தமிழ்நாடு சந்திக்க இருக்கும் அழிவின் பரிமாணம்!
ஒட்டுமொத்த வெள்ளநீரின் கொள்கலன் மேகதாது அணை!
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் காவிரி ஆறு பாய்ந்த சுவடு மட்டுமே தெரியும்!
தமிழில் மேகதாது; கன்னடத்தில் மேக்கேதாட்டு; உள்ளூர் மக்கள் மொழியில் ஆடு தாண்டும் காவிரி!
கர்நாடக மாநிலத்தில் ராம் நகர் மாவட்ட எல்லையில் அர்க்காவதி ஆறு காவிரியுடன் சேருமிடமாகிய ‘சங்கம’ என்ற இடத்திலிருந்து 3.5 கிலோ மீட்டர் கீழே, தமிழக எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பாறை இடைவெளி வழியாக காவிரி பாய்ந்து ஓடுகிறது. இந்த இடம்தான் ஆடுதாண்டு காவேரி என்று அறியப்படுகிறது, ஆடு தாண்டும் அளவு இருந்த இந்த பிளவு நீர் அரிமானத்தால் பின்பு அகன்று இருக்கும் எனத் தோன்றுகிறது. மேகதாது என்ற இந்த இடம் பெங்களூருவிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இடத்தில்தான் ஓர் அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் முடிவெடுத்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் இந்திய ஒன்றிய அரசின் நீர்வளத்துறையிடம் (2018) சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பான ஓர் அறிக்கையை காவிரி ஆணையத்திடமும் அளித்துள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் குடிநீர் அற்றுப் போகும். 10 மாவட்டங்களில் வேளாண்மைக்கு பாசனநீர் இல்லாமற் போகும். காவிரிப்படுகை நீரற்றுப்போய் பாலை நிலமாக மாறும். தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு குலைந்துபோகும், முன்னமே காவிரி நீர் மறுக்கப்பட்டதால் சுருங்கிப்போன காவிரிப் படுகை விவசாயம் முற்றிலும் இல்லாதொழியும். மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி காய்ந்து போகும். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்ந்து கொண்டதால்தான் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், இன்னமும்கூட தமிழ்நாட்டில் அனைவரும் பிரச்சினையை உணர்ந்து விட்டதாகக் கருத முடியாது.
தமிழ்நாட்டின் விவசாயத்தின் ஆதாரமாக விளங்கிவருவது காவிரி ஆறுதான். காவிரிப்படுகை தான் தமிழ்நாட்டின் உணவுத் தேவையில் 60 விழுக்காட்டை நிறைவு செய்து வந்தது. காவிரி ஆற்று நீர் தமிழகத்துக்கு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ் நாட்டின் உணவுத்தேவையில் 34 விழுக்காடு மட்டுமே காவிரிப்படுகை நிறைவு செய்கிறது. அதையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது.
காவிரி ஆறு கர்நாடகத்தில் உள்ள குடகில் தோன்றி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கர்நாடகத்தில் 320 கிலோ மீட்டர் தூரமும், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லையாக 64 கிலோ மீட்டர் தூரமும், தமிழ்நாட்டில் 416 கிலோ மீட்டர் தூரமும் காவிரியாறு பயணிக்கிறது. காவிரி ஆற்றில் கேமாவதி, காரங்கி, லட்சுமண தீர்த்தம், கபினி, அர்க்காவதி போன்ற ஆறுகள் துணையாகச் சேர்ந்து காவிரியை வளப்படுத்துகின்றன.
குடகு மாவட்டத்தில் ஹேரங்கி ஆறு காவிரியுடன் இணைந்து கிருஷ்ணராஜ சாகர் அணையை வந்தடைகிறது. கேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய துணை ஆறுகளின் நீர் கிருசுணராசசாகர் வந்து சேருகின்றன. கேரங்கி ஆற்றின் மீது ஓர் அணையும், கேமாவதி ஆற்றின் மீது ஓர் அணையும் அந்த ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கின்றன. கிருசுணராசசாகர் அணைக்கு வந்த காவிரி நீர் சிறிரங்கப்பட்டினத்தை ஒரு தீவாக உருவாக்கிவிட்டு, மேலும் பயணிக்கிறது. சுவர்ணாவதி, அர்காவதி ஆகியவையும் காவிரியில் இணைக்கின்றன. கேரளாவில் உற்பத்தியாகும் கபினி ஆற்றின் மீதும் கர்னாடகம் ஓர் அணையைக் கட்டியிருக்கிறது. அணையை நிரப்பி விட்டு, கபினி ஆறு வழிந்தோடி காவிரியில் இணைகிறது. இதன்பிறகு சிம்சா, ஆர்க்காவதி ஆகிய ஆறுகள் காவிரியில் இணைகின்றன. இதன் பிறகு காவிரி ஆறு தமிழகத்தின் எல்லை நோக்கிப் பயணிக்கிறது, தமிழக எல்லையிலிருந்து 3.5 கி.மீ மேலே, குறுகிய ஒரு பாறை இடுக்கின் வழியாக காவிரி ஆறு பாய்ந்து வருகிறது, அந்த இடம் “ஆடுதாண்டு காவிரி” என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு எடுக்கும் காலங்களில், கபினி அணை நிரம்பி வழிந்து வரக்கூடிய தண்ணீரும், கிருசுணராசசாகர் அணையில் இருந்து வழிந்து வரக்கூடிய வெள்ள நீரும், இதுவரை அணைகட்டித் தடுக்கப்படாத அர்க்காவதி ஆற்றின் நீரும், காவிரி என்ற ஆறாக, மேகதாது வழியாகப் பாய்ந்து தமிழக எல்லைக்குள் நுழைகிறது. கபினி மற்றும் கிருசுணராசசாகர் அணைகளிலிருந்து வழிந்து செல்லக்கூடிய நீரையும், அர்க்காவதி ஆற்றிலிருந்து தடுக்கப்படாமல் சென்று கொண்டிருக்கக்கூடிய நீரையும் தடுத்து கர்நாடக எல்லைக்குள் முடக்கிவிட வகுக்கப்பட்ட திட்டம் தான் மேகதாது அணைத் திட்டம். பெருவெள்ளம் ஏற்பட்டு அணைகள் உடைந்து விடாமல் காக்க உபரி நீரை வெளியேறினாலும் கூட, அந்த நீரும் தமிழகத்துக்குச் சென்றுவிடாமல் தமிழக எல்லை ஓரமாக ஓரிடத்தில் முடக்கப்பட வேண்டும் என்பதற்காகவே திட்டமிடப்பட்டிருக்கும் அணைதான் மேகதாது அணை.
ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறை!
காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் அன்றைய மைசூர் அரசுக்கும் சென்னை மாகாணத்திற்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
மைசூர் அரசு காவிரிப் பாசனத்தை விரிவாக்க விரும்பியபோது, சென்னை மாகாணம் அதை அனுமதிக்க மறுத்தது. சென்னை மாகாணத்தின் நலன் பாதுகாக்கப்படும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி, 1892-இல் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான முதல் ஒப்பந்தம் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையில் ஏற்பட்டது. இதன்படி கர்நாடகத்தில் பிறந்து சென்னை மாகாணத்திற்கு வந்து சேரும் 15 ஆறுகளின் குறுக்கே சென்னை மாகாணத்தைக் கேட்காமல் அணை கட்டக்கூடாது என்று வரையறை செய்யப்பட்டது.
ஓர் அணையைக் கட்டிக்கொள்ள மைசூர் அரசு விரும்பியது. அதன் காரணமாக 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் உருவானது. 1928-இல் மைசூர் அரசு 45 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருசுணராச சாகர் அணையைக் கட்டிக்கொண்டது. அதுபோன்று சென்னை மாகாணம் காவிரியின் குறுக்கே 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையைக் கட்டியது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் 50 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும், அதன் பிறகு உபரி நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்பதைப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அதாவது 50 ஆண்டு காலம் முடிந்த பிறகு ஒப்பந்தம் புதுப்பித்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் சாகா ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டுக்கு 575 டிஎம்சி நீர் வழங்க மைசூர் ஒத்துக்கொண்டது, சென்னை மாகாணத்தின் வேளாண்மையையும் நலன்களையும் பாதுகாப்பதில் ஆங்கிலேயர்கள் மிக கவனமாக இருந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் பாதுகாத்துத் தந்த காவிரி உரிமையை விடுதலை பெற்ற இந்தியா பறிமுதல் செய்கிறது!
1947இல் இந்தியா விடுதலை பெற்றது. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. மைசூர் அரசு மறைந்து, கர்நாடகம் உருவானது. சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது. இந்நிலையில்,1970 களில் 50 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தின் கால அளவு நெருங்கிய நிலையில், விடுதலை பெற்ற இந்தியாவில் கர்நாடக அரசு கோளாறுகளைத் தொடங்கியது. கர்நாடக அரசு 1974 – இல் இந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று கூறியது. அது தன் பாசனப் பரப்பை அதிகரித்தது. 1968 முதலே பிரச்சனைகளை தொடங்கிய கர்நாடகம், 1970 -1980 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மூன்று அணைகளை, தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமலும், இந்திய அரசிடம் தெரிவிக்காமலும் கட்டி முடித்தது. கேமாவதி, கேரங்கி, கபினி ஆகியவை “கள்ள அணைகள். ” கிருசுணராசசாகர் மட்டுமே முறையாக சென்னை அரசின் அனுமதி பெற்றுக் கட்டிய அணையாகும்.
அணை கட்டுவதன் உண்மை நோக்கம்!
ஐந்தாவது அணையாக, தமிழ்நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதியில், மேகதாதுவில் ஓர் அணையை கட்ட கர்நாடகம் திட்டமிட்டது. பெங்களூருக்கு 4.75 டி.எம்.சி குடிநீர் வழங்கவும், 400 மெகாவாட் நீர்மின் நிலையத்தை அமைக்கவும், ராம்நகர் மாவட்டத்திற்கு நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தரவும், அணையைக் கட்ட கர்நாடகம் முடிவு எடுத்து, அதை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு 5, 912 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அணை கட்டுவதற்கு கர்நாடக சொல்லும் காரணம் பெங்களூரு நகருக்கு குடிநீர் அளிப்பது என்பதுதான். ஆனால் 4.75 டிஎம்சி மட்டுமே பெங்களூருக்கு தேவைப்படும் நிலையில், 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மிக பிரம்மாண்டமான மேகதாது அணையை ஏன் கட்ட வேண்டும்?
தங்கள் மாநிலத்தில் உருவாகும் ஆற்றுநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற உளவியலை கன்னடர்களுக்கு கன்னட அமைப்புகள் உருவாக்கியிருக்கின்றன. கர்னாடகத்தில் தோன்றும் காவிரி ஆற்று நீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் தயாரில்லை. ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்துக்குள் வந்து விடாதபடி, அவ்வளவு வெள்ளநீரையும் முடக்கிவிட வேண்டும் என்பதற்காகவே, பிரம்மாண்டமான அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகம், 1970-ஆம் ஆண்டு கணக்குப்படி கர்நாடகாவின் பாசனப் பரப்பு 7 லட்சம் ஏக்கர் ஆகும், தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 28 லட்சம் ஆகும். அணைகள் மட்டுமின்றி, ஏரிகளையும் அமைத்து, காவிரி நீரை முடக்கியது கர்நாடகம். அதன் பாசனப் பரப்பை விரிவாக்கம் செய்தது. கர்நாடக பாசனப் பரப்பு 25 லட்சம் ஏக்கராக மாறியது. அதேநேரம், காவிரிநீர் மறுப்பால், தமிழக காவிரிப்பாசனப் பரப்பு 20 லட்சம் ஏக்கராகச் சுருங்கி, தற்போது உண்மையில் 15 லட்சம் ஏக்கர் மட்டுமே காவிரிப் பாசனப் பரப்பாக உள்ளது.
காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தது:
தமிழ்நாடு – கர்நாடகம் இடையிலான காவிரிப் பிரச்சனையின் இறுக்கத்தைத் தீர்ப்பதற்காக, 1970-களில் காவிரி உண்மை அறியும் குழு இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் காவிரி நீர்ப் பாசனப் பகுதி 25.9 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகாவில் காவிரி நீர்ப் பாசனப் பகுதி 6.9 லட்சம் ஏக்கர் என்றும் அது கண்டறிந்தது. 1974-இல் 50 ஆண்டு கால ஒப்பந்தம் முடிந்து போனதாக கர்நாடகம் பிரச்சினை செய்ததால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில், அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் பிரச்சனை தொடர்ந்ததால் இந்திய அரசியலமைப்புச் சட்டம்- 262இன் படி நடுவர் மன்றம் அமைக்க இந்திய அரசுக்கு பொறுப்பு இருப்பதன் அடிப்படையில், தமிழ்நாடு நடுவர் மன்றம் அமைக்கக் கோரியது.
தீர்ப்பாயமும் உச்சநீதிமன்றமும்: மதிக்கப்படாத தீர்ப்புகள்!
1986இல் தீர்ப்பாயம் அமைக்கக் கோரிக்கை எழுப்பப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அன்றைய பிரதமர் வி.பி. சிங் 1990 ஜூன் 2- ஆம் தேதி, காவிரி தீர்ப்பாயத்தை உருவாக்கினார். தமிழ்நாடு அரசு 566 டிஎம்சி நீரையும், கர்நாடகம் 465 டிஎம்சி நீரையும், கேரளா 99.8 டிஎம்சி நீரையும், புதுச்சேரி 9.3 டிஎம்சி நீரையும் கோரின.
பிரச்சினை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு இடைக்காலத் தீர்ப்பும், தீர்ப்பின்படி நீர் வழங்கவும் கோரியது. தீர்ப்பாயம் அதை மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பாயத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கி நீரை வழங்க உத்தரவிட்டது. அதன்படி 1991 -ஆம் ஆண்டு, இடைக்காலத் தீர்வாக ஆண்டுதோறும் 205 டிஎம்சி நீர் வழங்க தீர்ப்பாயம் அறிவித்து, அது அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகம் கலவரத்தில் இறங்கியது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டன. ஒரு லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு ஓடிவந்தார்கள்.
1980 -1990 க்கு இடைப்பட்ட பத்து ஆண்டு காலத்தில் தமிழ்நாடு பெற்றிருந்த காவிரி நீரின் சராசரியை கணக்கிட்டு இடைக்காலத் தீர்வாக ஆண்டுதோறும் 205 டிஎம்சி வழங்குவது என்று தீர்ப்பாயம் முடிவெடுத்தது. கர்நாடகம் அப்போதிருந்த 11 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பை விரிவு செய்யக்கூடாது என்று வரையறுத்தது. 1991 ஜூலை 25 அன்று இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து 2007 -இல் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதன்படி காவிரியின் மொத்த நீர் வளம் 740 டி.எம்.சி; அதில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்திற்கு 270 டிஎம்சி ; கேரளாவுக்கு 30 டிஎம்சி,புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று இறுதித் தீர்ப்பு வரையறுத்தது. இதில் தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றின் வழியே 192 டிஎம்சி நீரை கர்நாடகம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
தீர்ப்பாயத்தின் முடிவு கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்கத்தக்கதாக இல்லாததால், இரண்டு மாநிலங்களுமே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தன, 2017 வரை வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்து 2018 பிப்ரவரி 16 அன்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பு தமிழகத்தின் நலனுக்கு பெரிதும் எதிரானதாக அமைந்தது. அதில் தமிழகத்தின் பங்கு மேலும் குறைக்கப்பட்டு, 177.25 டிஎம்சி மட்டுமே கர்நாடகம் வழங்கும் என்று கூறப்பட்டது. அதைக் கூட வழங்குவதற்கு கர்நாடகம் தயாரில்லை.
மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழகத்தின் தொடர்ந்து எதிர்ப்பு!
1980களிலேயே மேகதாது என்ற புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று கர்நாடக அரசு திட்டமிட்டது. ஆனால் அது ஏற்கப்படவில்லை. 2013-இல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடகம் முயற்சிகளை எடுத்தபோது, அதை மறுத்து அன்றைய முதல்வர் செயலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். 2014-இல் காவிரி உரிமையை விட்டுத்தர முடியாது; அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் அறிவித்தார். இதை எதிர்த்து 2015இல் காவிரி படுகை முழுவதும் முழு அடைப்புல் போராட்டம் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு மேகதாது திட்ட அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2016 இல் அன்றைய முதல்வர் செயலலிதா நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார். ஆனாலும் 2017 பிப்ரவரியில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
2018ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இது தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று வரையறுத்து, தமிழ்நாட்டின் நலனைப் பாதிக்கும் தீர்ப்பை வழங்கியது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழகத்துடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய இந்திய அரசை வலியுறுத்தினார். ஆனால் தமிழ்நாடு அரசு இதை எதிர்த்தது.
2018-ல் மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட வரைவு அறிக்கையை (Detailed Project Report) கர்நாடகம் தயாரித்து அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. அந்த திட்ட வரைவு அறிக்கையை இன்றளவும் இந்திய ஒன்றிய அரசின் நீர்வளத் துறையிடம் உள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும், தமிழ்நாட்டின் ஒப்புதலும் இல்லாமல் அணை கட்ட முடியாது என்ற பாதுகாப்பை மட்டுமே தமிழகம் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இதுகுறித்து, இந்திய ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு பதில் மனு தாக்கல் செய்தது. மேகதாது அணை கட்ட இதுவரை மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றும், ஆகவே தமிழக அரசின் மனு அர்த்தமற்றது என்றும், தமிழ்நாட்டின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும், இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மேகதாது அணை கட்டுமான பொருட்கள் குவிப்பை தடுக்க மறுத்துவிட்ட பசுமை தீர்ப்பாயம்!
இதற்கிடையில், எவருடைய அனுமதியும் இன்றி அணையைக் கட்டி விடுவது என்று முடிவெடுத்து, கர்னாடகம் கட்டுமானத்திற்கான பொருட்களை மேகதாதுவில் குவிக்கத் தொடங்கியது. 2021 மே மாதம், தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்காக ஏற்று விசாரிக்கத் தொடங்கியது. மத்திய அரசு, தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது. மேகதாது அணை கட்டப்படுகிறதா? இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன? – ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது. சூலை 5ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை அளிக்க உத்தரவிட்டது. தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜூன் 11ஆம் தேதி வழக்கு தொடர்ந்தது, அது தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. இந்த நடவடிக்கை, பதில் சொல்ல வேண்டிய ஓர் இக்கட்டிலிருந்து இந்திய ஒன்றிய அரசைக் காப்பாற்றி விட்டது.
அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை தொடர்ந்து குவித்து வருகிறது கர்நாடகம். இந்நிலையில், எப்படியாவது அணையைக் கட்டி விட வேண்டும் என்று கர்நாடகமும், தடுத்துவிட வேண்டும் என்று தமிழ்நாடும் போராடி வருகின்றன.
தொடரும்முயற்சிகள்!
மேகதாது அணை கட்டும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி விட வேண்டுமென்று கர்நாடகமும், இத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று தமிழகமும் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த சூன் 17-ஆம் தேதி, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஜூலை 16ஆம் தேதி மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவத்திடம் தமிழ்நாடு அனைத்து கட்சிகள் குழு வலியுறுத்தியது. அதற்கு முன்னதாக சூலை 12- ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி (2018), தமிழ்நாடு அரசின் முன் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது; மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இந்திய ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
சூலை 15 அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சியினர் டெல்லி சென்று, சூலை 16 அன்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தனர். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள், கீழ்ப்பாசன மாநிலங்களின் (Lower Riparian) அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டக்கூடாது; காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் தேவை; மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று 45 நிமிடங்கள் வலியுறுத்திப் பேசினர். அதற்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறியதாக தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது; ஒன்றிய அரசு கர்நாடகத்துக்கு துணை போகக் கூடாது என்று வலியுறுத்தியதாக துரைமுருகன் கூறினார்.
கர்நாடகம் அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒன்றிய நீர்வளத்துறை அனுமதித்ததே தவறு. இத்தகைய தவறுகளை தெரிந்தே செய்கிறது இந்திய அரசு. ஒன்றிய நீர்வளத்துறை (சல்சக்தி துறை) அமைச்சர் கசேந்திர சிங் செகாவத் எந்த வகையிலும் மேக்கேதாட்டு அணையை அவர்கள் (கர்நாடகம்) கட்ட முடியாது; நாங்கள் விதித்த கட்டுப்பாடுகளில் ஒற்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை; கீழ்ப் பாசன மாநிலங்களின் அனுமதியும், காவிரி ஆணைய அனுமதியும் தேவை. நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதால் அணை கட்ட முடியாது – என்று கூறியதாக 17.07 2021 செய்தித்தாள்கள் தெரிவித்தன. அதாவது அணை கட்டுவதற்கு இந்திய அரசு அனுமதிக்கிறது.
ஆனால் விதித்த நிபந்தனைகளை கர்நாடகத்தால் நிறைவேற்ற முடியவில்லை என்பதால்தான் அணை கட்ட அனுமதி தரவில்லை; கர்நாடகம் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால், அணை கட்ட அனுமதிக்கப்படுவார்கள் என்று பொருள். நியாய, அநியாயங்களின் மதிப்பீட்டு அடிப்படையில் அணை கட்ட அனுமதி மறுக்கப்படவில்லை; நிபந்தனைகளை நிறைவேற்றாமை காரணமாகவே அணை கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நியாய உணர்வு சந்தேகத்திற்கிடமானது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி, மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் விவசாயிகள் நலன் கருதி மேகதாது அணை கட்டக்கூடாது என்று எடியூரப்பாவுக்கு பதில் எழுதினார்.
அழிவின் பரிமாணம்!
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஏற்படும் இழப்பையும் அழிவின் பரிமாணத்தையும் மதிப்பிட முடியாது.
மேகதாது அணையைக் கட்ட விடாமல் தடுப்பதில்தான் தமிழகத்தின் எதிர்கால வாழ்வு தங்கியிருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசியல் தலைமைகள் உணர்ந்துள்ளன. ஆகவே அனைத்து கட்சிகளும் மேகதாது அணையை கட்ட அனுமதிக்க முடியாது என்று ஒருமித்த குரலில் பேசி வருகின்றன, இதற்கு காரணம், இந்த அணை கட்டப்பட்டு விட்டால், இன்றளவும் தமிழகத்துக்கு உணவளித்து வரும் ஒட்டுமொத்த காவிரிப்படுகையும் நீர் இன்றி காய்ந்து பாலை நிலமாகும் என்பது தான். உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றான காவிரிப்படுகை நாகரீகம் செழித்த வளமான இப்பரப்பு வறண்ட நிலமாக மாறும்; வாழ வழியற்றுப் போன மக்கள் பிழைப்பு தேடி வெளியேறக் கூடிய அவலம் ஏற்படும்.
1990 முதல் 2018 வரை 28 ஆண்டுகள் வழக்கு நடத்தி பெற்ற தீர்ப்பு காணாமல் போய்விடக் கூடிய அபாயம் தோன்றியுள்ளது. மேகதாது என்ற ஒற்றை அணையை கர்நாடகம் கட்டி விட்டால், எந்த நீருக்காக தமிழகம் போராடியதோ, அந்த நீர் முற்றிலுமாக முடக்கப்பட்டு விடும். அடாவடியாக அணையைக் கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது; அதற்கு அத்தனை வகையிலும் இந்திய அரசு துணை நிற்கிறது. வளமான காவிரிப்படுகை பாலைவனமாக மாறும் அபாயம் வலுவில் திணிக்கப்படுகிறது.
புதிதாக கட்டப்படும் மேகதாதுவில் கொள்ளளவு 67.16 டிஎம்சி. முன்னமே கட்டப்பட்டுவிட்ட கபினி அணையின் கொள்ளளவு 15.67 டி.எம்.சி. கேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி, கிருஷ்ணராஜ சாகரின் கொள்ளளவு 45.05 டி.எம்.சி; கேமாவதியின் கொள்ளளவு 35.76 டி.எம்.சி. இத்தனை அணைகளிலும் தேக்கும் நீர் போதாதென்று, மிகப்பிரமாண்டமான அணையைக் கட்டத் துணிகிறது கர்நாடகம்.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழ் உள்ள வடிநிலப் பகுதி, கபினி அணைக்குக் கீழ் உள்ள பகுதி, சிம்சா ஆர்க்காவதி சுவர்ணவதி வடிநில பகுதி ஆகியவற்றிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய நீர் முற்றிலுமாக முடக்கப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படும் வகையில் மேகதாது அணைக்கட்டு திட்டமிடப்படுகிறது. 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் பயன்பாடும், 10 மாவட்டங்களில் நீர்ப்பாசனமும் அற்றுப் போய்விடும், காவிரி நீர் மறுப்பால், காவிரிப் பாசனப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. 1974இல் கர்நாடகாவில் காவிரி பாசனப் பரப்பு 3.5 லட்சம் ஏக்கர் ; 1990 இல் இது 11.2 லட்சம் ஏக்கராகப் பெருகியது. இதற்கு மேல் பாசனப் பரப்பை கூட்டக் கூடாது என்று காவிரித் தீர்ப்பாயம் 1991 – இல் வரையறுத்தது. 1970- இல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாசனப் பரப்பு 28.21 இலட்சம் ஏக்கர், இது 24.2 1 இலட்சமாகக் குறைந்தது. தமிழ்நாடு 1970 இல் பயன்படுத்திய காவிரிநீர் 566 டிஎம்சி. இதைத் தீர்ப்பாயம் 419 டிஎம்சி ஆகக் குறைத்தது. 1970-இல் கர்நாடகத்தின் விவசாயப் பகுதி 6 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர். இது 18 இலட்சமாக அதிகரித்தது. கர்நாடகத்தில் காவிரிநீர் பயன்பாடு 177 டிஎம்சி; இது தீர்ப்பாய தீர்ப்பில் 270 டிஎம்சி ஆக உயர்த்தப்பட்டது, தமிழகம் முன்னமே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் குறுவை சாகுபடி நான்கு லட்சம் ஏக்கராக இருந்தது. இது 1.8 லட்சம் ஏக்கராகக் குறைந்துபோனது. அதுவும் ஆழ்துளைக் கிணற்று நீர் பாசனத்தால்தான் விவசாயம் செய்யப்படுகிறது. டெல்டாவில் ஒரு இலட்சம் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேகதாது அணை என்பதன் பொருள் தமிழ்நாட்டுக்கு இனி தண்ணீர் கிடையாது என்பதுதான்.
இனி ஏது தொழில்? ஏது சோறு?
காவிரிப் படுகையின் இயல்பு வேளாண்மை என்பதுதான். வயிறு என்ற ஒன்று இருக்கும் வரை, காவிரிப்படுகை மாவட்டங்கள் வேளாண் மாவட்டங்களாகத் தொடர வேண்டிய கட்டாயம் இருக்கிறது, வேளாண்மையை அழித்து வேறு தொழில்களை இங்கு நிறுவவும் முடியாது, வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே இங்கு செயல்படலாம். தமிழ்நாட்டின் 10 ஏழ்மையான மாவட்டங்களின் பட்டியலில் காவிரிப்படுகை மாவட்டங்கள் இருக்கின்றன. தனிநபர் வருமானத்தின் அடிப்படையில், அதிக வறுமை கொண்ட 10 மாவட்டங்களில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகியவை அடங்கியுள்ளன. தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 32 மாவட்டங்களில் 30வது இடத்தில் திருவாரூர், 27வது இடத்தில் நாகை மாவட்டம், 23வது இடத்தில் தஞ்சை மாவட்டம் ஆகியவை உள்ளன. வளமான மாவட்டங்கள், ஆனால் மக்கள் வறுமையில் உழல்கிறார்கள். வேளாண்மை மட்டுமே வேலைவாய்ப்புகளை அளித்து வந்திருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் நெருக்கமாக வாழும் மாவட்டங்கள் காவிரிப்படுகை மாவட்டங்கள். இங்கு வேளாண்மை சிதைந்தால் வாழ்வியலே சிதைந்து போகும்.
கைட்ரோகார்பன் திட்ட கார்ப்பரேட்டு பெருமுதலாளிகள் காவிரிப்படுகையின் அழிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களின் கூட்டாளிகளான இந்திய ஒன்றிய அரசுத் தலைமைகள் காவிரிப்படுகை அழிவதை வரவேற்கிறார்கள்.
குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் நாகை மாவட்டம். முன்பு பண்ணையார்களும் விவசாயத் தொழிலாளர்களும் வாழ்ந்த பழைய தஞ்சை மாவட்டத்தில், இப்போது பெரிய மற்றும் சிறு, குறு விவசாயிகளும், வேலைவாய்ப்பற்ற விவசாயத் தொழிலாளிகளும் வாழ்கிறார்கள். விவசாயம் தவிர வேறு எந்த தொழிற்சாலைகளும் இல்லாத பகுதி காவிரிப்படுகை. விவசாயம் நின்றுபோனால் இங்குள்ள மக்கள் வேறு வழி இல்லாமல், பிழைப்பு தேடி படுகையை விட்டே வெளியேறுவார்கள். விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய விவசாயிகள் மட்டுமன்றி, விவசாய தொழிலாளர்களுடைய நிலை கூடுதலாகக் கவலை தரத்தக்கது. ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரையும், அவ்வப்போது கிடைக்கும் காவிரி ஆற்று நீரையும் பயன்படுத்தி வேளாண்மையை மெல்ல உயிரோடு வைத்துக்கொண்டிருக்கிறது காவிரிப் படுகை.
மேகதாது அணை கட்டப்பட்டு விட்டால், எல்லாமே முடிந்து போனது. கொத்துக்கொத்தாக தற்கொலைகள் நிகழும். வாழ வழியற்றவர்களுக்குப் பிரச்சினையின் தீர்வாக தற்கொலைகளே அமையும். ஓர் உருண்டை சோற்றுக்கு ஏந்திய கைகளுடன் மக்கள் உணவைத் தேடி அலையும் கூட்டமாக மாறுவது தவிர்க்கவியலாதது. பெருவாரியாக மக்கள் படுகையை விட்டு வெளியேறுவார்கள். வாழ்வாங்கு வாழ்ந்த இனம் வாழ வழியற்று அழியும் நிலை ஏற்படும். காவிரிப் படுகை பரிதாபகரமான நிலையில் உள்ளது. நீர் அற்று போகும் படுகையின் நிலை கற்பனைக்கு எட்டாதது. இருப்பதையும் பறித்துவிடத்தான் மேகதாது அணைத் திட்டம், கர்நாடகத்தில் முன்னெடுப்பில், இந்திய ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன்.
—
கட்டுரை:
பேராசிரியர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு