Home>>இந்தியா>>முல்லைப் பெரியாறு ஒரு துரோக வரலாறு
முல்லை பெரியாறு அணை
இந்தியாகட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு ஒரு துரோக வரலாறு

1798ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி முல்லையாறு, பெரியாறு ஆகிய நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளுக்குக் கொண்டு வர திட்டமிட்டார். ஆனால் போதிய வசதியில்லாததால் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு இராணுவ பொறியாளாராக வந்த கர்னல் ஜான் பென்னி குயிக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, தமிழ்நாட்டிற்கு திருப்பிவிட்டு, வறண்ட நிலங்களை விளைநிலங்களாக்கும் நோக்குடன் முல்லை பெரியாறு அணையைக் கட்டத் திட்டமிட்டார். இதன் அடிப்படையில் 1893-இல் ஆங்கில அரசின் ஒத்துழைப்புடன் அணை கட்டும் வேலையைத் துவங்கினார். பல சிரமங்களுக்கு இடையில் கட்டப்பட்ட அணை பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டது. ஆங்கில அரசு மேலும் நிதித் தர மறுத்து விட்டது. இதனால் மனம் உடைந்த பென்னிகுயிக் தனது சொந்த நாட்டுக்குச் சென்று, தனது சொத்து களை விற்று முல்லைப் பெரியாறு அணையை 1895-இல் கட்டி முடித்தார். இதில் தமிழக மக்களின் உழைப்பு மிக மிக முக்கியமானது ஆகும்.

1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி பெரியாறு சுற்றியுள்ள 8000 ஏக்கர் நிலத்தை ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.5 வீதம் ரூ.40 ஆயிரம் குத்தகை தருவதாகவும் 999 ஆண்டுகளுக்கு (கி.பி.2885-ம் ஆண்டு வரை) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்த பத்திரத்தில் பிரிட்டிஷ் அரசு சார்பாக லண்டனிலுள்ள இந்திய அமைச்சரவை செயலர் ஜான் சைல்டு கேனிங்டனும், திருவாங்கூர் மகாராஜா வைகாசம் சார்பாக வெங்கம் இராமையங்கர் அவர்களுக்கும், இடையே 29.13.1886 இல் அரசாணை 796 இன் படி ஒப்பந்தம் போடப்பட்டது. முழு தண்ணீரும் சென்னை (தமிழ்நாடு) இராஜதானிக்கு உரியது. இதன்படி 777 சதுர கி.மீ. (254 ச.மைல்) பகுதியில் உள்ள நீர் முழுமையும் தமிழ்நாட்டிற்கு உரிமையுடையது. அணை கட்டுப்பகுதி 104 ஏக்கருக்கும், நீரில் மூழ்கும் 8000 ஏக்கருக்கும், வருடத்திற்கு, ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் பிரிட்டிசு அரசு திருவாங்கூர் அரசுக்கு வாடகை கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கானது.

முல்லைப் பெரியாறு அணை 1,241 அடி நீளமும், 158 அடி உயரமும் 8,000 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பளவும் கொண்டது. அணையிலிருந்து வெளியேறும் நீரானது வைரவன், சுருளி ஆறுகளில் கலந்து 60 கி.மீ. தூரம் பயணம் செய்து, வைகை ஆற்றை அடைகிறது.ஒப்பந்தப்படி 104 அடி உயரத்திற்கு மேல் அணையில் உள்ள நீர் மட்டுமே தமிழகத்திற்கு விடப்படுகிறது. 152 அடிக்கு நீர் தேக்கி வைக்கப்படும் போது மட்டுமே தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,17,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் மதுரை நகர மக்களின் குடிநீர் வசதியும் நிவர்த்தி அடையும். தமிழக மக்களின் வாழ்வாதாரமாக இந்த அணை உள்ளது.

இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08, 144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம், சின்னமனூர் மற்றும் தேனி – அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டிவாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.

இடுக்கி அணையும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையின் ஆரம்பமும்:
    
1963 இல் மிகப்பிரபலமான கேரள பத்திரிக்கையான மலையாள மனோரமாவில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று வந்த பொய்பிரச்சாரம் தான் இந்தப் பிரச்சனையின் ஆரம்பம். பிறகு 1979 அக்டோபரில் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது என மறுபடியும் தனது பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்தது.

1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப, கேரள அரசு அணையின் நீர்தேக்கும் அளவை மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவை ஏற்க மறுத்தது. மார்ச் 18, 2006இல் தேதி கேரள சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது.

தீர்ப்பின் விவரம்:

*உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அச்சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும்.

*2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும்.
இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில் அமைய வேண்டும்.

*குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து இக்குழு கண்காணிக்கும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும்.

* அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்.

* புதிய அணை கட்டும் விஷயத்தில், கேரள அரசு தன் முடிவை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. புதிய அணை கட்டுவதென்றால், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில் இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது. இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்தைத் தலைவராகவும், இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி. டி. தட்டே, இந்திய அரசின் நீர் ஆணையத்தின் முன்னாள் தலைமைப் பொறியாளர் பி. கே. மோஹதா, தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி அரு. இலக்சுமணன், கேரள அரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ஆனாலும் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கேரளாவில் நல்ல மழைபெய்யும் போதும் அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி அதை உடைக்கவேண்டும் என்ற கோரிக்கை கேரள மக்களிடையே ஒரு பொது கருத்தாகிவிட்டது. அது இந்த வருடமும் தொடர்கிறது. ஆனால் இந்த முறை கேரள நடிகர்களும் இந்த பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். ஏற்கனவே அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அணையின் நீர்மட்டத்தை வெகுவாக குறைத்து தமிழகத்தை வஞ்சித்த கேரள அரசு தற்போது முல்லைப் பெரியாறு அணையை தங்கள் மாநில பாதுகாப்பை காரணம் காட்டி இல்லாமல் செய்து தமிழகத்தை முழுவதுமாக வஞ்சிக்க எண்ணுகிறார்கள்.

உண்மையிலேயே கேரள அரசு சொல்வதில் நியாயம் உள்ளதா? முல்லைப் பெரியாறு கேரளாவுக்கு ஆபத்தா? என்பதைப்பற்றி நம் மனதில் தோன்றிய சில சந்தேகங்களை முன்வைப்போம்.

1. முல்லைப்பெரியாரு அணை பாதுகாப்பாகதான் உள்ளது என்று வல்லுநர் குழு ஆராய்ந்து தெரிவித்தப் பின்னரும், 142 அடி வரை நீர்தேக்கிக்கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பின்னும், கேரள அரசு இப்படி ஒவ்வொரு ஆண்டும் அணையின் பாதுகாப்பு பிரச்சினையை கிளப்பிவிடுவதில் என்ன நியாயம் உள்ளது?? வேண்டுமென்றால் மீண்டும் ஒரு வல்லுநர் குழுவை வைத்து அணையை பரிசோதிக்க வேண்டுகோள் வைக்கலாமே..

2. அணையில் அளவு கடந்த நீரை சேர்த்து வைக்கும் போதுதானே பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. பெரும் மழைக்காலங்களில் அணையின் பெரு வாரியான நீரை தமிழகத்திற்கு திறந்துவிடலாமே. இதன் மூலம் அணையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமே. ஏன் அளவு கடந்த நீரை தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும்??

3. அப்படியே திடீரென்று முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட அந்த நீரெல்லாம் நேரடியாக கேர்ளாவிற்குள் சென்றுவிடுமா??முல்லை பெரியாறுக்கு கீழே இடுக்கி அணை உள்ளதே.

இதன் உயரம் 167.68 மீட்டர்கள். இந்த அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியுடையது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. மின் உற்பத்திக்குப்பிறகு நீரானது அரபிக்கடலில் கலக்கிறது.

முல்லை பெரியாறு அணையை விட 4 மடங்கு பெரிய அணை இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையில்லா விட்டாலும் அதன் தண்ணீர் இடுக்கி அணைக்கு தான் போகும் எந்த ஊருக்குள்ளும் போகாது.
இடுக்கி அணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட விவசாயத்திற்கு பயன்படுத்தப் படவில்லை. மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுகிறது. இப்படி ஒரு back up வசதி இருக்கும் போது முல்லைப்பெரியாறு அணையால் என்னமோ கேரள மாநிலமே அழிந்து போவது போல மிகைப்படுத்துவது ஏன்??

கேரள அரசு பொய்யான அச்சுறுத்தலையும், மிகைப்படுத்தப்பட்ட மிரட்டல்களையும் கைவிட்டு விட்டு யதார்த்தமான, பாரபட்சமின்றி இரு மாநிலங்களும் பயன்படத்தக்க வகையில் உண்மைநிலை பற்றிய பேச்சுவார்த்தையை செய்ய முன்வர வேண்டும். ஏற்கனவே கனிம வளங்களை தமிழ் நாட்டில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நமது நீர் ஆதாரத்தையும் பறித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் நமக்கு கொடுக்க நினைப்பது மருத்துவக்கழிவுகளை மட்டுமே.

காவிரி விடயத்தில், பாலாறு விடயத்தில், கனிம வள விடயத்தில் தமிழகத்தை கைவிட்டது போல இந்த முல்லைப் பெரியாறு விடயத்திலும் தமிழக அரசு மக்களை கைவிட்டு விடுமா என்ற சந்தேகம் எழாமல் இல்ல. பொறுத்திருந்து பார்ப்போம்.


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply