Home>>அரசியல்>>அனைத்து மக்களுக்கான அரசாக மாறுமா இந்த அரசு?
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

அனைத்து மக்களுக்கான அரசாக மாறுமா இந்த அரசு?

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை போக்க தமிழக முதல்வர் மக்களிடம் மனம் திறந்து நிதி கேட்டு உள்ளார். நேற்று வரை வந்த மொத்த நிதி 69 கோடி ரூபாய் தான். அதுவும் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் கொடுத்த கோடிக்கணக்கான நிதியை சேர்த்துதான். அதுவும் இல்லை என்றால் பெரிதாக ஒன்றும் சேர்ந்து இருக்காது. இதற்கு காரணம் தான் என்ன?

பெரும்பான்மை மக்களுக்கு நீண்டகாலமாகவே அரசின் நேர்மை மீது நம்பிக்கை போய்விட்டது. ஊழல் ஊழல் ஊழல் எங்கு பார்த்தாலும் ஊழல் அது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்புறம் எந்த நம்பிக்கையில் அவர்கள் பணம் கொடுப்பார்கள்??

எனவே அரசு மயிலே மயிலே இறகு போடு என்று கெஞ்சாமல் அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

கடந்த ஒரு வருட காலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. அப்படி இருந்தும் அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கடும் நிதி நெருக்கடியிலும் முழு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மட்டும் அல்ல. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான்.

ஒரு சிறிய கணக்கு – தமிழ் நாடு முழுதும் உள்ள அரசு ஆசிரியப் பெருமக்கள் தோராயமா 2 லட்சம் பேர் வைத்துக்கொள்வோம். கடந்த ஒரு வருட காலமாக அவர்களுக்கு பணி இல்லை. அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 20% பிடித்து இருந்தால் கூட குறைந்த பட்சம் ரூ.6000/- வந்து இருக்கும். ஒரு மாதத்தில் மட்டும் 120 கோடி மிச்சமாகும், 12 மாதங்களில் சுமார் 1400 கோடி மிச்சமாகும்.

அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சம்பளம் பாதிக்கும் கீழே குறைத்து இருந்தால் மாதம் 1.5 கோடி, இந்த ஒரு வருடத்தில் 18 கோடி.

இப்ப கூட செய்யலாம். இந்த நிலைமை சரியாகும் வரை அரசு ஆசிரியர்கள், இதர அரசு ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இவர்கள் வருமானத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் அதன் மூலம் நிதி வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் இதை ஒரு அரசு செய்ய வேண்டுமென்றால் அவர்கள் வாக்கு அரசியலுக்கானவர்களாக இருக்கக் கூடாது. இந்த மண்ணிற்கானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அமைப்பின் வாக்குகள் நமக்கு விழாமல் போய்விடுமோ என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

முதல்வன் படத்தில் ரகுவரன் ஒரு வசனம் சொல்வார் நான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் நான்கு கால்கள் என்னுடையது அல்ல. சாதிக்காரர்கள், கட்சிக்காரர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் இவர்களுடையது என்று.

அதனால் தான் தமிழ்நாட்டிற்கு வரும் முதல்வர்கள் அனைவரும் ரகுவரன் போலவே உள்ளார்கள். புகழேந்தி போன்றவர்கள் இங்கு வர வாய்ப்பே இல்லை.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல வாய்ப்யை மக்கள் வழங்கி உள்ளனர். எனவே வெறும் வாக்கு அரசியலை மட்டுமே மனதில் வைத்துக்கொள்ளாமல், மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply