Home>>அரசியல்>>தமிழ்நாடு அரசின் 2021 – 2022 நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
அரசியல்செய்திகள்

தமிழ்நாடு அரசின் 2021 – 2022 நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழ்நாடு அரசின் 2021 – 2022 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில், நீர்ப்பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தை, காவிரி டெல்டாவில் செயல்படுத்த திட்டம், மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளின் மூலமாக, விவசாயம் மேம்படுவதோடு, விவசாயிகளும் பலன் பெறுவார்கள்.
மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான ஆய்வு, காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, மீன்பிடிதுறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் திட்டங்களாகும்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும், ஊதியத்தை ரூ300 வழங்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
பெண்களின் வளர்ச்சி, நலனைக் கருத்தில் கொண்டு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கொரோனா சிறப்பு கடன் உட்பட ரூ20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கதக்கவை.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 90 இலட்சம் மண்ணின் மைந்தர்கள் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இச்சூழலில், காவல்துறையில் உள்ள 14,317 காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, வேலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பின் தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைப்பு ஆகிய திட்டங்களின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் வாயிலாக, அவர்களின் பொருளாதாரம் மேம்படும்.
கல்வித்துறையில் மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும். அதற்கேற்ப, பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி நிதியும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மலைக்கிராம மாணவர்களுக்கு கல்வி என்பது எட்டக்கனியாக இருக்கும் இச்சூழலில், மலைப்பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
தமிழர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் பறைசாற்றும் கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதோடு, அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
பெட்ரோல் விலையை ரூ.3 குறைப்பு, அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டரங்குகள், இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகம் அமைப்பு, சுற்றுச்சூழல் கண்காணிக்கப்பு மையம், கிராமப்புற வீட்டு வசதிக்கு நிதி ஒதுக்கீடு,குக்கிராமங்களை மேம்படுத்த அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் நகரப்புற மேம்பாடு திட்டம், சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும்.
மொத்தத்தில், இந்த 2021-2022 நிதிநிலை அறிக்கை என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும்.
2021-2022 நிதிநிலை அறிக்கையின் வாயிலாக தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என வேல்முருகன் பகிர்ந்துள்ளார்.
செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி

Leave a Reply