Home>>இந்தியா>>‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல் – வ.கெளதமன்

கொரோனா பேய் கொடூரமாகக் காத்திருக்க ‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயல்.

இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு. வ.கெளதமன் அவர்கள் தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே கொடுத்துள்ளோம்.


ஏழரை கோடித் தமிழ் மக்களின் மதிப்புமிக்க மக்கள் சபையான தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் 13 பேர் ‘நீட்’ என்கிற எமனை எதிர்த்துத் தங்கள் உயிரால் உயில் எழுதித் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்ட பின்பும், கொரோனா என்கிற ஒரு கொடும் பேய் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை வேட்டையாடியதோடு மூன்றாவது அலைக்காக வெறிகொண்டு காத்திருக்கும் இச்சூழலில் இதற்கு முந்தைய மற்ற தேர்வுகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறித்தே தீருவோம் என்கிற முடிவோடு நீட் தேர்வை இரக்கமற்ற முறையில் நடத்தத் துடிக்கும் இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வினால் தமிழ்நாடும், தமிழ் வழியில் படித்த எங்கள் வீட்டுப் பிள்ளைகளும் மருத்துவ உரிமையை இழந்த புள்ளி விவரங்களை அறியும் பொழுது மனம் அதிர்ச்சியடைவதோடு, நிலை குலைந்து போகிறது. 2014 -15ஆம் கல்வி ஆண்டில் தமிழ் வழியில் படித்த 481 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுவே 2015 -16ஆம் கல்வி ஆண்டில் 456 ஆகவும், 2016 -17ஆம் கல்வியாண்டில் 438 ஆகவும் இருந்துள்ளது.

ஆனால் நீட் தேர்வுக்கு பிறகு 2017- 18ஆம் கல்வியாண்டில் வெறும் 41 மாணவர்களும், 2018 -19ஆம் கல்வி ஆண்டில் 88 மாணவர்களும், 2019 – 20ஆம் கல்வி ஆண்டில் வெறும் 58 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இது எவ்வளவு பெரிய கல்வி வன்முறை. நெஞ்சம் பிளக்கும் இந்த வன்முறையை இனியும் தமிழினம் வேடிக்கை பார்க்க கூடாது. யார் வீட்டு சொத்தை எவர் கொள்ளையிடுவது?

காலங்காலமாகத் தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை சதித்திட்டம் தீட்டி பறித்து கொழுத்த கூட்டம், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஐயா ஏ.கே.இராஜன் அவர்களின் குழுவை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஓங்கி ஒரு குட்டு வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நீதியரசர் குழு, 14.07.2021 அன்று, நீட்டிற்கு எதிரான மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த ஏறத்தாழ 86 ஆயிரம் பேரின் எதிர்ப்பை 165 பக்க அறிக்கை வாயிலாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு ஒருபோதும் அடி பணியாமல் நீதியரசர் ஏ.கே.இராஜன் அவர்கள் பரிந்துரையை நேர்மையோடு பிரகடனப்படுத்தி நிரந்தரமாக நீட்டை அப்புறப்படுத்தும் உறுதிமிக்க ஒரு புதிய சட்டத்தை உடனே உருவாக்க வேண்டும்.

நீட்டினை எதிர்த்து அனைத்துக் கல்லூரி மாணவர்களோடு எத்தனையெத்தனையோ போராட்டங்களை நடத்தினோம். சென்னையில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தி நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் இந்நாள் முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட்டினை அடியோடு ஒழிப்போம் என்று எங்களிடம் நேரில் வாக்குறுதி தந்தார்.

அன்று ஆண்ட அ.தி.மு.க., அரசு எங்களைப் பச்சையாக ஏமாற்றி எங்கள் வீட்டு 13 பிள்ளைகளின் உயிரை காவு வாங்கிவிட்டது. இப்போது ஆளும் தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று வருகிற கூட்டத்தொடரிலேயே நீட்டை நிரந்தரமாகத் தூக்கியெறியும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒருவேளை நீட்டிற்கு எதிரான சட்டத்தை கொண்டுவரத் தவறினால் தமிழ்நாடு ஜல்லிக்கட்டைப் போன்ற ஒரு மாபெரும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்.

வேறு வழியில்லை என்று கூறி இந்திய ஒன்றிய அரசுக்கு பணிந்து தமிழ்நாடு அரசு நீட் தேர்வை நடத்துமேயானால் எதிர்காலத்தில் எந்த ஒரு தமிழ்நாட்டுப் பிரச்சனையையும் நாம் தீர்க்க முடியாத அளவுக்கு ஒரு பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதைத் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, நாமும் புரிந்துகொண்டு நம்மினத்தின் உரிமையை மீட்டெடுக்க எரிமலையாக எழுந்து நின்று போராட முன்வர வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.


செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply