ஈரடியில் முக்காலமளந்த “ஐயன் திருவள்ளுவர்” குறிப்பிடும் வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்* எனும் முத்தான குறளுக்கு முழுவதும் எதிரானதாக இருப்பதே இன்றைய விளம்பரங்கள்.
விளம்பரங்கள் என்பது நாம் நினைப்பது போல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நம்மிடம் உள்ள ரிமோட் கண்ட்ரோல் மூலம் கடந்து போவதல்ல.. நம் நாட்டில்.. ஊரில்.. நம் வீட்டில்.. நம் அனுமதி இல்லாமலே நிறைந்திருப்பது விளம்பரங்களே.
வில்லியம் சேக்ஸ்பியர் கூற்றுப்படி “உலகம் இன்னும் பொய்யெனும் ஆபரணத்தால் ஏமாற்றப்படுகிறது” என்கிறார். நம் மூளையை சலவை செய்து நாம் எதை வாங்க வேண்டும்? எதை வாங்க கூடாது? எது தேவை? எது தேவையில்லை? என விளம்பரங்களே முடிவு செய்கின்றன!. இதை “கிராமத்தில் ஒரு சொலவடை சொல்வார்கள் பொய்ய பொருந்த சொன்னா நிஜம் நின்றுகொண்டு முழிக்கும்” என்று.
விளம்பரங்களின் சாத்தியம் சொல்ல ஒரு உதாரணம் போதுமானதாக இருக்கலாம். புகைப் பழக்கம் ஆரம்பத்தில் வேண்டத்தகாத வெறுக்கத்தக்க விஷயமாகவே இருந்தது. புகை பிடிக்கும் போது ஏற்படும் இருமல் நாற்றம் மற்றும் சுற்றியுள்ள நட்புகளின் வெறுப்பு குடும்பத்தில் உள்ளவர்களின் வெறுப்பு என அதன் முகம் கோரமாக இருந்தது அவமானமாக இருந்தது.
ஆனால் அதை விளம்பரங்கள் “எவ்வாறு சாத்தியமாக்கியது” என்றால் அந்த மக்கள் புகைப்பிடிப்பது ஆண்மையின் அடையாளம் என்றும் வீரத்தின் விளை நிலம் என்றும் வெற்றியின் ரகசியம் என்றும் பெண்கள் விரும்பும் பொக்கிஷம் என்றும் அடிக்கடி விளம்பரங்களில் இடம் பெறச் செய்து கொண்டே இருந்ததனால் நாளடைவில் புகைபிடிக்கச் செய்தார்கள்.
அந்த புகைபிடிக்கும் பழக்கத்தை எந்தளவு கொண்டு சென்றார்கள் என்றால்.. சிகரெட் பாக்கெட்டின் அட்டைப் படத்தில் உள்ள ஒரு படம் சாதாரண ஒரு மனிதர் பார்த்தால் அவருக்கு வாந்தி வந்துவிடும் அந்த அளவுக்கு அருவருப்பான புகைப்படத்தை பார்த்து கொண்டும் அதை சகித்துக் கொண்டும் புகை பிடிக்கிறார்கள் என்றால்… இப்போது புரிந்திருக்கும் விளம்பரங்களின் சக்தியும் சாத்தியமும் என்னவென்று.
“ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்தால் அது பழக்கமாகிறது ஒரு விளம்பரத்தில் தொடர்ந்து பார்த்தால் அது வழக்கமாகிறது பின் வாழ்க்கையாகிறது”. ஒரு சுவாரசியமான சம்பவம் ஒரு குறிப்பிட்ட புகை பிடிப்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்திருந்தார் புகைப்பிடிக்கும் நிறுவனத்தின் மீது புகைப்பான் பற்றிய விளம்பரம் அனைத்தும் பொய் சொல்லி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள் என்று. புகைப்பான் நிறுவனத்தின் வழக்கறிஞர் வாதாடியது உண்மை என்று வாதாடினார். விடயம் என்னவெனில்
1. முதலாவது புகைப்பிடித்தால் திருடன் வீட்டுக்கு வரமாட்டான்.
2. பெண் குழந்தை பிறக்காது.
3. முதுமை வராது இவ்வாறு சொல்லி அந்த புகைப்பான் கம்பெனி விளம்பரம் செய்திருந்தது என்றுதான் வழக்கு பதியப்பட்டுள்ளது. வாதாடிய வழக்கறிஞர் எவ்வளவு தந்திரமாக இதை கையாண்டார் என்றால்
1. முதலாவது கேள்விக்கு பதில் புகைப்பிடிக்கும் போது அவனுக்கு இருமல் காசநோய் போன்றவை வரும் இருமிக் கொண்டே இருப்பதால் இரவில் உறங்க மாட்டான் அவன் உறங்காமல் இருப்பதால் திருடன் வீட்டுக்கு வரமாட்டான். ஆதலால் முதலில் நாங்கள் கூறியது சரியே.
2. இரண்டாவது பெண் குழந்தை பிறக்காது என்று கூறி இருந்தோம்.
உண்மையே புகைப்பழக்கம் இருப்பவனுக்கு ஆண்மை குறைவால் குழந்தையே பிறக்காது இதில் பெண்குழந்தை எங்கே பிறப்பது?
3. மூன்றாவது முதுமையே வராது என்றோம் ஆம் அவன் இளமையிலே இறந்து விடுவான் ஆதலால் புகைப்பிடிப்பவர்களுக்கு முதுமை வராது என்றார்.
இன்றைய விளம்பரங்கள் மக்கள் மனதில் விதைப்பது என்ன? உப்பும் கறியும் வேப்பங்குச்சியும் கொண்டு பல் துலக்கி கொண்டிருந்தவர்களை இந்த விளம்பரங்கள் மாற்றி பேஸ்ட் என்பதை வழக்கத்தில் கொண்டு வந்துவிட்டு இப்போது உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா? என்று கேட்பதில் என்ன நியாயம்? அரப்பு போட்டுக் குளித்து தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருந்தவர்களை சாம்பு போட்டு குளித்தால் முடி வளரும் என்று சொல்லி அனைத்து முடியும் கொட்டிய பிறகு இப்பொழுது அமேசான் காடுகளில் உள்ள எண்ணெய்யை தேயுங்கள் என்கிறார்கள்.
அங்கு உள்ளவர்களே அரையின்ஞ்ச் முடியோடு தான் இருக்கிறார்கள் என்பதை கூட மறைத்து. இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த துணிகளை தைத்து நாகரிகமாக வாழ்ந்தவர்களை புது துணிகளை கூட கிழித்து போடுவது நாகரீகம் என்று வளர்க்கிறார்கள். ஒரு விளம்பரம் நகையை வாங்குங்கள் என்கிறது. மற்றொரு விளம்பரம் அடமானம் வையுங்கள் என்று.வேறொரு விளம்பரம் அடமானம் வைத்த நகையை எங்களிடம் விற்று விடுங்கள் என்கின்றது. இவர்கள் இறுதியில் என்னதான் சொல்ல வருகிறார்கள். மனித குணம் உதவி செய்வதே ஆனால் இப்போது ஒரு விளம்பரத்தில் நல்ல வேலை நீ எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள்.
உச்சகட்ட வேதனையாக நாட்டையே கேலியாக்கி மூடநம்பிக்கைக்கு சிகரம் தொடுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியானது வீரர்களின் திறமையால் அல்லவாம் சாதாரண மனிதன் சும்மா உட்காருவதால் என்பது எவ்வளவு பெரிய மூடத்தனம். இவ்வாறு இந்த விளம்பரங்கள் விதைக்கும் வினைகள் நல்ல பண்புகளை நசுக்குவதாகவும் பிற்போக்கு சிந்தனைகளுக்கு உரமிடுவதாகவும் உள்ளது. என்றாலும் விளம்பரங்களை அடியோடு வெறுத்து விடுவதற்கில்லை ஒரு சில நல்ல வரம் வழங்கும் நல்ல விளம்பரங்களும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சில.. ஏன் உண்டியலை உடைச்ச இந்த ஒரு விளம்பரத்தில் மகன் தாயின் மீது வைத்த பாசம் தெரிகிறது.
மகிழுந்தின் சக்கரத்தை மாற்றும் ஒரு விளம்பரத்தில் அப்பாவை பார்த்தேன் என்ற ஒற்றைச் சொல்லில் அப்பாவினுடைய உழைப்பு தெரிகிறது. பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரிக்கும் இந்த பொழுதினில் இப்பொழுது ஒரு விளம்பரத்தில் இப்போது நீ தனியா போக ரெடி என்று ஒரு பெண்ணை போர்வாளாக மாற்றி சமுதாயத்துக்கு அனுப்புவது சிறப்பு. சக மனிதர்கள் மீது மனிதநேயத்தை காட்டும் ஒரு விளம்பரத்தில் சுடுநீரில் குளிப்பது சிறந்தது என்கிறார்கள் மற்றொரு தேநீர் விளம்பரத்தில் திருநங்கையர் பற்றிய ஒரு சிறப்பு பார்வையை செலுத்தி இருக்கிறார்கள்.
நல்ல விளம்பரங்களும் ஒன்றிரண்டு அவ்வப்போது இருக்கத்தான் செய்கிறது. ஒரு விளம்பரத்தில் கரை நல்லது என்று இந்த சமுதாயத்தின் ஆசிரியர்களைப் பற்றி உயர்வாக பேசுகிறது. இவ்வாறு இருக்கின்ற விளம்பரங்கள் ஒரு சிலவே. தமிழர்கள் எழுத்துப்பிழையையே சகித்துகொள்ளாதவர்கள் இந்த எண்ணப்பிழைகளை என்ன செய்வதென்பது நமது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மத்திய மாநில அரசுகள் கரங்களில் உள்ளது. இதை சாதாரணமாக கடந்தால் மக்கள் ஆறாத ரணங்களில் அல்லலுறுவார்கள் என்பதில் ஐயமில்லை ஆதலால் இந்த விளம்பரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரங்களில் உண்மையும் நேர்மையும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விளம்பரங்கள் விதைக்கும் வினைகளை அல்லவைகளை அகற்றி நல்லவைகளை நிலைத்திருக்க செய்ய வேண்டும்.
–-
சமூக அக்கறையுடன்,
நேசமுடன் ஈசு (ஆசிரியர்)
அலைபேசி: 9080628870
குறிப்பு: 2052 ஆண்டு, ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் வெளியிடப்பட்ட படைப்பு இது.