புதிய நீர்நிலைகளை உருவாக்க அறிவுறுத்தல் இது இன்றைய தமிழர்நாட்டின் சூழலுக்கு இன்றியமையாத முடிவு இதில் சமரசமும் செய்து கொள்ள இயலாது.
சற்று ஏறக்குறைய 400 TMC தண்ணீர் காவிரியில் வந்த நிலையில் கர்நாடகத்தின் சூழ்ச்சிகளாலும் சட்டத்தை மீறிய அணைகளாலும் அவர்களின் இனவெறி போக்குகளாலும் இன்று 177.25 TMC தான் தீர்ப்பாகி உள்ளது.
இந்த தண்ணீர் கூட முறையான மாதங்கள் சரியான அளவில் வந்ததில்லை அங்கே அதிகமான மழை பொழிந்து அணைகளிலும் நீர்நிலைகளிலும் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகும் உபரி நீரே தமிழர்நிலத்திற்கு வருகிறது.
அதை தடுக்கவும் இன்று மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகம் துடிக்கிறது இதனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட இங்கே வராது. இது ஒருபுறம் இருந்தாலும் சரியான நீர்வரத்து இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீரை உறிஞ்சி உறிஞ்சி நிலத்தடி நீரின் தன்மை உப்பாகிவிட்டது.
ஆறு ஏரி, குளம் கால்வாய்கள் வடிகால், வாய்க்கால்கள் என்று அனைத்தும் சிதைந்துள்ளது. இதனை
போக்குவதற்கு அனைத்து தொகுதியிலும் ஒரு வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.
அக்குழு 1950ம் ஆண்டில் இருந்த நீர்நிலைகளை கணக்கு எடுக்க வேண்டும் அவற்றில் தற்போது இருக்கும் நீர்நிலைகள் எண்ணிக்கையையும் அழிக்கப்பட்ட நீர்நிலைகள் எண்ணிக்கையையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும்.
இதில் அழிக்கப்பட்டதை முடிந்தவரை மீட்க வேண்டும் இதில் வெட்டி நியாயங்கள் பேசி மீட்க முடிந்ததை இழந்துவிடக்கூடாது. அடுத்து அனைத்து பகுதியிலும் வாய்க்கால், வடிகால்களை முழுமையாக தூர்வார வேண்டும். அவற்றில் நிலத்தின் மட்டங்களுக்கு ஏற்றார்போல நீரோட்டத்தின் வேகத்தை அதிகரித்து கடைமடைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கான அனைத்து வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நீர்நிலைகளையும் முறையாக தூர்வாருதோடு அனைத்திலும் தண்ணீர் செறிவூட்டும் கிணறுகளை அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளில் உள்ள கிணறுகளை மீட்க வேண்டும் பொழியும் மழைநீர் சேகரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இதெல்லாம் செய்தால் மட்டுமே இயற்கையை காப்பதோடு நிலத்தடி நீரில் உப்பு அதிகரித்ததால் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக கோளாறு தொடங்கி எதிர்காலத்தில் தோல்வியாதி, நோய்த்தொற்று போன்ற ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.
ஆகவே தமிழக மக்களும் அனைத்து பகுதியில் இருக்கும் சேவை அமைப்புகளும் அரசின் இந்த சீரிய முயற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் தங்களின் பேராதரவை கொடுக்க வேண்டும்.
அரசு வெறுமனே நீர்நிலைகளை மீட்போம் என்று கூறவில்லை புதிய நீர் நிலைகளையும் உருவாக்குவோம் என்று கூறுவதிலிருந்து இதன் தீவிரத்தன்மையை உணர்ந்து அனைவரும் செயலாற்றுவோம்.
நீரின்றி அமையாது உலகு.
—
இராசசேகரன்,
மன்னார்குடி.