Home>>அரசியல்>>தமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது
அரசியல்உலகம்செய்திகள்

தமிழினப்படுகொலை பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 உத்தியோகபூர்வமாக கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டது

வாழ்த்துகள்!

கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழ் இன அழிப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது

கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக்கும், கடின உழைப்புக்கும், அதன் கலாசாரத்துக்கும் கூடிய பங்காற்றும் சமூகங்களில் ஒன்றாக தமிழ் சமூகம் விளங்குகிறது. இங்கு வசிக்கும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிலிருந்து தப்புவதற்காக ஒன்ராறியோ மாநிலத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இன அழிப்பு நடைவடிக்கையினால் இவர்களின் குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. சொல்லொணாத் துயரங்களைக் கடந்து இன அழிப்பிலிருந்து தப்பி உயிர் வாழ்வதற்காக பெருமளவிலான தமிழர்கள் ஒன்ராறியோ மாநிலத்துக்கு வந்தடைந்தனர். குடும்பங்களிலிருந்து பிரிவதும், தமது உறவினர்களை இழப்பதும் ஒரு சமூகத்தில் பாரிய உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

வியாழக்கிழமை, மே 6, 2021 அன்று ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவியற் கிழமைக்கான சட்டமூலத்தை மே 11-17 வரையான நாட்களை ஈழத்தில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலை பற்றிய கற்கை நெறியினூடான விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 ஏற்கனவே இருமுறை ஏகமனதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் இரு வாசிப்புகளிலும் ஒன்ராரியோ சட்ட மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இன்றுமூன்றாவது வாசிப்புக்கு கொண்டுவந்திருந்தார். இந்நடைமுறையினை அடுத்து மேற்படி சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், தென்னாசியாவுக்கு வெளியே இவ்வாறு ஒரு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள முதலாவது தீர்மானம் இதுவாகும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழின அழிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளது என்பதை அங்கீகரித்து அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதுவே உலகின் முதலாவது வரலாற்று நிகழ்வாகும். இது ஒன்ராறியோவில் வாழும் 350,000 இற்கும் அதிகமான தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும். மேற்படி 104 எனும் சட்டமூலமானது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை அங்கீகரிப்பதுடன், அதில் கொல்லப்பட்ட உயிர்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், பாதிப்புக்குள்ளாகி வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் ஊட்டுகிறது. அத்துடன் துன்புறுத்தப்பட்ட தமிழ் மக்களை ஆற்றும் ஒரு வழியாக இருக்கும் எனவும் இது கருதப்படுகின்றது.

சட்டமூலம் 104ஐ கொண்டுவந்தவரும், ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் இது குறித்து “இது கனடாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் படிக்கல்லாகும். மேலும், நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவையிட்டு தமிழ் சமூகத்திற்கு மீண்டும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான கல்வி கற்பிப்பதற்கு ஏதுவான சட்டமொன்றை நாங்கள் இணைந்து நிறைவேற்றியுள்ளோம்” என தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு நடத்தப்பட்ட அநீதியை உற்றுநோக்கி, தமிழ் மக்கள் அனுபவித்து வரும் உளவியல் தாக்கங்களையும் கூர்ந்து அணுகி, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது ஓர் இன அழிப்பு என்ற வகையில் சட்டமூலம் 104ஐ ஒன்ராறியோ மாநிலம் கொண்டுவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், அது எதிர்கொள்ளும் உளவியல் தாக்கங்களிலிருந்து மீண்டு வரவும், தனது இயல்பு வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கும் நடைபெற்ற இன அழிப்பினை அங்கீகரிப்பது முக்கியமானதொன்றாகும்.

“கடந்த 2014 ஆம் ஆண்டில், ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ ஆக அறிவிக்கும் சட்டமூலத்தினை கன்சர்வேட்டிவ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ரொட் ஸ்மித் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் ரொட் ஸ்மித் அவர்கள் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்தார். மேற்படி சட்டமூலமான ‘தமிழ் மரபுத் திங்கள்’ சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு ஐந்து முறை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. அந்த வகையில், ஸ்காபரோ – றூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் 104ஐ முதல் அறிமுகத்திலேயே அங்கீகரித்து சட்டமூலமாக்கிய முதல்வர் ஃபோர்ட் அவர்களுக்கும் மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் அவர்களது தலைமைத்துவத்துக்காக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின் நின்று உழைத்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவை, மற்றும் இதர தொண்டர்கள் அனைவரிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

உலகெங்கிலும் கிட்டாத ஒரு வெற்றி தமிழர்க்கு கனடிய மண்ணில் ஒரு அங்கீகாரமாக தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக கிட்டியதில் கனடியத் தமிழராக கனடிய மண்ணிற்கு நன்றி கூறுகிறோம்!

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்,கனடா

Leave a Reply