Home>>அரசியல்>>உண்மையான கூட்டாட்சிக்கான புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

உண்மையான கூட்டாட்சிக்கான புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: பா.ச.க.விற்கு எதிர் கூட்டணி அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தினை தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவார் கூட்டியிருப்பதை வரவேற்கிறேன். இதற்கு முன்னாலும் இதேபோல, எதிர்க்கட்சிகளை ஓரணியாகத் திரட்டுவதற்குப் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவை வெற்றிப்பெறாததற்கு, பதவி பங்கீட்டுக் கூட்டணிகளாக அவைகள் அமைந்ததே காரணமாகும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்பதை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட பா.ச.க.வுக்கு எதிராக மாற்று அணி அமைக்க வேண்டுமானால், பா.ச.க.வின் நோக்கங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட கூட்டணியாக அமைந்தால்தான் அது வெற்றி பெறும்.

பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களும், பல்வேறு மதத்தினரும் கூடி வாழும் நாட்டில் மாநிலங்கள் தன்னுரிமை அதிகாரம் பெற்றவையாகவும், ஒன்றிய அரசு வெளியுறவு, பாதுகாப்பு, நாணயம் அச்சிடுதல் போன்ற குறிப்பிட்ட சில துறைகளைக் கொண்டதாகவும், எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கு இருக்கும் வகையில் உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஆராயவேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

அன்புள்ள,
(பழ.நெடுமாறன்)
தமிழர் தேசிய முன்னணி,
தலைவர்.


செய்தி சேகரிப்பு:
இராசசேகரன், மன்னார்குடி.

Leave a Reply