Home>>அரசியல்>>ஆட்சியைக் கலைக்க தயாராகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
அரசியல்உலகம்கனடாசெய்திகள்தேர்தல்

ஆட்சியைக் கலைக்க தயாராகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை உள்ளன.

அரசியல்சட்ட முடியாட்சி (Constitutional Monarchy) முறையை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட மக்களவை மற்றும் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை கொண்ட செனட் சபை ஆகிய இரட்டை அமைப்பை இந்த நாடு கொண்டுள்ளது.

கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்களவை பொதுத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

2015ஆம் நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184 பேர் வெற்றிபெற்றிருந்தனர். 99 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தையும், 44 இடங்களுடன் நியூ டெமாகிரட்டிக் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தது.

2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 157 பேர் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும் பெரும்பான்மையைப் பெற இயலவில்லை.கனடாவில் லிபரல் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ (JustinTrudeau) பிரதமராக இருந்து வருகிறார்

முக்கியமான சட்டங்களையெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனே நிறைவேற்றும் நிலை நீடித்து வந்தது. இந்தச் சூழலில் அண்மையில் நாடாளுமன்றத்தில் விஷமத்தன்மையும், இடையூறும் அதிகமாக இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது, பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த ஜஸ்டின் ட்ரூடோ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை, ஒரு விரைவான தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 20,2021 அன்று தேர்தல் நடைபெறும் என தெரியவந்துள்ளது

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், கனேடிய குடிமக்கள் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீட்பதற்கான தனது லிபரல் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை உறுதி செய்ய ஒரு புதிய ஆணை தேவை என்று கூறியுள்ளார் .

தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இரண்டு வருடம் மீதமுள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் , கனடா

Leave a Reply