Home>>அரசியல்>>பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா?
அரசியல்செய்திகள்வரலாறு

பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா?

அங்கு கோயில் இருந்ததாக தொல்லியலாளர் கே.கே.முகமது கூறுவதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா?
இதுகுறித்து தவறான செய்திகளைக் கூறும் தொல்லியலாளர் கே.கே. முகமது அயோத்தியில் நடைபெற்ற அகழ்வாய்வுகளைச் செய்த அகழ்வாய்வுக் குழுவில் பங்கு பெற்றவர் அல்ல என்பதை விளக்கி, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சான்றுகளைத் திரட்டி, ஒரு கட்டுரையாக அளிக்கப்பட்டிருந்தது.
இப்போது “பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது” என்று கே.கே. முகமது என்ற தொல்லியலாளரே கூறுகிறார் என்று ஊடகங்களும், மதவாத அமைப்புக் குழுக்களும் மசூதி இடிப்பை நியாயப்படுத்தும் வகையிலும், கோயில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்துவருகின்றன.
தொல்லியலாளர் கே.கே. முகம்மது கூறுவது அடிப்படையற்றது என்று உணர்த்தும் வகையில், அக்கட்டுரையை மீண்டும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் அது கட்டுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் சமண கட்டுமானங்கள் இருந்ததற்கான சிதிலங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பாபர் மசூதிக்கு அருகாமையில் 1976-77 இல் நடைபெற்ற முதல் அகழ்வாய்வில் அப்பகுதியில் சமணக் கோயில்களின் காலத்தால் உடைந்த பகுதிகள் கிடைத்திருப்பதை மட்டுமே தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவித்தார்கள். சமணத் தடயங்கள் குறித்து மேலும் அகழ்வாய்வு செய்யவேண்டுமென்று சமண அமைப்புகள் வேண்டுகோள் விடுத்த போது அவ்வேண்டுகோள் மறுக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை வலியுறுத்தி அளிக்கப்பட்ட மனுக்களை நிராகரித்தது.
*B.B. லால் தலைமையில் இந்த முதல் அகழ்வாய்வு நடைபெற்றபோது, தொல்லியல் டிப்ளமோ படித்துக்கொண்டிருந்த மாணவர் கே.கே. முகமது. டிப்ளோமா மாணவர் என்ற முறையில் இங்கு வந்திருக்கிறார். B.B. லாலை அவருக்குத் தெரியும். ஆனால் அதன் பிறகு அயோத்தியில் எந்த அகழ்வாய்விலும் அவர் பங்கேற்றது இல்லை. இது உறுதியான செய்தி. அகழ்வாய்வுகளில் அவர் பங்கேற்பு குறித்து எவரும் எந்த ஆவணமும் காட்ட முடியாது.*
_பேராசிரியர் த. செயராமன்
06.08.2020.
பாபர் மசூதிக்குக் கீழ் முன்பு கோயில் இருந்ததாகக் கூறுவது தவறானது. சான்றுகளின் அடிப்படையில் இது நிறுவப்படவில்லை. கிடைத்துள்ள சான்றுகளைத் தங்களுக்குச் சாதகமாக , தவறாக இந்துத்துவச் சார்பாளர்கள் விவரிக்கிறார்கள் (misinterpretation ) .
கடந்த 9.11.2019 அன்று ,உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்து அமைப்புக்கு வழங்கித் தீர்ப்பளித்தது. இதை நிலைப்படுத்திக் கொள்ள, மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்றக் கருத்தை நிலைநாட்ட, திட்டமிட்டப் பொய் பிரச்சாரம் தொடர்கிறது .
இதுவரைக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால்,பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.
அந்த இடத்தில் அடுத்தடுத்து, இரண்டு பழைய மசூதிகள் கட்டப்பட்டு இருந்ததற்கான அடையாளங்களும், புத்த சமயம் முன்பு தழைத்திருந்த பகுதி என்பதால், சில புத்த சமயத் தடயங்களும் கிடைத்துள்ள நிலையில், இந்துக் கோயில் அங்கு இருந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்.
கோயில் அங்கு இருந்ததில்லை என்பது குறித்து ஏராளமான தொல்லியல்_வரலாற்று அறிஞர்கள் விரிவாக எழுதியுள்ளனர். இக்கேள்விக்கு விடை காண ஏராளமான அறிக்கைகளையும் பல்வேறு வரலாற்றாளர்களின் கருத்துக்களையும் ஊன்றிப் படிக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கு கோயில் இருந்தது என்று கூறுபவர்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை. கிடைத்த தடயங்களை ஒழுங்காகப் பதிவு செய்யாத தொல்லியல் துறையின் குறைபாடுள்ள அறிக்கையும், இராமர் பற்றிய நம்பிக்கையும் , உச்சநீதிமன்றத்தின் முரண்பாடுகள் மிக்க தீர்ப்புமே போதுமானதாக இருக்கிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், இந்துத்துவ ஆதரவுத் தொல்லியலாளர்களைக் களமிறக்கி, இடிக்கப்பட்ட மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என்று அறிக்கைக்கு மேல் அறிக்கை விடச் செய்துகொண்டிருக்கின்றன இந்துத்துவ அமைப்புகள் . அப்படி பொய்யான செய்திகளைப் பரப்புவதில் தொல்லியலாளர்களைப் பயன்படுத்துகின்ற போக்கு அதிகரித்துள்ளது.
கே.கே. முகமது என்கிற தொல்லியலாளர் “பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்பு இந்து கோயில் இருந்தது ” என்று அழுத்தமாகக் கூறி அறிக்கைகளும், பேட்டிகளும் அளித்து வருகிறார். பல ஊடகங்களும் அவரை முன்னிலைப்படுத்தி, செய்திகள் வெளியிட்டு, இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கீழ் கோயில் இருந்தது என்ற கருத்தை மக்கள் மயமாக்கி வருகின்றன. இந்துத்துவவாதிகளும், மதவாதிகளும் அவரைக் கொண்டாடி வருகிறார்கள்.
தி இந்து- தமிழ் அவரை நேர்காணல் செய்து, 14. 11. 2019 அன்று விரிவான செய்தி வெளியிட்டிருந்தது :
” அயோத்தி அகழ்வாராய்ச்சிக்கு சமஸ்கிருதம் உதவியாக இருந்தது ” என்று செய்திக்கு தலைப்பிட்டு இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சிக்கு சமஸ்கிருதம் தேவை என்ற கருத்துடன் செய்தி முடிவடைகிறது. பாபர் மசூதி நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சமஸ்கிருதம் பயன்பட்டது என்று கூறுவதே நகைப்புக்குரியது அல்லவா?
“இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் (ஏ.எஸ்.ஐ) மண்டல இயக்குனராகப் பணியாற்றியவர், புகழ் பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் கே.கே. முகமது.”
” 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் அகழ்வாய்வு செய்த போது, பாபர் மசூதிக்குக் கீழே கோயில் இருப்பதை அறிந்து அதை உலகுக்குச் சொன்னவர் இவர்தான். சர்ச்சைக்குரி ய இடத்தில் கோயில் மீது தான் மசூதி கட்டப்பட்டிருப்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நிரூபித்தார். “
“அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1976- 77 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வுப் பணியில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் தலைமையிலான முதல் இந்தியத் தொல்பொருள் குழுவில் கே.கே. முகமது இடம்பெற்றிருந்தார். “
“பாபர் மசூதியின் மேற்குப் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், தனது குழு பல்வேறு டெரகோட்டா சிற்பங்களைக் கண்டுபிடித்தது என்றும், இதுபோன்ற டெரகோட்டா சிற்ப அமைப்புகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை என்பதால், இந்த இடம் கோயில் இருந்த இடம் தான் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து பாராட்டுக்களைக் குவித்தார்”
என்று வியந்து பாராட்டிப் பேசுகிறது.
இந்துத்துவவாதிகள் மற்றும் இராமர் கோயில் ஆதரவு அரசியல்வாதிகள் அனைவருக்கும், கே.கே. முகமது அளித்த இராமர் கோயில் ஆதரவுக் கருத்துக்கள் மகிழ்ச்சி அளித்து வருகின்றன.
இந்நிலையில், “அகழ்வாய்வில் பங்கேற்ற அகழ்வாய்வு அறிஞர் முகமதுவே கூறி விட்டார்” என்று மக்கள் அனைவரையும் நம்ப வைக்கும் வகையில் ஊடகங்கள் அவரை விளம்பரப்படுத்தி வருகின்றன.
*அயோத்தியில் அகழ்வாய்வு செய்த B. B.லால் அவர்களின் அகழ்வாய்வுக் குழுவில் கே.கே. முகமது ஒரு குழு உறுப்பினரா என்பது அடிப்படையான கேள்வி.*
கே.கே. முகமது கேரளாவைச் சேர்ந்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 1973- 75 ஆகிய ஆண்டுகளில் முதுகலை வரலாறு படித்தார்.
அதன் பிறகு 1976 -77 இல், இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கியாலஜி – இல் ஓராண்டு டிப்ளோமா படித்தார். தொல்லியல் அகழ்வாய்வு குறித்த அவருடைய படிப்பு அவ்வளவுதான்.
இதன் பிறகு, அலிகார் பல்கலைக்கழகத்தில் 1978-ல் வரலாற்றுத் துறைக்கு உட்பட்ட தொல்லியல் பிரிவில் உதவி தொழில்நுட்ப உதவியாளராகவும், பின்னர் உதவியாளராகவும் வேலைபார்த்தார்.
பின்னர், இந்தியத் தொல்லியல் துறையில், உதவி மேற்பார்வையாளராக 1988 – 90 இல் -சென்னையிலும்,
1991 – 1997 இல் கோவாவிலும், பின்னர்,
மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு பெற்று 1997-2001இல் பீகாரிலும்,
2001 – 2003 இல் ஆக்ராவிலும்,
2003 – 2004 இல் சட்டிஸ்கரிலும்,
204-2008 இல் போபாலிலும்,
2008-2012-இல் டில்லியிலும் வேலை பார்த்தார்.
2012 -இல் இந்திய தொல்லியல் துறையின் ரீஜினல் டைரக்டர் _ வடக்கு எனப் பதவி உயர்வு பெற்று, அதே ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அயோத்தி அகழ்வாய்வில் கே.கே.முகமது எப்போது பங்கேற்றார்?
2003 – இல் பாபர் மசூதியின் கீழ் அகழ்வாய்வை நடத்தியவர் டாக்டர் பி.ஆர். மணி என்பவருடைய குழு ஆகும்.
அவருடைய ஆய்வுக் குழுவுக்கும், கே.கே. முகமதுவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
கே.கே. முகமது அளித்துள்ள, அலுவலக பூர்வமான தன் விபரப்பட்டியல் (curriculum vitae) – இன் படி, அயோத்தி அகழ்வாய்வு என்பதில் அவருடைய பங்களிப்பு என்பது கிடையாது.
*அவருடைய பங்களிப்புகள்
அக்பரின் இபாதத் கானா,
பதேபூர் சிக்ரியில் முதல் கிறித்தவக் கோயில், அசோகரின் கேசாரியா புத்த ஸ்தூபம், ராஜ்கிர் புத்த ஸ்தூபம் அகழ்வாய்வு, வைசாலியில் கொல்ஹுவா புத்தமத இருப்பு அகழ்வாய்வு, கோழிக்கோடு-மலப்புரம் குகைக்கோயில்கள், குடை கற்கள் ஆகியவைதான்.
இவருடைய ஆய்வுகள் இவற்றைத்தவிர, அவருடைய சாதனையாக, வேறு எதுவுமில்லை.
சட்டீஸ்கரில் பர்சூர், சம்லூர் கோயில்களைப் பாதுகாத்தல் நடவடிக்கை மேற்கொண்டார். குவாலியருக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் பட்டேஸ்வர், மொரீனா பகுதிகளில் உள்ள 200 சிவன், விஷ்ணு கோயில்களில் 60 கோயில்களை இவர் புதுப்பித்தார். 2008- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது, டில்லியில் உள்ள நினைவுச் சின்னங்களை அழகு படுத்தினார். டில்லியில் குழந்தைகள் மியூஸியத்தை உருவாக்கினார். இவைதாம் அவருடைய ஒட்டுமொத்த செயல்பாடுகள்.
இப்போது 2019 நவம்பர் 9- அன்று, உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு என்று தீர்ப்பளித்தது.
‘அதுவே சரியான தீர்ப்பு’ என்றும், அந்த இடத்தை முஸ்லிம்களே மனமுவந்து முன்னரே வழங்கியிருக்க வேண்டும் என்றும், மத்திய அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தையும் இராமர் கோயிலுக்கு முஸ்லிம்கள் வழங்கிவிட வேண்டும் என்றும், பேசியும், எழுதியும் வருகிறார்.
அனைத்து செய்தி ஊடகங்களும் இதை முன்னிலைப்படுத்தி, செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் “அயோத்தியின் அகழ்வாராய்ச்சிக்கு சமஸ்கிருதம் உதவியாக இருந்தது” என்றும், சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் இருந்ததை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தவர் இவர்தான் என்றும், கோயில் இருந்ததை தகுந்த ஆதாரங்களுடன் அவர் நிரூபித்திருக்கிறார் என்றும், B.B.லால் தலைமையிலான முதல் இந்தியத் தொல்பொருள் குழுவில் கேகே முகமது இடம் பெற்றிருந்தார் என்றும், இப்போது வேறு சில செய்தித்தாள்களில் மசூதிக்கு அடியில் இருந்து 263 சிலைகள் எடுக்கப்பட்டன என்று அவர் கூறியதாகவும், தொடர்ந்து செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இச்செய்திகள் அனைத்தும் தவறானவை. செய்தியைப் படிக்கும் பலருக்கு, பிரச்சினையை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசும் பலருக்கு, இந்த அகழ்வாய்வில் ஈடுபட்டவர்கள் பற்றியோ, அகழ்வாய்வுக் குழுவில் இல்லாமல் பார்வையாளர்களாக வந்திருந்து அகழ்வாய் வைக் கண்கானித்தவர்கள் பற்றியோ, தொல்லியல் துறை தோண்டியெடுத்தச் சில முக்கியத் தடயங்களைப் பதிவு செய்ய மறுத்து கண்டனத்துக்கு உள்ளானது பற்றியோ, மொட்டையடிக்கப்பட்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது பற்றியோ, முதல் இரண்டு இடைக் கால ஆய்வுகளில் இல்லாத செய்திகளை இறுதி அறிக்கையில் சேர்த்தது பற்றியோ எதுவும் தெரியாது.
இந்நிலையில், மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்று கண்டுபிடித்துக் கூறியவரே ஒரு முஸ்லிம்தான் என்றும், அவர் மிகப் பெரிய அகழ்வாய்வு அறிஞர் என்றும் செய்தி பரப்பப்படுகிறது.
அயோத்தி ஆய்வுக்கும் கே.கே. முகம்மதுவுக்கும் என்ன தொடர்பு?
இது குறித்து அறிந்துகொள்ள அயோத்தியில் இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகள் குறித்த சில செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். இது வரை அயோத்தியில் அகழ்வாய்வு செய்த
எந்த அகழ்வாய்வுக் குழுப் பெயர்ப் பட்டியலிலாவது அவருடைய பெயர் இருகிறதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
அயோத்தியில் இதுவரை நடந்த அகழ்வாய்வு அறிக்கைகள் எதிலாவது கே.கே. முகமதுவின் பெயர் இருக்கிறதா? எதிலும் இல்லை. ஏனென்றால், அயோத்தி அகழ்வாய்வு எதிலும் ஓர் அகழ்வாய்வாளர் என்ற முறையில் அவர் பங்கேற்றதில்லை.(பயிற்சி மாணவர் என்ற முறையில் குறுகிய காலம் உடனிருக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார்.)
அயோத்தியில் அகழ்வாய்வு 1861, 1969, 1976 -77, 1977 -78, 1978 -79, அதன் பிறகு 2003 – ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் எந்த அகழ்வாய்வுக் குழுவிலும் கே.கே. முகமது கிடையாது.
1976-இல் எம்.ஏ. வரலாறு முதுகலை பட்டப் படிப்பை முடித்த கே.கே. முகமது ஓராண்டு School of Archaeology (ஸ்கூல் ஆஃப் ஆர்க்கியாலஜி) யில் தொல்லியல் டிப்ளமோ படித்தார், அதை முடித்தவுடன் 1978 -இல் ஆய்வு உதவியாளர் (Research Assistant) ஆக அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பணிஅமர்த்தம் பெற்றார். இவ்வேலை 1979இல் உறுதி செய்யப்பட்டது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைக்கு உட்பட்ட ஒரு பிரிவாகிய தொல்லியல் பிரிவில் (Archaeology Section)-இல் Research Assistant – ஆகவும், உதவி தொல்லிய லாளராகவும் 1988 – வரை வேலை பார்த்தார்.
அதன் பிறகு, இந்தியத் தொல்லியல் துறையில் துணை தொல்லியல் கண்காணிப்பாளராக நியமனம் பெற்றார்.
1976 -77 ஆகிய ஆண்டுகளில் தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் பி.பி.லால் நடத்திய அகழ்வாய்வுக் குழுவில் இவர் இல்லை. அப்போது இவர் தொல்லியல் டிப்ளோமா படித்துக் கொண்டிருந்த 12 மாணவர்களுள் ஒருவர்; ஒரு பயிற்சி மாணவர் (Trainee).
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் தலைவர் பேராசிரியர் சையது அலி ரிஸ்வி, “பி.பி. லாலின் ஆய்வுக் குழுவில் கே.கே. முகமது ஒரு போதும் இருந்ததில்லை” என்று கூறுகிறார்.
School of Archaeology யில் தொல்வியல் டிப்ளோமா படிக்க, 12 மாணவர்கள் ஓராண்டில் சேர்க்கப்படுகின்றனர் என்றும், டிப்ளோமா படிப்புக்கான வகுப்புகள் செப்டம்பர் -அக்டோபரில் தொடங்கும் என்றும், மாணவர்களை தொல்லியல் ஆய்வுத்துறையின் இரண்டு மாதங்கள் பயிற்சிக்கு டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் அனுப்புவார்கள் என்றும், கே.கே. முகமதுவின் வகுப்பில் படித்த சக மாணவரான அசோக் பாண்டே தெரிவிக்கிறார். பின்னாளில், போபாலில் தொல்லியலாளராகப் பணியாற்றிய அசோக் பாண்டே கூறுகிறபடி, இந்த பயிற்சி காலத்தில்தான் பி.பி.லால் அவர்களின் அயோத்தி அகழ்வாய்வு க்குச் சென்று வந்ததாகக் கூறுகிறார் .
அசோக் பாண்டே 2016இல் போபாலில் தொல்லியல் கண்காணிப்பாளர் (சூப்பர்இண்டெண்டிங் ஆர்க்கியாலஜிஸ்ட்) என்ற பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றார்.
கே.கே. முகமது பணிசெய்த அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சையது அலி ரிஸ்வி, “எப்பொழுது அயோத்தியா அகழ்வாய்வில் அவர் ஈடுபட்டார்? ” என்று கேள்வி எழுப்புகிறார். “அதற்கு ஒரே வாய்ப்பு , அவர் டிப்ளோமா மாணவராக இருந்தபோது, அகழ்வாய்வு நடந்த இடத்திற்கு சில நாட்கள் செய்முறை பயிற்சிக்காகச் சென்றிருக்க கூடும் ” என்று கூறுகிறார்.
2007-இல் குவாலியரில் முனிசிபல் மியூசியத்தில் இயக்குனராக இருந்து 2007-இல் ஓய்வு பெற்ற ராமகாட் சதுர்வேதி அயோத்தி அகழ்வாய்வில் முகமது ஒரு பயிற்சி மாணவராகப் பங்கேற்றார் என்று பதிவு செய்கிறார்.
ராஜ்நாத் கோ என்ற பெயர் கொண்ட ASI – இன் தலைமைப் புகைப்படக்காரர், முகமது முதுகலை டிப்ளோமா மாணவர் என்றும், இரண்டு மாத பயிற்சி பெற்றார் என்றும் கூறுகிறார்.
அயோத்தி அகழ்வாய்வு குறித்து இதுவரை நடந்த எந்த ஆய்வறிக்கையிலும் கே.கே. முகமதுவின் பெயர் இல்லை. ஏனென்றால் அகழ்வாய்வுக் குழுவில் அவர் ஒர் உறுப்பினர் அல்ல என்று குறிப்பிடும் தொல்லியல் துறையின் தலைமை புகைப்படக்காரரான ராஜ்நாத் கோ, பயிற்சிக்காக வந்த மாணவர்களுடைய பெயர்களை அறிக்கையில் (Reports)சேர்ப்பது இல்லை என்று குறிப்பிடுகிறார்.
பயிற்சி காலம் டிசம்பர் மற்றும் பிப்ரவரியில் முடிந்துவிடுகிறது; ஆகவே பாபர் மசூதியின் அருகாமைப் பகுதிகளில் (அப்போது பாபர் மசூதி உடைக்கப்படவில்லை ) B. B.லால் அகழ்வாய்வு நடத்தியபோது கே.கே. முகமது ஒரு பயிற்சி மாணவராகத்தான் பங்கேற்றார்.
கேகே முகமதுவின் அயோத்தி அகழ்வாய்வுப் பங்கேற்பு குறித்து முன்னமே வரலாற்று அறிஞர்களும், அகழ்வாய்வுத் துறை அறிஞர்களும் கேள்வி எழுப்பி, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
கே.கே. முகமதுக்கும், அயோத்தி அகழ்வாய்வுக்கும் என்ன தொடர்பு என்று பலரும் கேள்வி எழுப்பும் சூழல் எழுந்த நிலையில், அவரைக் காக்கும் விதமாக, இப்போது 92 வயதாகியிருக்கும் ஓய்வு பெற்ற தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் பி. பி.லால் “அயோத்தியில் ராம ஜென்ம பூமியை நான் அகழ்வாய்வு செய்து கொண்டிருந்த போது, ஸ்ரீ கே.கே. முகமது அங்கே என்னுடன் இருந்தார் என்பது உண்மை ” (It is a fact that Sri K. K. Muhammed was there with me when I was excavating the Ram Janmabhumi area in Ayodhya.) என்று பொதுவாகக் கூறி சான்றளித்திருக்கிறார்.
இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குக் கீழே 82 தூண்களுடன் மிகப் பிரமாண்டமான இராமர் கோயில் இருப்பதாகக் கூறி வந்தவர்கள், மசூதிக்கும் கீழே கோயில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்காமல், அதற்கு எதிரான சான்றுகள் அகழ்வாய்வில் தென்பட்டதும், அந்தக் குழிகளையே பிற வரலாற்றறிஞர்களும், அகழ்வாய்வறிஞர்களும் நெருங்கி விடாதபடி தடுத்தனர். அறிக்கை தயாரித்தவுடனேயே அடிப்படை, அன்றாடக்குறிப்பேடுகள் அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் அழிந்தனர்.
குறைபாடுள்ள தொல்லியல் அறிக்கையின் அடிப்படையில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, இந்துத்துவத் தலைவர்கள் கூறிக் கொண்டிருந்தது போலவே வழங்கப்பட்டுள்ள நிலையில், உன்மையிலேயே மசூதிக்கு அடியில் கோயில் இருந்தது என இந்தியாவில் அனைத்து மக்களையும் நம்ப வைக்கும் முயற்சியில், இந்திய இந்துத்துவ அரசும், இந்துத்துவ அமைப்புகளும் இறங்கியுள்ளன.
உண்மைக்குப் புறம்பாக, மசூதிக்குக் கீழே இராமர் கோயில் இருந்தது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்போரை பாஜக அரசு தேடி அலைகிறது. அவர்கள் மூலம் பொய்யை மக்கள் கருத்தாக மாற்ற முயற்சிக்கிறது.
நாசகாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அறிவியல் துறையில் பா.ஜ.கவுக்கு அப்துல்கலாம் கிடைத்தது போல, அகழ்வாய்வுத் துறையில் கே.கே. முகமது கிடைத்திருக்கிறார்.
மசூதிக்குக் கீழே கோயில் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்து விட்டன என்று ஓர் அகழ்வாய்வுத் துறையைச் சேர்ந்தவரே கூறினால் மக்கள் நம்புவார்கள். அதுவும் ஒரு முஸ்லிம் அகழ்வாய்வு அறிஞர், மசூதிக்குக் கீழே கோயில் இருந்தது என்று கூறினால், அது தான் உண்மையாக இருக்கும் என்று மக்கள் நம்புவார்கள் அல்லவா!
கே.கே. முகமது எப்படிப்பட்டவர்? அவர் யாருக்கானவர்? என்பதையும் | அவருடையஉள்ளத்தையும், அவருடைய நோக்கையும் , போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மதச் சார்பற்றவர்கள் தாங்கள் வாழும் இந்த நாட்டை ‘இந்தியா’ என்றும் தங்களை ‘இந்தியன்’ என்றும் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்துத்துவவாதிகள் தாங்கள் வாழும் இந்திய நாட்டைப் ‘பாரதம்’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், தாங்கள் புனித இந்துமத மரபைப் போற்றும் வகையில் தங்களைப் ‘பாரதீயர்கள்’ என்றும் அடையாளப் படுத்திக் கொள்ளுவதும் வழக்கம்.
2016-இல் கே.கே. முகமது தன் சுயசரிதையை எழுதினார். அதற்கு “ஞான் என்ன பாரதீயன்” (Njan Enna Bharateeyan )என்று பெயரிட்டு இருக்கிறார். “நான் ஒரு பாரதீயன்” என்று அறிவித்துக் கொண்ட அவருடைய இந்துத்துவ உளப்பாங்கை, நெருக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். அவர் யார்? அவருடைய உள்ளக்கிடக்கை என்ன? யாருடைய ஆளாகச் செயல்படுகிறார்? என்பது எளிதாகப் புரியும்.
அவர் சுய சரிதை எழுதிய அதே ஆண்டு, 2016-ல் அவருக்கு மோடி அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.
இப்போது 2019 நவம்பர் 9ஆம் தேதி, உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடம் இந்து அமைப்புகளுக்கு என்று தீர்ப்பளித்த நிலையில், “அதுவே சரியானத் தீர்ப்பு” என்றும், “அந்த இடத்தை முஸ்லிம்களே மனமுவந்து முன்னரே வழங்கியிருக்க வேண்டும்” என்றும், “மத்திய அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தையும் இராமர் கோயிலுக்கு வழங்க வேண்டும் என்றும், பேசியும், எழுதியும் வருகிறார். அனைத்து செய்தி ஊடகங்களும் இதை முன்னிலைப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.
மக்கள் மத்தியில் தொல்லியளாளர்கள் உரையாற்றுவது அரிதான ஒன்று. ஆனால், இன்று, கே.கே. முகமது மக்களைச் சந்திக்கவும், உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. இந்த செயல்பாடுகளின் பின்னுள்ள நோக்கம் மதச்சார்புடையது.
வரலாறு எழுதுபவர்களும், அகழ்வாய்வு செய்பவர்களும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தைப் பற்றிய இவர்களுடைய கண்டுபிடிப்புகளும், கருத்துக்களும்தாம், எதிர்காலத் திசைவழியைத் தீர்மானிக்கும். திரிக்கப்பட்ட வரலாறு வெடிகுண்டுகளை விடவும் அழிவைத் தரத்தக்கவை என்று வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் கூறுகிறார்.
வரலாறும், ஆழ்வாய்வும் எஜமானனாக இருக்க வேண்டுமேயொழிய, ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாக மாறக் கூடாது. தங்களுக்கு ஏற்றம் கிடைக்கிறது என்பதற்காக அகழ்வாய்வாளர்கள் அனுமார் சேவை செய்யக் கூடாது.
– பேராசிரியர் த.செயராமன்,
வரலாற்றுத் துறை .
19.11.2019.

Leave a Reply