Home>>அரசியல்>>மானிடத்திற்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை
அரசியல்இதரஉலகம்செய்திகள்

மானிடத்திற்கு எதிராக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை

கனடாவில் 2008 இல் நிறுவப்பட்டு அதிகாரபூர்வமாக 2010 இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசு சாரா / இலாப நோக்கற்ற அமைப்பு அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட் (ஏ.சி.சி.பி).தொலைநோக்குடன் உலகத்தின் அரசு நிறுவனங்கள், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. நிறுவப்பட்டதிலிருந்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சூழல்களை மேம்படுத்துவதை நோக்கி செய்யப்பட்டு வருகிறது. நல்ல ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கையை ஆதரிக்கும் அமைதியான சூழல்களை மேம்படுத்துவதில் அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இயங்கிவருகிறது ஏ.சி.சி.பி. இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் ACCP ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC-2013), உலக நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் முக்கிய குழு (UNWSD), ஐக்கிய நாடுகளின் பொது தகவல் துறை (UNDPI), ஐக்கிய நாடுகளின் தகவல் மையம் (UNIC) ) மற்றும் உலகளாவிய இளைஞர் பல்லுயிர் வலையமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக அங்கீகாரம் பெற்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐநா சபையினால்  அங்கீகரிக்கப்பட்ட The Alliance Creative Community Project (ACCP) சமீபத்திய முக்கிய முன்னெடுப்பாக  மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை கனடா அரசாங்கம் விதிப்பதை பரிந்துரை செய்கிறது.  இந்த முன்னெடுப்பு மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின்  பதுக்கலை தடுக்கவும் உதவும்.  சிறிலங்காவில் மக்கள் தொகைக்கு எதிராக பெரும் அட்டூழியங்களை 2009 போர் முடிவின் முன்னும் அதன் பின்னும் புரிந்த பின்வரும் நபர்களுக்கும் இதே நடைமுறைக்கு உட்டுத்தப்பட வேண்டியவர்கள் என வலிறுத்துகிறது . கீழுள்ள இந்தப்பட்டியலில் உள்ளவர்கள் ஐநா மனிதவுரிமைகள் சபை ஆணையாளரின் சிறிலங்கா மீதான  அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  மனிதவுரிமைகள் சபையின் உயர் தூதுவர் ஸெயிட் (Zaid)அவர்களின் பரிந்துரையின் படி பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் டேவிட் கமரோன் அவர்களது சர்வதேச சுதந்திர விசாரணைக்கான  முன்முயற்சியை பின் தொடர்ந்து இன்றைய கனேடிய அரசு  தடைகளை இவர்கள் மேல் முதற்கட்டமாக  நடைமுறைப்படுத்துவது உகந்தது எனவும் வலிறுத்துகிறது.

த அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட் அமைப்பு கனடிய வெளிவிவகார அமைச்சர் பிரன்சுவா பிலிப் சம்பேனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில், மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியானகே மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுருசிங்க, மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராய்ச்சி, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்ரூபவ் மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, கேர்ணல் ஜி.வி. ரவிப்ரியா, பிரிகேடியர் பிரசன்னா சில்வா, பிரிகேடியர் நந்தன உடவத்த, பிரிகேடியர் ஷாகி கலேஜ், அட்மிரல் வசந்த குமார ஜெயதேவா கரன்னகொட, அட்மிரல் திசாரா எஸ்.ஜி.சமரசிங்க, அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ்.திசானநாயக்க, சி.என்.வகீஷ்டா ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றது.

மேலுள்ள பட்டியலில் லெப். ஜெனரல். சரவேந்திர சில்வா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது 2009 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 70,000 மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த மனிதவுரிமை மீறல் குற்றத்தின் அடிப்படையில் 02/14/2020  அன்று அமெரிக்க அரசு தடைகளை ஏற்கனவே விதித்துள்ளது.

மேலுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் இன்றைய சிறிலங்காவின் அரச அதிபரும் அன்றைய போரின் போது  பாதுகாப்புச்செயலருமாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைகளின் கீழ் பணிபுரிந்தவர்கள். அன்றைய அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று தலைமை அமைச்சராக இருக்கிறார். மேல் குறிப்பிட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைய அரசில் உயர் அதிகார பதவிகளில் உள்ளனர். பின்னோக்கி பார்க்கும் பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகளின் படி இன்றைய சிறிலங்கா அரசில் பதவி வகிக்கும் அனைவரும் தமிழரின் குருதியில் தோய்ந்த கைகளின் சொந்தக்காரர்கள் என்பது தெளிவாக புலப்படுகிறது.  சிறிலங்கா அனைத்துலகுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்கியது மட்டுமல்லாது ஐநா மனிதவுரிமை மன்றத்தின் 30/1 தீர்மானத்தின் கடப்பாடுகளையும் புறம் தள்ளியுள்ளது.  இந்த அனைத்துலக ஒப்பந்தங்களையும் மனிதவுரிமைகளையும் மதிக்காத போக்கின் காரணமாக கனடா சிறிலங்கா அரசின் மீது தடைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான பயணத்தடை, சொத்து முடக்கம், நிதி மற்றும் வணிக தடை போன்றவற்றை  விதிப்பது தொடர்பாக நாம் கனேடிய அரசுடன் இணைந்து பணியாற்ற அணியமாக உள்ளோம்.

கனடாவில் 2017இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்டங்களின் அடிப்படையிலும், மனிதத்திற்கு எதிரான குற்ற மற்றும் போர் குற்ற சட்டத்திற்கு அமைவான குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரமும் பயணங்களுக்கான மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதத்திற்கு எதிரான குற்ற மற்றும் போர் குற்ற சட்டத்தின் படி கனடாவினது குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டவாக்கத்தின் பிரிவு 35(1)(a) அல்லது (b) மூலம் இவர்கள் கனடாவுக்குள் நுழைவது மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சட்டவாக்கப்பிரிவு ” ஓர் அரச சேவைகளின் உயர் அதிகாரி சட்ட துணைப்பிரிவு 6(3)-(5) இன் படி  பயங்கரவாதத்தில் அல்லது திட்டமிடப்பட்ட  பெரும் மனிதவுரிமை மீறல்களிலோ இனப்படுகொலையில்  ஈடுபட்டவராகவோ  அல்லது  ஈடுபடுபவராகவோ அமைச்சர் கருதும் பொருட்டு” இவர்கள் கனடாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.

மேலும் சிறிலங்காவினது போர் குற்றவாளிகளை ரோமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  கனேடிய அரசு தலையிட்டு கடந்த பதினொரு ஆண்டுகளாக தமது உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்று நம்புகிறோம். கனடா மனிதவுரிமைகளை மதிக்கும், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் நாடு. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் சிறிலங்காவின் போர்குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கும் படியும் கனேடிய குடிமக்களாக கனேடிய அரசை கேட்டுக்கொள்கிறோம். கனேடிய அரசு தலையிட்டு மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மீறல்களை நிறுத்தி உலகத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது மிகவும் பாராட்டப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை எனவும் தனது முன்னெடுப்பை கனடிய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்கிறது.

கனடா மனித உரிமைகளை மதிக்கும், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் நாடு என்ற வகையில், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப்பதற்காக கனேடிய அரசு இந்த விடயத்தில் தலையீடுகளைச் செய்து உலகத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இராஜி பற்றர்சன்
இயக்குநர்
ACCP பெண்கள் ஆளுமை பிரிவு

-செய்தி சேகரிப்பு
-இளவரசி இளங்கோவன்

Leave a Reply