Home>>இந்தியா>>ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டம் (251வது நாள்)
இந்தியாவேளாண்மை

ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டம் (251வது நாள்)

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்த் கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
251வது நாள், 4 ஆகஸ்ட், 2021.

** அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதத்தை இயற்றுவது குறித்து, வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் நாடாளுமன்றம் விவாதத்தைத் தொடங்கியுள்ளது!

** விவசாயிகள் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அன்று அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளது!

** ஆகஸ்ட் 15ஆம் தேதியை விவசாயி தொழிலாளி விடுதலை போராட்ட நாளாகக் கொண்டாட, எஸ்.கே.எம். அழைப்பு விடுத்துள்ளது; நாடு முழுவதும் மூவர்ண கொடியை ஏந்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்!

** மேதா பட்கர் உட்பட 700 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை எஸ்.கே.எம். கண்டிக்கிறது!

** விவசாயிகள் நாடாளுமன்றத்தில் இன்று, ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பிரதிநிதி குழு கலந்து கொண்டது!

** அனைத்துப் போராட்ட களங்களிலும், ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று, சமூக ஒற்றுமையின் பண்டிகையான தீஜ் விழா கொண்டாடப்படும்!

வரலாற்றுப் புகழ்பெற்ற விவசாயிகள் நாடாளுமன்றம், இன்று 10வது நாளாக விவாதத்தைத் தொடர்ந்தது. மூன்று கறுப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், காற்று மாசுபாடு மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், விவசாயிகள் நாடாளுமன்றம் விவசாயிகளுக்கு அடுத்து என்ன தேவை என்பதன் மீது, அதாவது அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதத்தின் மீது கவனத்தைத் திருப்பியது. இந்த நோக்கத்திற்காக, இன்று விவசாயிகள் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, (i) செலவு குறித்த மதிப்பீடுகளை மேம்படுத்துதல், (ii) குறைந்தபட்ச ஆதார விலை சூத்திரம், உற்பத்தி செலவை (C2) விட குறைந்தபட்சம் 50% அதிகமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல், (iii) இதைச் செயல்படுத்தும் விதமாக, அரசாங்கத்தால் 50% கொள்முதல் என்பதை உத்தரவாதப்படுத்துதல், (iv) அரசாங்கத்தின் சிறந்த சந்தை தலையீடு மற்றும் (v) வணிகர்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் MSPயை கொடுப்பதை உறுதி செய்தல் என்ற ஐந்து இலக்குகளை அடைவதை நோக்கி உள்ளது.

விவாதத்தின் போது விவசாய பிரதிநிதிகள் இந்த மசோதாவை ஆதரித்தனர். மேலும் சுவாமிநாதன் கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளை வலியுறுத்தியும், விவசாய நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மற்றும் பயிர் காப்பீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். விவசாயிகளின் குடும்பத்தினரின் உழைப்பைத் திறமையான வேலையாகக் கருத வேண்டும் என்றும், எம்எஸ்பி கணக்கிடும் போது அவர்களின் ஊதியத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரினர். விவசாயிகளுக்கு நியாயமான ஊதியம் அல்லது செலவு தொகையைத் திரும்பப் பெறுவதில் தற்போதுள்ள முறையின் தோல்வியை பல்வேறு பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.

சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது தலித் சிறுமியின் நினைவாக, 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியபின் இன்றைய விவசாயிகள் நாடாளுமன்றம் முடிந்தது.

நாளையும் விவாதம் தொடரும். அப்போது பல முக்கிய வல்லுநர்கள் நாடாளுமன்ற அவையின் விருந்தினர்களாக கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்றைய நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் பதாகையின் கீழ் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எம்எஸ்பி மீதான விவாதம் முடிந்த பிறகு, வெள்ளிக்கிழமை (06.08.2021) அன்று விவசாயிகள் நாடாளுமன்றம், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்காக தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. இந்தத் தீர்மானம், திங்கள்கிழமை (09.08.2021) வெள்ளையனே வெளியேறு தினத்தையொட்டி, அனைத்து மகளிர் நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படும்.

இதற்கிடையில், சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பொதுக்குழு, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் தொழிலாளர்கள் விடுதலை போராட்ட நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மூவர்ண கொடிகளை ஏந்தி பேரணிகளாக பிளாக், தாலுக்கா, மாவட்ட தலைமை அலுவலகம் அல்லது அவர்களின் அருகில் உள்ள விவசாயிகள் போராட்ட களங்கள் அல்லது தர்ணா நடக்கும் இடங்களுக்குச் எஐ செல்ல வேண்டும். இந்தப் பேரணிகள் சைக்கிள்கள், பைக்குகள், வண்டிகள், டிராக்டர்கள் போன்றவற்றில் தேசியக் கொடியுடன் நடைபெறும்.

அதன் முந்தைய முடிவை உறுதிசெய்த எஸ்.கே.எம், ஆகஸ்டு 15இல் நடைபெறும் அதிகாரப்பூர்வ கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் அல்லது தேசியக் கொடியுடன் நடக்கும் எந்த அணிவகுப்புகளையும் ஆகஸ்ட் 15 வரை விவசாயிகள் எந்த இடத்திலும் எதிர்க்கமாட்டார்கள் என்று அறிவித்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளின் தலைவர்களைப் புறக்கணிப்பதற்கான முந்தைய முடிவு மற்ற அனைத்து அரசியல் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் தொடரும்.

மத்தியப் பிரதேசத்தில் செஞ்சுரி ஆலை தொழிலாளர்கள் சுமார் 700 பேரையும், அவர்களின் தலைவரும், எஸ்.கே.எம்.இன் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவருமான மேதா பட்கரையும் காவல்துறை கைது செய்திருப்பதை ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டித்துள்ளது. 1,387 நாட்களாக நடந்து வந்த இந்த அமைதியான மற்றும் ஜனநாயக சத்தியாகிரக போராட்டத்தைப் பயமுறுத்துவதற்கும், முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையை மத்திய பிரதேச அரசு பயன்படுத்தியுள்ளது. சத்யாகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும், செஞ்சுரி ஆலைகளின் சட்டவிரோத விற்பனை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் எஸ்.கே.எம். கோருகிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லிப் போராட்டத் தளங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில், சமூக ஒற்றுமையின் பண்டிகையான தீஜ் பாரம்பரிய நாட்டுப்புற விழாவைக் கொண்டாட எஸ்.கே.எம் அழைப்பு விடுத்துள்ளது.

அறிக்கையை வழங்கியவர்கள் –

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் தல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவ்குமார் சர்மா ‘கக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
9417269294, samyuktkisanmorcha@gmail.com

வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

Leave a Reply