“தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்.
விதி 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்ற இன அழித்தொழிப்புப் போரின் போது தப்பித்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் சுமார் 60 சதவீதமானவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது முன்னோர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இலங்கையில் இருக்கும் தேயிலைத் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கென்று அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபொன்னர் அங்கு இயற்றப்பட்ட 1948 ஆம் ஆண்டு இலங்கை குடியுரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எல்லோரையும் நாடற்றவர்களாக ஆக்கிவிட்டனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1964 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தும் செய்யப்பட்டனர். மீதமுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களையும் இந்தியாவில் மீள் குடியமர்த்தும் செய்வதற்கு 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இந்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்தது.
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்திய வம்சாவளித் தமிழர்களை மீள்குடியமர்த்தம் செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் இருக்கும் இந்திய வம்சாவளிய் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று
இரவிக்குமார் அவர்கள் தெரிவித்தார்.
செய்தி சேகரிப்பு:
ஸ்ரீதர்,
திருவாரூர்.