Home>>அரசியல்>>போரா?? அக்கப்போரா??

விக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சொல்வார். “ஒருத்தன் பொருளை இங்க தொலைச்சுட்டு அங்க தேடிக்கிட்டு இருந்தானாம். ஏன்டா இங்க பொருளை தொலைச்சுட்டு, அங்க போய் தேடுறன்னு கேட்டதுக்கு, இங்கதான் வெளிச்சமா இருக்கு. அங்க இருட்டா இருக்குன்னு சொன்னானாம்”

இதுல வெளிச்சத்துல ஏன் தேடுறான் ன்னு காரணம் விட்டு இருக்கும். அது என்ன காரணம்னா, வெளிச்சத்தில தேடுனாத்தான் நாம தொலைச்ச பொருளை தேடிக்கிட்டு இருக்கோம்ன்னு பாக்குறவனுக்கு தெரியும். சரி இவன் உண்மையா தேடிகிட்டு இருக்கான்னு பொருளோட உண்மையான முதலாளிக்கு தெரியும். இருட்டுல தேடுனா எப்படி தெரியும் அடுத்தவங்களுக்கு. ஆக பொருள் கிடைக்க வேண்டும் என்பதை விட, பொருளைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தை பதிய வைக்க வேண்டும். இதுதான் எண்ணம்.

எந்த காலத்திலும் பொருள் கிடைக்க போவதில்லை என்ற உண்மை தேடுபவனை தவிர யாருக்கும் தெரியாது. ஏறக்குறைய காஷ்மீர் பிரச்சனையும் அது போலத்தான்.

காஷ்மீரின் உண்மை பிரச்சினை என்ன? ஏன் காஷ்மீருக்காக தொடர்ந்து போர்கள் நடைபெறுகின்றன?? காஷ்மீர் மக்களின் நிலைப்பாடு என்ன?? அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன ?? போன்றவை சாமான்ய மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

என்னதான் காஷ்மீர் பிரச்சனை??

நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியாவை ஒரு நாடாக பிரிட்டிஷார் அறிவித்தார்கள். அவ்வாறு அறிவித்த இந்தியாவில் காஷ்மீர் இருக்கவில்லை. பாகிசுதானை ஒரு நாடாக அறிவித்தனர். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானிலும் காஷ்மீர் இருக்கவில்லை.

அது தனி நாடாகத்தான் விடுதலை பெற்றது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட காஷ்மீரின் 33 சதவிகிதம் நிலப்பரப்பு இன்று பாகிஸ்தானில் உள்ளது. 67 சதவிகிதம் நிலப்பரப்பு இந்தியாவில் உள்ளது.

காஷ்மீர் தனது நாட்டின் பகுதி என்று இந்திய அரசு கருதினால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை -ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று இந்திய அரசால் குறிப்பிடப்படும் பகுதியை – மீட்பதற்காக ஏன் பாகிஸ்தானுடன் போரிட்டு மீட்கவில்லை??

அதுபோல் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம் என்று பாகிஸ்தான் உண்மையில் கருதினால் இந்தியாவால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் கடமை அந்த நாட்டுக்கு உள்ளதல்லவா? எத்தனையோ போர்களை இந்தியாவுக்கு எதிராக நடத்திய பாகிஸ்தான், காஷ்மீர் எங்கள் நாட்டைச் சேர்ந்தது; அதைப் போரிட்டு மீட்கப் போகிறோம் என்று அறிவித்து போர் தொடுத்து இருக்க வேண்டும
ஏன் செய்யவில்லை??

இரு நாடுகளுமே தங்கள் பகுதி என்று வாதிட்டாலும் ஏன் போர்ப்பிரகடனம் செய்ய முடியவில்லை??

இரு நாடுகளுக்கும் காஷ்மீர் எப்படி தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டது என்ற வரலாறு தெரியும் என்பதே இதற்குக் காரணம்.

காஷ்மீர் பிரச்சனையின் வரலாறு:

இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனால், அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்பநிலை நீடித்தது.

பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கனவே உள்ள மாநிலங்களில் ஒன்றாகி, தனித் தன்மையை இழக்க வேண்டி வரும் என்றும், மன்னர் ஹரி சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, தனது பூர்வீகமான காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என விரும்பினார். இதனை கௌரவப் பிரச்சனையாகக் கருதினார். மேலும் காஷ்மீர் இந்தியாவிற்கு இயற்கை அரண் என்ற காரணத்தாலும் அதை இழக்க விரும்பவில்லை.

காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதில் விருப்பம் காட்டிய பாகிஸ்தான் தனது இராணுவத்தை நிலைநிறுத்தியது. இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரி சிங். இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupied Kashmir-POK)) என்று இந்தியா கூறுகிறது.

பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இருநாடுகளும் போட்டியிட்டன.

இந்த விவகாரம் 1948-ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21.4.1948 அன்று தீர்மானம் (எண்.47) நிறைவேறியது. இதன்படி இருநாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஊடுருவிய பகுதியிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். ஆனால், இது நிறைவேறவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐ.நா. சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஐ.நா. சபையில் செய்துகொண்ட ஒப்பந்தம்.

(ஆனால் ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை)

வாக்கெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதிமொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் வாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.

இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது வாய்மொழியாக மட்டுமில்லாமல் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு அந்த வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டன. இன்று வரை அரசியன் சாசனப் புத்தகத்தில் இது இருந்து வருகிறது.

(இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957 இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.)

370 வது பிரிவு சட்டம் என்ன சொல்கிறது??

மாநில சுயாட்சி.

இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது. மேலும் இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது போன்ற பல சலுகைகளோடு இயற்றப்பட்ட சட்டம்.

1949 சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம் என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு – காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

காஷ்மீருக்கு தனியாக தேசியக் கொடியையும் இந்தியா ஏற்றுக் கொண்டது. இப்படி இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும், சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும்.

காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார். ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல; பிரதமராக) 1951ல் சேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் குடியரசு தலைவரானார்.

ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும், முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது. பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது.

ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின்படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை. நேருவும், பட்டேலும் ஒப்புக் கொண்ட விஷயத்துக்காகத் தான், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், காஷ்மீர் தனி நாடு வேண்டும் என போராட்டம் உருவெடுத்தது.

1953 ல் இன்றைய உமர் அப்துல்லாவின் பாட்டனாரும், பரூக் அப்துல்லாஹ்வின் தந்தையுமான காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று கடுமையான போராட்டம் நடத்தியது.

காஷ்மீரின் நூறு சதவிகித மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பவில்லை என்று உறுதிபடச் சொன்ன கால கட்டம் அது. பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி சேக் அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது.

இதன் பின்னர் 370வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது. பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது.

1948ல் காஷ்மீரை இந்தியாவோடு, இணைத்துக் கொள்ளும் போது ஒப்புக் கொண்டு எழுதப்பட்ட 370வது ஷரத்தின் பல பகுதிகளை இந்திய அரசு படிப்படியாக நீக்கிவிட்டது. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதைச் செய்யாவிட்டால் இணைக்கும் போது மன்னருக்கும் காஷ்மீர் மக்களுக்கும் அரசியல் சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்.

இரண்டையும் இந்திய அரசாங்கம் செய்யவில்லை. இது தான் காஷ்மீர் மக்களின் கோபத்துக்குக் காரணம். அது மட்டுமின்றி இதற்காகப் போராடும் மக்களை இராணுவச் சட்டம் மூலம் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்துடன் இராணுவத்தை இறக்கி போர்க்களமாக்கி இருப்பதும் இந்திய அரசு செய்து வரும் மிகப்பெரும் தவறாகும்.

பாதுகாப்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாக இராணுவத்தைக் குவிப்பது, மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைப்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் இளைஞர்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்குவது என 370 ஆவது பிரிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் காஷ்மீரில் அதிகம். காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய உரிமைகளை அவ்வப்போது இந்திய அரசு பறித்தே வந்துள்ளது.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களை இலங்கையில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தின் மீது சர்வதேச நீதிவிசாரணை தேவை என்ற கோரிக்கையை சிங்கள அரசு ஏற்க மறுப்பதற்கும், இந்திய அரசின் காஷ்மீர் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு இல்லை.

இந்தியாவுடன் இருக்க மாட்டோம் என்று ஒருமித்து அவர்கள் முடிவு செய்தால் அத்தகையோர் நமது நாட்டுக்குத் தேவையில்லை. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியினர் பாகிஸ்தானோடு இருக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து முஜிபுர் ரஹ்மான் என்பவர் தலைமையில் புரட்சி செய்த போது இந்தியாவும் தலையிட்டு பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆக்கியது.

பாகிஸ்தானுடன் அம்மக்களும் சேர விரும்பவில்லை என்றால் தனிநாடாக இருப்பது சரிதான் என்று உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன. காஷ்மீர் என்ற பெயரைச் சொல்லி பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகின்றன. உலக அளவில் மனித உரிமை தொடர்பான பல விமர்சனங்களைச் சந்திக்கிறோம்.

உள்நாட்டு மக்களை எத்தனை ஆண்டுகள் இராணுவத்தை வைத்துக் கொண்டு ஆள்வது? என்றெல்லாம் பொறுப்போடு சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது நல்லது. நேருவும், பட்டேலும் ஒப்புக்கொண்டதும் பாகிஸ்தானும் ஐநாவும் ஏற்றுக்கொண்டதுமான வாக்கெடுப்பு என்ற ஒரே முடிவைத் தவிர காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏதும் இல்லை.

ஆனால் இந்த வரலாறுகள் மறைக்கபட்டு தேசபக்தி என்னும் ஆயுதத்தை வைத்து சாமானிய மக்கள் மனதில் பாகிஸ்தானை எதிரி நாடாக சித்தரித்து, பாகிஸ்தானை அழிப்பது தான் தீர்வு என்பது போல் விசம கருத்தை பதிய வைத்து உள்ளது இந்திய ஒன்றியம். இதற்கு எந்த அரசும் விதிவிலக்கு அல்ல.

போர் வெளிச்சத்தில் அம்மக்களின் தீர்வு இல்லை. அவர்கள் தீர்வு இருட்டுக்குள்ளும் இல்லை. அவர்களுக்கான தீர்வு இருட்டடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஒன்றிய அரசு தீர்வை போர் வெளிச்சத்தில் தேடிக்கொண்டு நடிக்கிறது பார்ப்பவர்களை நம்ப வைக்க…
உலகின் மிக இலாபகரமான வர்த்தகம் ஆயுத வியாபாரம்!!
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி!!
ஃபாசிஸ்ட்டுகளின் கடைசி ஆயுதம் போர்!!

இப்போது புரிகிறதா, நடப்பது போரா?? வடிவேலு சொல்ற மாதிரி பெரிய அக்கப்போராக அல்லவா உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சி இது போன்ற அக்கப்போர்களில் இல்லை. ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் தான் உள்ளது. இன்றைய அணு ஆயுத போரில் வெற்றி என்று ஒன்று இல்லை. இருவருக்குமே தோல்விதான். சேதாரம் யாருக்கு குறைவு என்பதை வைத்து வெற்றி யை கணக்கிடுவது என்பது ஒரு மாயை.

கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்!!
போரில்லா உலகை படைப்போம்!!


மன்னை செந்தில் பக்கிரிசாமி,
(குறிப்பு: காஷ்மிர் வரலாறு இணையத்தில் இருந்து திரட்டப்பட்டது. முழுவதும் என் எழுத்து அல்ல.)

Leave a Reply