Home>>அரசியல்>>தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த இனம் காக்க இருமுனைப் போராட்டம்!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த இனம் காக்க இருமுனைப் போராட்டம்!

நிரஞ்சன், மன்னார்குடி


தமிழக முதலமைச்சர் சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர E-Pass வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறி இருந்தார். ஏற்கனவே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்களால் தட்டிப்பறிக்கப்படும் இந்த வேளையில், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் 90% தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பில் இருந்து எழ தொடங்கியுள்ளது.

மக்கள் கருத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் பல கட்சிகள் போராட்டத்தில் பெரிய அளவில் இறங்கவில்லை என்றாலும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தனது குரலை இன்று தமிழகத்தின் பல நகரங்களில், மாநகரங்களில் ஆழமாக பதிவு செய்துள்ளது.

இனி தமிழ்நாடு அரசு – வெளி மாநிலத்தவரை அழைக்கக் கூடாது, தமிழர்களுக்கு வேலை வழங்க தனி வாரியம் அமைக்க வேண்டும், இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஆரியத்துவ வர்ணாசிரமக் கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (13.08.2020) தமிழ்நாடெங்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “இனம் காக்க இருமுனைப் போராட்டம்” என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.

சிதம்பரம், பெண்ணாடம், புதுச்சேரி, தஞ்சை, திருச்சி, சென்னை, மதுரை, செங்கிப்பட்டி, புதுக்குடி, குடந்தை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, கோவை, புளியங்குடி, திருச்செந்தூர், ஓசூர், மேலமைக்கேல்பட்டி, ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் பேரியக்கத் தோழர்கள், பொதுமக்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள் என பலர் பங்கேற்று கோரிக்கைப் பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.

தருமபுரி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். பல பகுதிகளில் கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.

கீழ்க்கண்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தார்கள்.

“தமிழ்நாடு அரசே! வெளி மாநிலத்தவரை மீண்டும் அழைக்காதே!
தமிழர்களுக்கு வேலை வழங்கத் தனி வாரியம் அமைத்திடு!
இந்திய அரசே! ஆரிய வர்ணாசிரமக் கல்விக் கொள்கையைக் கைவிடு!”.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Leave a Reply