Home>>அரசியல்>>ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் காப்பீடு நிறுவனங்கள்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் காப்பீடு நிறுவனங்கள்

ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவது மத்திய மாநில அதிகாரிகளுக்கு குறிப்பாக காப்பீடு நிறுவனங்களுக்கு பொழுதுபோக்காக உள்ளது என மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டிஆர்பி ராஜா அவர்கள் தனது Twitter மற்றும் Facebook பக்க கணக்குகளில் தெரிவித்துள்ளார்.


2019-2020 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை மற்ற மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டம் நிலுவையில் இருந்து வந்தது. திருவாரூரில் உள்ள 68 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் நிலவிவந்த குழப்பங்களே இந்த தாமதத்திற்கு காரணம். நேற்று திருவாரூர் மாவட்டத்திற்கு 201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளித்தாலும் இதில் அனைத்து கிராமங்களுக்கும் சரியான தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்ற பட்டியல் இன்னும் வந்து சேரவில்லை!!! மேலும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரே நாளில் எப்படி தொகை விடுவிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது‌! ஒருவேளை முதலமைச்சர் திருவாரூருக்கு 28ஆம் தேதி வருகை தருவதால் அவசரகதியில் அறிவிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது!

எனவே இது வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். மீண்டும் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நிச்சயமாக அதைப் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அரசு அதிகாரிகள் 68 கிராமங்களுக்கும் சேர்த்து காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கும் என்று நம்புவோம். முழுமையான பட்டியல் வந்தவுடன் எனது அடுத்த பதிவு வரும். அதுவரை நேரடியாக இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்தியோர் தங்கள் கணக்குகளை சரிபார்த்து CCE டேட்டாவில் எவ்வளவு கணக்கு எடுக்கப்பட்டுள்ளதோ அதே கணக்குப்படி உங்களுக்கு தொகை வந்திருக்கிறதா என்று சரி பார்த்து தயவுகூர்ந்து எனக்கு தகவல் அனுப்பவும்.

68 கிராமங்களில் ஏறத்தாழ 30 கிராமங்களுக்கு முழுமையான தொகையும் மீதம் உள்ள கிராமங்களுக்கு குறைக்கப்பட்ட தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல்கள் வருகின்றன. விழிப்புடன் இருந்து பயிர் காப்பீடு தொகையை முழுமையாக பெற தொடர்ந்து போராடுவோம்.

Leave a Reply