Home>>சுற்றுசூழல்>>மூத்த மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசன் மறைவு!
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

மூத்த மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசன் மறைவு!

மூத்த மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசன் அவர்களின் மறைவிற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் இரங்கல்!

மார்க்சிய அறிஞர் – சூழலியல் செயல்பாட்டாளர் மூத்த தோழர் எஸ்.என். நாகராசன் இன்று (24.05.2021) காலை மறைவுற்றார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொடிய கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த அருமை தோழர் எஸ்.என். நாகராசன் சிகிச்சை பலனின்றி காலமானார் அவருக்கு அகவை 94.

நக்சல்பாரி எழுச்சியையொட்டி உருவான மார்க்சிய லெனிய கட்சியை தமிழ்நாட்டில் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் எஸ்.என். நாகராசன் ஒருவர்.

அவ்வமைப்பின் தொடக்க காலத்திலேயே தேசிய இனச் சிக்கலின் முகாமையான பாத்திரத்தை உணர்ந்த தோழர் எஸ்.என். நாகராசன் இந்திய துணை கண்டம் முழுமைக்கும் ஒரே நடுவண் தலைமை வழிகாட்ட முடியாது. என்பதை 1969 லேயே தனது கட்சிக்குள் ஆவணமாக முன்வைத்து கருத்துப் போராட்டம் நடத்தினார்.
ஒவ்வொரு தேசிய இன மாநிலத்திற்கும் தனித்தனி கட்சி அமைத்து இந்திய நாட்டிற்குள் ஒருங்கிணைப்பு குழுவை நிறுவிக்கொள்ளலாம் என்ற அவர். இந்தியா முழுவதுக்கும் ஒற்றை தலைமை வழிகாட்ட முடியாது என வலுவாக வாதிட்டார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது முகாமையான களம் என்று உணர்ந்த தமிழ்நாட்டு முன்னோடி மார்க்சியராக எஸ்.என். நாகராசன் திகழ்ந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு களத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதில் கடைசிவரை பணியாற்றினார்.
நமது தமிழர் கண்ணோட்டம் இதழிலும், நமது சமூக ஊடகங்களிலும் வெளிவரும் கருத்துகளுக்கு அவ்வபோது எதிர்வினையாற்றி மின்னஞ்சல் அனுப்புவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். பலதரப்பு செயல்பாட்டாளர்களுடன் இடையறாது உரையாடல் நடத்தி வந்தார்.

மறைந்த தோழர் எஸ்.என். நாகராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Leave a Reply