இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குடியிருப்பு வசதிகள், ஈழத்தமிழ் குழந்தைகளின் கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் திருச்சி சிறப்பு முகாம் விடயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வேல்முருகன், திரு. ஜவாஹிருல்லா ஆகியோர்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் அடிப்படையில் சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழர்களின் விடுதலை குறித்த முடிவுகள் விரைந்து அறிவிக்கப்படும் என்ற செய்தியும் கிடைத்துள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் அயல்நாட்டவர் சட்டம் 3(2)-இன்படி புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டாலும் கடந்த 1958 முதல் சிறப்பு முகாம்களை நடத்துவது, அயல் நாட்டவரை நாடு கடத்துவது போன்ற நடவடிக்கைகளில் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனால்தான் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அயல் நாட்டவரை அடைக்கும் ஆணை தமிழக அரசின் பொதுத்துறையால் பிறப்பிக்கப்படுகிறது. அதேபோன்று சிறப்பு முகாமின் நிர்வாகம் வருவாய்த் துறையின் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படுகிறது. சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழர்களின் நிதிச் செலவு தமிழக மறுவாழ்வு துறையால் செய்யப்படுகிறது.
சிறப்பு முகாமில் ஈழத்தமிழரை அடைப்பதற்கான பரிந்துரையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கியூ பிரிவு உளவுத்துறை வழங்குகிறது. இந்நிலையில் சிறப்பு முகாம் குறித்த வழக்குகளில் ஆஜராகும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இப்பிரச்சனையில் மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று அண்மை காலமாக உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவிப்பது முரண்பட்ட அம்சமாக உள்ளது.
கடந்த காலங்களில் சிறப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை அரசாணை மூலம் தடுத்து வைக்கும் தமிழக அரசு அதே ஈழத்தமிழர்களை அரசாணை மூலம் விடுவித்த நிகழ்வுகளும் ஏராளம் உள்ளன. எனவே தமிழக அரசு நினைத்தால் சிறப்பு முகாம் விடயத்தில் தெளிவான நடவடிக்கைகளை உடனே எடுத்து நெடுங்காலம் வாடும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் விடியலை கொண்டு வரமுடியும்.
தமிழ்நாட்டில் தங்களை அகதிகளாகப் பதிவு செய்துகொண்டு குடும்பத்தோடு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகப் பெண்களைத் திருமணம் செய்த ஈழத்தமிழர்களும், 70 வயதுக்கும் மேற்பட்ட உடல் நலம் குன்றிய முதியோர், நடக்க இயலாதவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு முகாமில் பல்லாண்டு காலம் துன்புற்று வருவதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய ஒன்றிய அரசு, பன்னாட்டு அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திடாத காரணத்தினால் புலம்பெயர் ஈழத் தமிழர்களைச் சட்டவிரோத குடியேறிகள் என்று ஒற்றை வார்த்தையில் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கும் நிலையில், தமிழக அரசு சிறப்பு முகாம் விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, விரைவான முடிவுகளை எடுப்பது சாலச் சிறந்தது.
சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழர்கள் தங்கள் விடுதலைக்காக பல்வேறு தரப்பினரிடம் பலவகைகளில் முறையிட்டும் எத்தகைய ஆக்கபூர்வமான முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் வேறுவழியின்றி கையறு நிலையில், கைவிடப்பட்ட சூழ்நிலையில் விடுதலைக்கு வழியே இல்லை என்ற உள்ளக் குமுறல் மற்றும் ஆதங்கத்தில் தங்கள் உயிரையும் மாய்த்துக்கொள்ளும் அளவில் தீவிரமான போராட்டங்களுக்கு தள்ளப்பட்டதின் பின்னுள்ள நியாயத்தை தமிழக அரசு புரிந்து கொண்டு கீழ்காணும் வகையில் தெளிவான விரைவான முடிவுகளை எடுத்தால் சிறப்பு முகாம் வாழ் ஈழத்தமிழர்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருப்பார்கள்.
1. தங்களை அகதிகளாகப் பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்திட வேண்டும்.
2. அதேபோன்று அகதிப் பதிவு ரத்து செய்யப்பட்டவர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
3. அகதிப் பதிவுகளே இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து வாழும் ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திரும்பினால் அவர்களுக்கு ஆபத்து இருக்கும் நிலையில் அவர்களுக்கும் அகதிப் பதிவுகள் வழங்கப்பட்டு இந்தியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
4. புலம்பெயர் ஈழத் தமிழர்கள் யாரையும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது.
5. சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஈழத்தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
6. சிறப்பு முகாம்வாழ் ஈழ உறவுகள் தங்கள் விடுதலைக்காகப் போராட்டம் நடத்தியதன் விளைவாக அங்கு பெருவாரியான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மாறாக இன்றளவும் சிறப்பு முகாமில் கடைபிடிக்கப்படும் தேவையற்ற சோதனைகள், அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த தடை செய்வது, வெளியிலிருந்து வரும் உணவுப்பொருட்களை சோதனை என்ற பெயரில் அசுத்தப்படுத்துவது போன்ற கடுமையான கெடுபிடிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை நாட்டில் இன்னும் இனப்பிரச்சனைக்கு முழுமையான அரசியல் தீர்வு ஏற்படாத சூழலில், ஒரு குடும்பம் அந்த நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு தங்கள் விருப்பம் போல் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உள்ளக் குமுறலை புரிந்து தமிழக அரசு சிறப்பு முகாமில் வாடும் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுத்திடும் வகையில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
—
தோ.ம. ஜான்சன்,
ஒருங்கிணைப்பாளர்
தமிழ் வழக்கறிஞர் பேரவை.
புலம்பெயர் தமிழர் நலப்பேரவை.
தொலைப்பேசி எண்: +91 80 566 81 577.
நாள்: 27.08.2021
—
செய்தி உதவி:
மருத்துவர் பாரதிசெல்வன்,
மன்னார்குடி.