நிவர் புயல் வந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று பல தரப்பில் இருந்தும் செய்திகள் வருவதால் மக்கள் பதட்டத்தில் பல அத்தியாவசிய பொருள்களை காலை முதல் வாங்கி வருகிறார்கள். இதனால் பல இடங்களில் காய்கறிகள் முதல் மெழுவர்த்தி வரை பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது மற்றும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
மக்களின் பயத்தை, பதட்டத்தை பயன்படுத்தி பல வியாபாரிகள் அளவுக்கு அதிகமாக பணம் பார்க்கிறார்கள். பொது மக்கள் மிக அதிக அளவில் பொருள்களை வாங்கி குவிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் குறைந்தபட்ச அளவில் யாரேனும் வாங்க நினைத்தால் அதைக்கூட அவர்களால் வாங்க இயலாமல் போவதற்கு காரணம் அதிகப்படியான விலை உயர்வு, மற்றும் பொருள்களின் தட்டுப்பாடு.
இந்த அசாதாரணமான சூழலில் மக்களின் பதட்டத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை அநியாய விலைக்கு விற்கும் கடைகளின் மீது வர்த்தக சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நிவர் பற்றி வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளவற்றை தங்கள் பார்வைக்கு பகிர்கிறோம்.
நிவர் புயல் கரையை கடக்கும் இடம் புதுச்சேரி என்று தான் வானிலை மையம் சொல்கிறது. புயலின் திசையில், கடக்கும் இடத்தில் இதுவரை மாற்றம் இல்லை என்று தான் சொல்கிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்கிறார்கள்.
நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதீத கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
—
செய்தி சேகரிப்பு:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி