“தமிழரின் பலமும் வளமும் ஒன்று குவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கின்றோம். இந்த இமாலயச் சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள்”
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது.
ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.
மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டே மனிதகுலம் விடுதலை வேண்டி வீறுடன் போராடி வருகிறது. வீறுகொண்டெரியும் இந்தப் போராட்டங்களை அடக்கியொடுக்க ஆக்கிரமிப்பாளர்களும் அடக்குமுறையாளர்களும் காலங்காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டுவருகிறார்கள். முதலிற் போர் அரக்கனை ஏவுவதும் அது முடியாதுபோக, போராடும் இனங்களின் விடுதலைப் பாதையைத் திசைதிருப்பி, அவர்கள் போகும் வழிகளெல்லாம் பொறிகள் வைத்து, சமாதானச் சதிவலைக்குள் சிக்கவைத்து, காலத்தால் மோசம் செய்து, சமாதான மாயைக்குள் தள்ளிவிட்டு, அமைதியாக அழித்தொழிப்பதுவும் வரலாற்றிலே நீண்ட நெடுங்காலமாக நடந்துவருகிறன.
இந்த உத்தியை எமது சுதந்திர இயக்கத்திற்கெதிராகவும் செயற்படுத்திவிடலாம் எனச் சிங்கள அரசு கனவுகாண்கிறது. ஆனால், இந்த ஐந்து ஆண்டுக்கால அமைதி முயற்சியில் இந்த அக்கினிப் பரீட்சையில் நாம் எரிந்துபோய்விடவில்லை அழிந்துபோய்விடவுமில்லை. மாறாக, நாம் இந்த வேள்வித்தீயிற் புடம்போடப்பட்டு, புதிய புலிகளாகப் புதுப்பொலிவுடன் எழுந்துநிற்கிறோம்.
தமிழரின் பலமும் வளமும் ஒன்றுகுவிந்து, பலம்மிக்க, வலுமிக்க ஒரு பராக்கிரமச் சக்தியாக எழுந்துநிற்கிறோம். இந்த இமாலயச்சக்தியின் ஊற்றுவாய்கள் எமது மாவீரர்கள் என்பதை இந்நாளில் நான் பெருமையுடன் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
– தமிழ்த்தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்.
முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/shunaa.senthil/posts/1961143397383978
—
செய்தி உதவி:
சூனா செந்தில், திருவாரூர்.