Home>>ஆன்மீகம்>>பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு!
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு!

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை – வழிபாடு!


தமிழ்ப் பெருங்கடவுளான திருமுருகப் பெருமான் எழுந்தருளும் திருச்செந்தூர் திருக்கோயிலில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று (24.08.2021) தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.
“அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஆங்காங்கு தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல் கட்டமாக இத்திட்டம் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், தமிழ்ப் பெருங்கடவுளான முருகனுக்கென அமைந்துள்ள திருச்செந்தூர் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற நோக்கில், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் இன்று (24.08.2021) காலை – தமிழில் அர்ச்சனை நடத்தி சிறப்பு வழிபாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. குமரகுருபரன் அவர்களை நேரில் சந்தித்து இதற்கான ஏற்பாடு செய்வதற்காக வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்று, ஏற்பாடுகள் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி, இன்று காலை – தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அவர்கள் தலைமையில், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார் (பதிணென் சித்தர் பீடம்), தேனி மாவட்டம் – குச்சனூர் வடகுரு மடாதிபதி அருட்திரு. குச்சனூர் கிழார், சேலம் – சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா, திருவல்லிப்புத்தூர் சைவத்தமிழ் வழிபாட்டு மன்றம் திரு. மோகனசுந்தரம் அடிகளார், வத்தலகுண்டு திரு. பொன்னுசாமி அடிகளார், தூத்துக்குடி மாவட்ட தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பாளர் திரு. மு. தமிழ்மணி, மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் திரு. அருணா, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன், பொருளாளர் திரு. அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் புளியங்குடி க. பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, க. விடுதலைச்சுடர், இரெ. இராசு உள்ளிட்ட திரளான தமிழின உணர்வாளர்களும், சிவனடியார்களும் ஆண்களும் பெண்களுமாக திருச்செந்தூர் கோயிலில் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் திரு. அன்புமணி, உதவி ஆணையர் மற்றும் ஆலய அதிகாரிகள் முன்னிலையில் தமிழில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆலயத்தினுள் கிருட்ணமூர்த்தி அர்ச்சகர் போற்றிப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்தார். கருவறையிலும் நான்கு அர்ச்சகர்கள் மிகச்சிறப்பாக தமிழில் மந்திரங்களும், பாடல்களும் பாடி பூசை நடத்தினர். தெய்வத் தமிழ்ப் பேரவையின் தூத்துக்குடி மாவட்டக் கிளை இதற்கான ஏற்பாடுகளை செய்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் தமிழில் அர்ச்சனை மேற்கொள்ள வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

இன்றிலிருந்து திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதை மேற்கொள்ளும் அர்ச்சகர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இதுபோல் அனைத்துத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் தானே சென்று தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்தக் கோர வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்தால், அதுகுறித்து உடனடியாக நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள் விடுத்தார்.


செய்தி உதவி:
தெய்வத் தமிழ்ப் பேரவை

Leave a Reply