இந்திய பிரதமர் மோதியின் அரசு தனியார் நிறுவனங்களுக்கானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமதிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ள சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகம். காட்டுப்பள்ளி துறைமுகத்தை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்தது எல் அண்ட் டி நிறுவனம். இப்போது அந்த நிறுவனத்திடம் இருந்து 97 சதவித பங்குகளை வாங்கியுள்ளது அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார நிறுவனம்.
சென்னைக்கு அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது.இந்தத் துறைமுகத்தின் 97 விழுக்காடு பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அதானி குழுமம் வாங்கியுள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகம் இந்தியாவின் நவீன துறைமுகங்களில் ஒன்று தமிழகம், கர்நாடக மாநிலங்களின் ஏற்றுமதிக்கும் இம்மாநிலங்களுக்கான இறக்குமதிக்கும் வாயிலாக இருக்கிறது. இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் டியுஇ சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.
எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் இப்பகுதியில் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க உதவும். அத்துடன் மாநில அரசின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதானி குழும் தெரிவித்துள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013- ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உ.ள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை.
இந்த துறைமுகம் தொடர்பாக ‘தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம்‘ நிபுணர் மதிப்பீட்டுக் குழு (The Expert Appraisal Committee (EAC)) பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. ஆனால், தற்போது அந்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது.இந்நிலையில் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வரும் 22ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது அதானி குழுமம்.
சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமதிற்கு முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விழிஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் தாரைவார்க்கபட்டுள்ளன.
ஏற்கெனவே அதானி குழுமம் கேரள மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. விழிஞ்சியம் துறைமுகம் சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகத்தை மேம்படுத்த ரூ.4089 கோடியை செலவிடுகிறது
இந்த நிலையில் தமிழக நிலப்பகுதியில் உள்ள துறைமுகத்தையும் அது சார்ந்த வர்த்தகத்தையும் அதானிக்கு ஒப்படைப்பதை சூழலியல் ரீதியாகவும் தமிழகத்தின் பொருளாதார நலன் அடிப்படையிலும் நாம் எதிர்க்க வேண்டும்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்
மீன்வளம் வெகுவாகக் குறைந்து ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் உள்ளிட்ட 80 தமிழக – ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
ஏற்கனவே, சென்னை காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்தினாலும், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாகவும், கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில கிமீ- களாக இருந்த கடற்கரை தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கியுள்ளது.
மழைக் காலங்களில், வெள்ள வடிகாலாகச்” செயல்பட்டு வரும் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், சில நூறு மீட்டர்களாக சுருங்கும். பின்னர், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.
காமராஜர் துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களின் விளைவாக எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்துவிட்டன.
தற்பொழுது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.
காலநிலை மாற்றம், கடல்நீர்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களாலும் சென்னை தொடர்ந்து ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் மேலும் சூழல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, அதானித் துறைமுகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், எண்ணூர்-பழவேற்காடு பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினரின் வாழ்வுமுறை முற்றிலுமாக சிதைக்கப்படும்.
அதானி குழுமத்தின் இலாபவெறிக்காக தமிழகத்தின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா காலமாக இருப்பதால், கருத்து கேட்புக்கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ள முடியாது. இதனை பயன்படுத்தி, அதானி குழுமத்திற்கு சாதகமான முடிவுகளை அக்கூட்டத்தில் நிறைவேற்ற ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டுவார்கள்.
காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் என்பதே நாசக்கார திட்டமாக இருக்கும் நிலையில், கருத்துக்கேட்பு கூட்டம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்.எனவே மோசடியான இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் மற்றும் சுற்றுசூழல் அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒரு திட்டம் கொண்டு வந்து அது பற்றிய புரிதல் மக்களை சென்றடையுமுன்னரே தொலைநோக்கு கண்ணோட்டமில்லாமல், விளைவுகளை பாராமல் , மக்களின் நலனை பேணாமல் , தனியார் நிறுவனங்களின் இலாபநோக்கத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நாட்டின் இயற்கை வளத்தை சூறையாடி வாழ்வாதாரத்தை சிதைக்கும் அடுத்தடுத்து திட்டங்களை அறிவிப்பதே நடுவண் அரசின் கொள்கையாக இருப்பது வேதனைக்கு உரியது.
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
கனடா