Home>>இந்தியா>>ஈழத் தமிழ் அகதிகளுக்குச் சிறப்பு உதவி மேம்பாட்டுத் திட்டம்
இந்தியாஈழம்செய்திகள்தமிழ்நாடு

ஈழத் தமிழ் அகதிகளுக்குச் சிறப்பு உதவி மேம்பாட்டுத் திட்டம்

பழ. நெடுமாறன்‘ஈழத் தமிழ் அகதிகளுக்குச் சிறப்பு உதவி மேம்பாட்டுத் திட்டம்’ முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையை கீழே பகிர்ந்துள்ளோம்:

இலங்கையிலிருந்து உயிர் தப்பி, தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்து, முகாம்களில் உள்ள ஈழத் தமிழர் குடும்பங்களுக்கு சுமார் 320கோடி ரூபாய் செலவில் கீழ்க்கண்ட நலத்திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை உளமார வரவேற்றுப் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.

முகாம்களில் உள்ள பழுதடைந்த வீடுகளைப் புதிதாகக் கட்டுதல், கழிப்பிட, குடிநீர், மின்சார வசதிகள் அளித்தல், குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளித்தல், 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி உதவி, அகதிகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, எரிவாயு இணைப்பு, அடுப்பு அளித்தல், மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி, அனைவருக்கும் கைத்தறி ஆடைகள், போர்வைகள், இலவச சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் அளிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஈழத் தமிழர் அகதி குடும்பங்களுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாகும். இதற்காக முதல்வரை மீண்டும் பாராட்டுவதோடு, கீழ்க்கண்டவற்றையும் நிறைவேற்ற முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

முகாம்களுக்கு வெளியே சென்று வேலை பார்க்கவும், சிறு தொழில்கள், வணிகம் நடத்தவும் அனுமதி வழங்கவேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றையும் நிறைவேற்றி உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

அந்த அகதிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளை முழுமையாக ஐ.நா. அகதிகள் ஆணையம் அளித்து வருகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் தங்களின் தாயகம் திரும்பி தங்கள் வாழ்வை புனரமைக்கும் வரை அனைத்து உதவிகளையும் செய்கிறது.

ஆனால், ஐ.நா. அகதிகள் ஆணையம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவ முன்வந்த போதிலும், அதை அனுமதிக்க இந்திய அரசு மறுக்கிறது. எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்திய அரசுடன் பேசி இதை நிறைவேற்ற முன்வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.


அன்புள்ள,
பழ. நெடுமாறன்


செய்தி உதவி:
மருத்துவர் பாரதிசெல்வன்,
மன்னார்குடி.

Leave a Reply