Home>>செய்திகள்>>மழை – வெள்ளம்: சென்னை திரும்புவதை மக்கள் தாமதிக்க வேண்டும்.
செய்திகள்தமிழ்நாடு

மழை – வெள்ளம்: சென்னை திரும்புவதை மக்கள் தாமதிக்க வேண்டும்.

மழை – வெள்ளம்: சென்னை திரும்புவதை மக்கள் தாமதிக்க வேண்டும்: விடுமுறையை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும்!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் இடைவிடாமல் பெய்துவரும் தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை மோசமடைவது தடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடுமையான மழை பெய்திருக்கிறது என்ற போதிலும் சென்னையில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் 250 மில்லி மீட்டருக்கும் கூடுதலான மழை பெய்துள்ளது. பல இடங்களில் 200 மி.மீக்கும் கூடுதலான மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. சென்னையின் எந்த பகுதியிலும் 100 மி.மீக்கு குறைவான மழை பெய்யவில்லை. இயல்பை மீறி இந்த அளவுக்கு மழை பெய்யும் போது நிலைமையை சமாளிப்பது பெரும் சவாலானது தான். ஆனாலும் இன்று அதிகாலை முதலே முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த செயல்பாடு வரவேற்கத்தக்கது.

எவரும் எதிர்பார்க்கவில்லை என்பதால் பல இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் சற்று தாமதமாகத் தான் தொடங்கின. சென்னையின் பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது.

இத்தகைய சூழலில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அரசு நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும். அரசு அதிகாரிகளால் மட்டும் இது சாத்தியமாகாது என்பதால் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களையும் இந்த பணிகளுக்கு அழைத்து பயன்படுத்தலாம்.

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 4000 கன அடி வீதமும், புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழையும், உபரிநீர் திறப்பும் நீடித்தால் சென்னை மாநகர மக்கள் மிகக்கடுமையான சவால்களையும், இடர்ப்பாடுகளையும் சந்திக்க நேரிடும்.

தீப ஒளி திருநாள் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், விடுமுறை இன்றுடன் முடிவதைத் தொடர்ந்து, சென்னைக்கு திரும்ப முயலக்கூடும். தொடர்மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து சிக்கலானதாகவும், நெருக்கடியானதாகவும் மாறியிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதால் சொந்த ஊர் சென்றுள்ள மக்கள், நிலைமை சீரடையும் வரை அடுத்த சில நாட்களுக்கு சென்னை திரும்புவதை தவிர்க்க வேண்டும்.

தமிழக அரசும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும் நிலைமை சீரடையும் வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த பிற அரசுத் துறைகளுக்கும், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறையை நீட்டிக்க வேண்டும்.


மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.

Leave a Reply