Home>>இந்தியா>>தாய்மொழியில் தொழிற்நுட்ப படிப்பு
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

தாய்மொழியில் தொழிற்நுட்ப படிப்பு

தற்பொழுது தமிழ் உள்ளிட்ட 7 மாநில மொழிகளில் பொறியியல் படிப்பு படிக்க அகில இந்திய தொழிற்நுட்ப கழகம் அனுமதி அளித்து உள்ளது.

எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் அவரவர் தாய்மொழியில் கற்கும் போது அதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும். அந்த துறையில் சிறப்பாக முன்னேறவும் முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

காலம் காலமாக ஆங்கில வழி கல்வியை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரே ஆயுதம் கல்லூரிகளில் ஆங்கிலம் தெரியாமல் படிப்பது மிகக்கடினம், எனவே பள்ளியில் இருந்தே ஆங்கில வழிக்கல்வி அவசியம் என்று நம் மூளையில் விதைக்கப்பட்ட பெரும் மூடநம்பிக்கை இந்த ஆங்கில வழி திணிப்பு. ஆங்கிலத்த்தை ஒரு மொழியாகவே சிறப்பாக கற்றால் போதுமானது.

சப்பானியர்கள், கொரியர்கள், சீனர்கள், செர்மானியர்கள் என பலர் அவர்கள் தத்தம் தாய்மொழியில் தொழில்நுட்பங்களை படிப்பதால் தான் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்துகிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் இந்திய ஒன்றியத்தில் இருந்து ஆங்கில மொழியில் சிறப்பாக உரையாடும் பலர் அவர்கள் நிலத்திற்கு சென்றாலும், அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.

மேலும் குறிப்பிடப்பட வேண்டும் என்றால் பல வளர்ந்த நாடுகளில் அவர்களின் தமிழ் மொழியில் தான் கல்வி வழங்கப்படுகிறது. மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும் அவர்கள் மொழியில் தான் உருவாக்குகிறார்கள். அதே நேரம் பிற நாடுகளில் கண்டுபிடிக்கவும் பொருள்களை பற்றிய தகவல்களை அறிய அது தொடர்பான ஆய்வு கட்டுரைகளை தங்கள் மொழிகளில் மொழிபெயர்த்து சேமித்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் அந்த நாட்டில் உள்ள பிற ஆராய்ச்சியாளர்களுக்கும் அது பெரிதும் உதவுகிறது.

சப்பானியர்கள் பெருமையாக சொல்லிக்கொள்வது “எனக்கு எங்கள் மொழி தெரியும், அதே நேரம் ஆங்கிலம் எழுத பேச தெரியும் ஆனால் பெரிய அளவில் புலமையெல்லாம் கிடைத்து” என்று. பெரும்பாலும் இன்றும் அவர்களின் கணினியில் உள்ள செயலிகள் பல, அவர்கள் மொழியில் தான் இருக்கும்.

தவிர இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மொழி ஒரு பிரச்சனையே அல்ல நமக்குத் தெரிந்த மொழியை நாம் விரும்பும் மொழிக்கு எளிதில் மாற்றிக் கொள்ள முடியும். அடிப்படை அறிவு தான் நமக்கு முதன்மை. அந்த அறிவு தாய்மொழியில் படிக்கும் பொழுதுதான் எளிதாக ஒருவர் பெற முடியும்.
தாய் மொழியில் சிறந்து விளங்குபவன் ஏன் உலகில் வேறு எந்த மொழியையும் எளிதாக கற்க முடியும் என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை கிராமங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மிக அறிவார்ந்த மாணாக்கர்கள் கூட பொறியியல் படிப்புகளில் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் ஒருவித தாழ்வு மனப்பான்மையில் அவர்கள் அறிவு வெளிப்படாமல் போய்விடுகிறது. பலர் மனம் உடைந்து படிப்பை நிறுத்தும் சூழலுக்கும் வருகிறார்கள். இந்த தாழ்வு மனப்பான்மை போக்க அவர்களின் உண்மையான அறிவு வெளிப்பட தாய்மொழிக் கல்வி அவசியம்.

எனவே இது மிகத்தாமதமான முடிவாக இருந்தாலும் மிகத்தேவையான முடிவு. இந்த நல்ல முடிவை வெகு விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலமே ஆங்கில வழிக்கல்வி, தனியார் பள்ளி மோகம் குறைய வாய்ப்புள்ளது.

தொழிற்நுட்ப கல்வியில் தொழிற்நுட்பத்தை கற்போம். பிற மொழியை தேவைக்கு ஏற்ப தனியாக கற்போம் அதற்கு இன்றைய தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சி மிக பெரிய அளவில் உதவி வருகிறது.

நம்மவர்களை படிக்க செய்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு அங்கு வளர்ச்சியடைகிறது, இங்கு ஏன் வளர்ச்சி அடையவில்லை என்று கூறுவதை விட, அவர்களுக்கு உரிய கல்வியை, அவர்களின் மொழியிலேயே கொடுத்து அவர்களுக்கான வாய்ப்புகளை இங்கேயே கொடுத்தால் மட்டுமே தமிழகம் மேலும் பன்மடங்கு முன்னேறும்.

தயக்கமின்றி தாய்மொழியில் படிப்போம், தரணியை ஆள்வோம்.


கட்டுரை:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

பட உதவி:
Daniel McCullough on Unsplash

Leave a Reply