கள் அப்படியே கடந்து போகாமல் அனைவருக்கும் பகிர்ந்து அவரவர்கள் தொகுதியில் மேற் சொன்ன பிரச்சினைகள் இருந்தால் தாராளமாக உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். அப்படி செய்ய முடியாமல் போவதற்கு நியாயமான காரணம் இருந்தால் அதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அரசியல் விழிப்புணர்வு மட்டுமே நம்மை காக்கும் கருவி. எனவே ஒருவரின் பணி என்னவென்று தெரியாமலே கண் மூடித்தனமாக வாக்கு அளிக்கும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.
—
மன்னை செந்தில் பக்கிரிசாமி