Home>>அரசியல்>>தந்தை ந. சிவராஜ் அவர்களுக்கு “புகழஞ்சலி” – புரட்சி பாரதம் கட்சி
தந்தை ந. சிவராஜ்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தந்தை ந. சிவராஜ் அவர்களுக்கு “புகழஞ்சலி” – புரட்சி பாரதம் கட்சி

இன்று தான் தந்தை ந. சிவராஜ் அவர்கள் பிறப்பும், இறப்பும்…

வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் – வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

ந.சிவராஜ் (29 செப்டம்பர் 1892–29 செப்டம்பர் 1964) வழக்கறிஞர், நீதிக்கட்சித் தலைவர், அரசியல் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்பட்டவர். டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து பணியாற்றியவர். பிரிட்டிசு அரசு இவருக்கு இராவ் பகதூர் பட்டம் அளித்துக் கவுரவித்தது.

கல்வி:


இவரைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே 4ஆம் வகுப்புவரை இவரது தந்தை படிக்க வைத்தார். பிறகு, இராயப்பேட்டையிலிருந்த வெஸ்லி பள்ளியில் 5ஆம் வகுப்பில் சேர்த்தார். பள்ளி இறுதி வகுப்புவரை அங்குப் பயின்ற சிவராஜ், வெஸ்லி கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1917ஆம் ஆண்டு சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

தொழில்:


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னைச் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

திருமணம்:


சிவராஜ், தனது 26ஆம் அகவையில் 1918ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 10ஆம் நாள் மீனாம்பாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மீனாம்பாள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெண்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்வு:


சிவராஜ் தொடக்கக் காலம் முதலே நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார். பல சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும்,நீதிக்கட்சி மாநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். அண்ணல் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவசனும் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு தீண்டப்படாத மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துப் போராடியபோது அவர்களுக்கு ஆதரவாகச் சென்னை மாகாணத்தில் செயல்பட்டார்.

இராசகோபாலச்சாரி 1937இல் முதல் அமைச்சரானவுடன் சிவராஜ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பதவியைவிட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை 1942இல் அமைத்தபோது சிவராஜ் அவர்களையே அதன் அகில இந்தியத் தலைவராக அறிவித்தார். சிவராஜ் அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமாக இருந்து சமூகப் பணிகளைச் செய்துவந்தார். அம்பேத்கர் மறைவுக்குப்பின் இந்தியக் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பணிகள்:


1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளைமீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928 முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆண்களுக்கு 21 எனவும், பெண்களுக்கு 16 எனவும் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை 27.3.1928இல் சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அதை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். 17.11.1928 இல் முத்தையா முதலியார் கொண்டுவந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணையைச் சத்தியமூர்த்தி ஐயர் என்பவர் எதிர்த்துப் பேசினார். முத்தையா முதலியாருக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் பேசினார். 30.2.1933 அன்று பொப்பிலி அரசர் கொண்டு வந்த இனாம் நில ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார்.

அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இனாமாகக் கொடுத்த நிலத்தைக் கைப்பற்றி விவசாயக் குடிகளுக்குக் கொடுக்கும் மசோதா அது. காந்தி உண்ணாவிரதம் இருந்ததால் தனி வாக்களர் தொகுதியை நேர்ந்த பூனா ஒப்பந்தம் நியாயமற்றது. ஆதிதிராவிட மக்களின் உரிமையைப் பறிப்பது ஆகும். என்று அந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து சட்டமன்றத்தில் 1934இல் தீர்மானம் கொண்டு வந்தார். நீதிக்கட்சி ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது. சர் ஏ. டி. பன்னீர் செல்வம் உள்துறை அமைச்சராகப் பொறுப்பை ஏற்றிருந்த காலகட்டம். 7.8.1935 அன்று சிவராஜ் தென்னாற்காடு மாவட்டம் வெள்ளையன்குப்பம் படையாச்சிகள் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

வகித்த பதவிகள்:


1926 முதல் 1936 முடிய நீதிக்கட்சி ஆட்சியின் காலத்தில் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். அந்தக் காலத்தில் ஒரே அவை மட்டும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
20.11.1945 அன்று சென்னை மாநகர மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1957-1962 இந்திய குடியரசுக் கட்சி சார்பில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு திருப்பெரும்புத்துர் தொகுதயிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறைவு:


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த செப்டம்பர் 1964இல் தில்லி சென்றார். தில்லியில் இருந்தபோதே 29ஆம் நாள் அதிகலை 5.30 மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவர் உடல் தில்லியிலிருந்து விமானம் வழியாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பவுத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.


கட்டுரை உதவி:
தகவல் தொழிற்நுட்ப அணி,
புரட்சி பாரதம் கட்சி.


பட உதவி:
விழுத்தெழு இளைஞர் இயக்கம் (வலைப்பூ)

Leave a Reply