Home>>அரசியல்>>மோடியின் இந்தியா நம்பிக்கையை இழந்துவிட்டது – பேரா.யோகேந்திர யாதவ்.
அரசியல்இந்தியாசெய்திகள்வேளாண்மை

மோடியின் இந்தியா நம்பிக்கையை இழந்துவிட்டது – பேரா.யோகேந்திர யாதவ்.

இந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டிற்கான ஒரு ஜே.பி (ஜெயபிரகாஷ் நாராயண்) தேவைப்படுகிறார்.

இது ஒரு வசீகரமான பிரதமரின் எட்டாவது ஆண்டு. குறைந்த வளர்ச்சி, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவற்றால் பொருளாதாரம் சீர்குலைந்து உள்ளது. சந்தேகங்கள் ஏமாற்றத்திற்கும், ஏமாற்றம் கோபத்திற்கும் வழிவகுக்கின்றன. அகங்கார அரசியலின் ஆட்சி முறை, போராட்டங்களை இழிவுபடுத்துகிறது.

நான், நரேந்திர மோடியின் இந்தியாவைப் பற்றி சித்தரிக்கவில்லை. இந்தப் பகுதி, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு பழமையானது; இது இந்திரா காந்தியின் இந்தியாவிலிருந்து வந்தது. 1974, ஜூன்5ம் தேதி, பீகார் இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அன்றைய தினம், ஜே.பி என்ற ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் நடந்த ஒரு மாபெரும் பேரணியில், சம்பூர்ண கிராந்தி அதாவது முழுப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். முழுப் புரட்சி பீகார் இயக்கத்தை ஒன்றிணைக்கும் அறைகூவல் ஆனது. அந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தின் போது ‘முழுப்புரட்சியே நமது முழக்கம், நாளைய வரலாறு நம்முடையது’ (Sampoorna kranti ab naara hai, itihaas hamara hai) போன்ற முழக்கங்கள் இந்திரா காந்தி ஆட்சிக்கு எதிராக எதிரொலித்தன; இது அவசரநிலைக்கும், இறுதியாக 1977 வாக்குச்சீட்டு புரட்சிக்கும் வழிவகுத்தது.

முடிந்து போன சகாப்தத்தின் லிங்கோ (வழக்கொழிந்து போன எளிதில் யாருக்கும் புரியாத அன்னிய மொழி லிங்கோ) கருத்தியல் இன்று நமக்கு பொருத்தமாக உள்ளதா? உள்ளது என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதியை ‘முழுப்புரட்சிக்கான’ அறைகூவலின் நினைவு தினமாக கடைப்பிடிக்குமாறு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சாமியுக் கிசான் மோர்ச்சாவின்) முடிவு செய்தது ஆழ்ந்த வரலாற்று முக்கியத்துவமானது.

இந்தியாவுக்கு நம்பிக்கை தேவை.

கடந்த காலத்தில், பொதுக் கருத்து, அணுகுமுறை மற்றும் நடத்தை ஆகிய பாடங்களில் நான் மாணவராக இருந்தபோது ஒரு விடயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது: அது இந்திய மக்களின் நம்பிக்கை பற்றியது. கள யதார்த்தம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பற்றிய கேள்விக்கு எப்போதுமே மக்களிடமிருந்து அளவுகடந்த நம்பிக்கையான நேர்மறையான பதில் கிடைத்தது.

ஆய்வு செய்கின்ற என்னுடைய மனம் இந்தப் புதிரைக் கண்டது. என்னிடத்தில் உள்ள அரசியல் மனம் இதனால் எரிச்சலடைந்தது. திரும்பிப் பார்க்கையிலே, ​​இந்த அப்பாவித்தனமான நம்பிக்கை, எல்லா இன்னல்களையும் மீறி ஜனநாயகத்தை உயிரோடு வைத்திருக்கின்ற ஆக்ஸிஜனாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அந்த நம்பிக்கை, இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்திய மூன்று எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கொள்ளுவோம். இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) மகேஷ் வியாஸ் கூறுகிறார், ‘அடுத்த ஒரு வருடத்தில் குடும்பங்களினுடைய வருமானத்தின் பங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 5 சதவீதமாக குறைந்துவிட்டது, பொருளாதாரம் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த 2019 ல் இது 30 சதவீதமாக இருந்தது’. அதே நாளில், FICCI இன் வணிக நம்பிக்கைக் கணக்கெடுப்பு(Business Confidence Survey) மக்களின் மனநிலையை துல்லியமாக காண்பிக்கும். அது வணிக நம்பிக்கை மிகக்கீழே போய்விட்டதை சுட்டுகிறது. இன்னும் கூடுதலாக சொல்வதாக இருந்தால், மோடி அரசாங்கத்தை விமர்சிக்காத யஷ்வந்த் தேஷ்முக், ‘CVoter நடத்திய கருத்துக் கணிப்பில், 80 சதவிகித இந்தியர்கள், நம்பிக்கையற்ற நிலையில் மிகுந்த மனச்சோர்வில் இருக்கிறார்கள்; எதுவும் சரியான பாதையில் செல்வதாக அவர்கள் நினைக்கவில்லை’ என்று கூறுகிறார்.

இன்றைய இந்தியாவில் நம்பிக்கை மிகஅரிதில் கிடைக்கும் பண்டமாகி விட்டது. நம்பிக்கை இழப்பு என்பது மோடி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்ததற்கான ஒரு குறிகாட்டியாகும் (indicator). ஆனால் இது எதிர்க்கட்சிகளுக்கும், ஜனநாயக அமைப்பிற்குமே ஒரு சவால் ஆகும். இந்தியாவுக்கு நம்பிக்கை மிகவும் தேவைப்படுகிறது.

நம்பிக்கைக்கு சித்தாந்தம் தேவையாகிறது.

இது, நேர்மறையான அரசியல் தொடர்புகளை வடிவமைக்கின்ற ஒரு சவால் அல்ல. இது ஒரு நேர்த்தியான அரசியல் முழக்கத்தையோ அல்லது புதிய வெற்று வேட்டு வாக்குறுதிகளையோ உருவாக்குவது பற்றி அல்ல. இந்தியர்கள் இவற்றையெல்லாம் பார்த்து கடந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் “நல்ல நாள் வரும்” (Ache din ayega) என்பதன் மீது நம்பிக்கை வைத்தார்கள்; பின் யதார்த்தத்தையும் பார்க்கிறார்கள். ஆனால் நம்பக்கூடியதாகவும், களத்தில் பொருந்தக் கூடியதாகவும், ஒரு பாதையைக் காண்பிப்பதாகவும் மற்றும் ஒரு வாகனத்தையும் (இவற்றை செயல்படுத்தக்கூடிய ஒரு கூட்டமைப்பு அல்லது புதிய முழக்கம் அல்லது கட்சிகளுடன் கூட்டு அல்லது இவை அனைத்தும் இணைந்த ஏதோ ஒன்று) வழங்கக்கூடிய ஒரு நம்பிக்கைக்காக இன்னும் மக்கள் ஏங்குகிறார்கள்.

சித்தாந்தங்கள் இதைத்தான் செய்கின்றன. ஒரு சித்தாந்தம் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளவும், அதில் உள்ள தவறுகளைக் கண்டறியவும், மாற்றத்தின் விதைகளை அடையாளம் காணவும், கருத்தளவிலான ஒரு கட்டமைப்பை(framework) வழங்குகிறது. நாம் முயற்சி செய்வது அடைவதற்கான ஒரு கற்பனையான எதிர்கால இலக்கை வழங்குகிறது;. சித்தாந்தமானது நிகழ்காலத்திலிருந்து கற்பனையான எதிர்காலத்திற்கு ஒரு பாதையைக் கண்டுபிடிக்கும். இது மாற்றத்திற்கான முகவர்கள் மற்றும் அவர்களின் செயல் தந்திர உத்திகளின் உதவியுடன் சாத்தியமாகும். சித்தாந்தங்களை மையமாகக் கொண்டிருந்த அரசியல் அமைப்புகள் வீழ்ச்சியடைந்தபின் 21வது நூற்றாண்டில் சித்தாந்தங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பெருவழக்கத்தில் இல்லை.

ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்: தங்களுக்கு எந்த சித்தாந்தமும் இல்லை என்று கூறுபவர்களும் ஒரு சித்தாந்தத்தை, ஊக்குவிப்பவர்களாக உள்ளார்கள். அது இன்றிருக்கின்ற நிலைமை தொடர வேண்டும் என்கின்ற சித்தாந்தமாகும். நமக்கு அது தேவையில்லை. நம்பிக்கையை நிறுவுகின்ற ஒரு கருத்தியல் கட்டமைப்பை வழங்குகின்ற ஒரு சித்தாந்தம் இந்தியாவிற்குத் தேவை. அது முன்னோக்கி பார்க்கின்ற சித்தாந்தமாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள எந்த சித்தாந்தங்களாலும் இதைச் செய்ய இயலாது. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்தாந்தங்களின் சடலங்களுடன், 21 ஆம் நூற்றாண்டில் நாம் மிக நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறோம். அவை ஏற்கனவே 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் காலாவதியானவை; அவை 21 ஆம் நூற்றாண்டில் எந்த அர்த்தத்தையும், அறிவையும் வழங்காது. இது இடதுசாரிகளின் சித்தாந்தந்தங்களுக்கு பொருந்துவது போலவே வலதுசாரிகளின் சித்தாந்தங்களுக்கும் பொருந்தும்.

கடந்தகாலத்தில் பெறப்பட்ட இந்த சித்தாந்தங்கள், புதிய யதார்த்தம் என்கின்ற சதுரவடிவிலான கட்டைகளை, ஏற்கனவே முன்னமே வடிவமைக்கப்பட்டுள்ள வட்டவடிவிலான துளைகளில் திணிக்க கட்டாயப்படுத்துவதாகும். அவை புதிய கருத்துக்கள், புதிய பிரச்சனைகள், புதிய ஆற்றல்கள் ஆகியவற்றை இணைத்துக்கொள்ளுவதில் தோல்வியடைந்திருக்கின்றன. பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, காந்திய சோசலிசம் என்றோ அல்லது அம்பேத்கரிய-பெண்ணியம் போன்ற இருவார்த்தை சேர்க்கைகளோ அல்லது இடது-லிபரல்கள் போன்ற அபத்தமான லேபில்களைக் கொண்டோ ஒட்டுவேலை சித்தாந்தங்களை நாம் செய்ய முயலுகிறோம். இந்த சித்தாந்தங்களோ அல்லது அவற்றின் கலவைவோ இன்று இந்தியாவுக்குத் தேவையான அந்த நம்பிக்கையை உருவாக்கவில்லை என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

‘முழுப்புரட்சி’

இங்குதான் ஜே.பியின் ‘முழுப்புரட்சி’க்கான அறைகூவல் வருகிறது. 1974 இல் அவர் இந்த அறைகூவலைக் கொடுத்த நேரத்தில், அவர் தனது காலத்தில் இருந்த அனைத்து சித்தாந்தங்களையும் அறிந்தவராக இருந்தார். தனது குழந்தை பருவத்தில் ஒரு அப்பாவி தேசியவாதியாகத் இருந்த அவர், பின்னர் தனது இளமை பருவத்தில் மார்க்சியம்-லெனினியவாதியாக மாறினார். அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தீவிர ஆதரவாளனாக இருந்தார். அவர் தனது 40 களில் கம்யூனிசத்தின் மீதான ஏமாற்றம் காரணமாக, முதலில் ஜனநாயக சோசலிசத்திற்கும் பின்னர் காந்தி மற்றும் வினோபாவேவை நோக்கியும் திரும்பினார். 60 களில், அவர் கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரித்தார். முழுப் புரட்சிக்குமான அவருடைய அறைகூவல், அவருடைய அறிவுசார் பயணத்தில் மற்றுமொரு கட்டமாக இருக்கவில்லை. ஆனால் அது அவருடைய முழு அறிவுசார் பயணத்தின் சுருக்கமாக இருந்தது. அதேநேரத்தில் அவருடைய அறைகூவல், நமது நோக்கத்திற்கான 20 ஆம் நூற்றாண்டின் அனைத்து சித்தாந்தங்களையும் ஒருங்கிணைக்க முயற்சித்தது.

ஜே.பி. தான் இருந்த காலக்கட்டத்தை விட முன்னால் இருந்தார். இதனால் அவருடைய கருத்து தவிர்க்க இயலாமல், போதிய விவரங்கள் இல்லாமலும் (sketchy) மேலோட்டமாகவும் இருந்தது. முழுப் புரட்சியானது, அமைப்பையும் அதேநேரத்தில் மனிதனையும் தீவிரமாக மறுசீரமைக்க வேண்டும் என்பதாகும். அதாவது அரசியல், பொருளாதார, சமூக, பண்பாடு ஆகியவற்றைப்போல ஆன்மீகத் தளத்திலும் புரட்சி என்பதைத் தாண்டி அவர் எதுவும் சொல்லவில்லை. ஒரு புரட்சிகர மாற்றம் என்பது வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்றும் ஒரே இரவில் அது நடந்துவிடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவரது கருத்துக்களை நாம் உள்வாங்கிக்கொண்டு நாம் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். ஜே.பியின் பரந்த சிந்தனைப்போக்கில் உள்ளடங்காத சித்தாந்தங்களை நாம் இணைக்க முடியும்: அதாவது புலே-அம்பேத்கரிய மரபு, பெண்ணியம், சுற்றுச்சூழல் போன்றவற்றை. அவர் அதிகம் புரிந்து கொள்ளாத பிரச்சினைகளை நாம் அணுகலாம், ஆராயலாம்: அதாவது சாதி, பாலினம், சூழலியல், தகவல் ஒழுங்கு (information order) போன்றவற்றை. 19 ஆம் நூற்றாண்டு சித்தாந்தங்களின் பல மூடநம்பிக்கைகளை நாம் நிராகரிக்க முடியும்: அதாவது வரலாற்றின் முன்னணிப்படை என்கின்ற கருத்து, புரட்சிகர மாற்றத்திற்கான உலகளாவிய மாதிரிகள் மற்றும் ஒரே நேரத்திலான புரட்சி (one stroke revolution) போன்றவற்றை. ஒரு நல்ல சமூகத்தின் படத்தை ஒரு உலகளாவிய கற்பனையான விடயங்களிலிருந்து உருவாக்குவதற்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களை ஆதாராமாகக் கொண்டு ஒரு புதிய சித்தாந்தத்தை நம்மால் உருவாக்க முடியும். புரட்சி என்ற கருத்தை நாம் புரட்சிகரமாக்க முடியும்.

அத்தகைய ஒரு சித்தாந்தத்தை உருவாக்குவது நம் காலகட்டத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். இது அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் அணிகளுக்கும் மட்டுமே ஒரு சவால் அல்ல, இது அனைத்து சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் போன்ற அனைவருக்குமான சவால் ஆகும்.

(குறிப்பு: கடந்த 05-06-2021ம் தேதியை முழுப்புரட்சி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyuktha Kissan Morcha) கொடுத்த அறைகூவலையொட்டி எழுதப்பட்ட கட்டுரை இது.)


கட்டுரையாளர்:
பேரா.யோகேந்திர யாதவ்,
அகில இந்திய தலைவர்,
சுயஆட்சி இந்தியா.

மொழி பெயர்ப்பாளர்:
கே.பாலகிருஷ்ணன், சுயஆட்சி இந்தியா.

Leave a Reply