Home>>இந்தியா>>‘திராவிட மொழி குடும்பம்’ எனும் இல்லாத மொழிக் குடும்பம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

‘திராவிட மொழி குடும்பம்’ எனும் இல்லாத மொழிக் குடும்பம்

‘திராவிட மொழி குடும்பம்’ எனும் இல்லாத மொழிக் குடும்பம் இருப்பதாக இட்டுக்கட்டிச் சொன்ன கால்டுவெல்லின் ‘கடுஞ்சறுக்கல்’களைப் பாவாணர் பின்வருமாறு சுட்டிக்காட்டினார்:

“(3) தமிழரை (அல்லது திரவிடரை) உயர்நாகரிகப்படுத்தியவர் ஆரியர். ஆரியர் வருகைக்கு முன், வீடு (மோட்சம்), அளறு (நரகம்), புலம்பன் (ஆன்மா), கரிசு (பாவம்) என்பவற்றைப்பற்றித் தமிழருக்கு ஏதேனுங் கருத்திருந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞரும் நடுவரும் அவர்கட்கில்லை. அறிவனும் (புதனும்) காரியும் (சனியும்) தவிர, மற்றப் பழங்காலத்தாருக்குப் பொதுவாகத் தெரிந்திருந்த கோள்களையெல்லாம் அவர் அறிந்திருந்தனர். ஆயிரத்திற்குமேல் அவர்கட்கு எண்ணத்தெரியாது. மருத்துவ நூலும் மருத்துவரும் மாநகரும் வெளிநாட்டு வணிகமும் அவர்கட்கில்லை. இலங்கையைத் தவிர, வேறெந்தக் கடற்கப்பாலை நாட்டோடும் அவர்கட்குப் பழக்கமில்லை. தீவு அல்லது கண்டம் என்னும் கருத்தைத் தெரிவிக்கக் கூடிய சொல் அவர்கட்கில்லை. படிமைக்கலை, கட்டடக்கலை, வானநூல், கணியம், பட்டாங்கு நூல் துறைகள், இலக்கணம் ஆகியவற்றைப் பற்றி அவர்கட்குத் தெரியாது. அவர்கள் அகக்கரண வளர்ச்சியடையாதிருந்ததினால், மனம், நினைவு, மனச்சான்று, வெள்வு (Will) ஆகியவற்றைக் குறிக்க அவர்கட்குச் சொல்லில்லை என்பது.
“(4) தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது. தமிழர் வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டாதவற்றை விட்டுவிட்டனர் என்பது.

“(5) தமிழ்ப்பெயர்ச்சொல்லின் வேற்றுமையமைப்பு முற்றும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றியது என்பது.” (பாவாணர், தமிழ் வரலாறு, முதற்பகுதி, தமிழ்மண் பதிப்பகம், சென்னை-14, 2000, பக்கங்கள் 27-28.)
மேலும்,

“ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய் நோக்கி, திரவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்”

(பாவாணர், தமிழ் வரலாறு, முதற்பகுதி, பக்கம் 33.)
என்றும் பாவாணர் கூறுவார்.

இல்லாத ‘முந்து திராவிடம்’ (Proto-Dravidian) எனும் பொய்மானை மேயவிட்டவரும் கால்டுவெல்லேயாவார். இதுபோன்ற புரட்டல்கள் தமிழெதிர்ப்பு புரையோடிய திராவிடர்களுக்கும் ‘இந்தி’யர்களுக்கும் நல்ல பற்றுக்கோடானது.

இந்தப் பாடங்களையெல்லாம் அச்சுப் பிசகாமல் அப்படியே ஒப்புவிக்கும் அடிமை தமிழர்களும் உண்டு.
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சிவகளையில் அகழ்வாய்வு நடத்தியபோது கிடைத்த ஒரு முதுமக்கள் தாழியில் மண்ணுடன் கலந்த அரிசி கிடைத்தது. அமெரிக்காவிலிருக்கும் ‘மியாமி பீட்டா பகுப்பாய்வகத்’தில் (Miami-based Beta Analytic Testing Laboratory) அதனைக் கரிமக் காலக்கணிப்புக்கு உள்ளாக்கியபோது,

அந்நெல்லின் காலம் கி. மு. 1155 (அதாவது, இற்றைக்கு 3300 ஆண்டுகளுக்கு முற்பட்டது) என்பது தெரியவந்தது.
2021 ஆகத்து 27 அன்றுதான் அதன் ஆய்வறிக்கை வெளியானது.

இந்தச் செய்தியை தமிழ்நாடு முதல்வர் மு.க. இசுடாலின் அவர்கள் தமிழகச் சட்டப்பேரவையில் அறிவித்தார். பொருநை ஆற்றின் நாகரிகம் இன்றைக்கு 3300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது இதனால் உறுதியானது. மேலும், இந்தப் பொருநை நாகரிகம் இரும்புக் காலத்திற்குரியது.

சிந்துவெளி எழுத்துக்களை ஆய்வு செய்துவந்த பூரணச்சந்திர சீவா அவர்கள் சிந்துவெளியிலிருந்து தான் தென்புலத்திற்கு நாகரிகம் வந்தது எனும் பொருள்படவே சொல்லி வந்தார்.

சிவகளை நெல் எச்சத்தின் காலம் “ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்த கி. மு. 1300ஆம் ஆண்டளவிலேயே” தமிழர்களிடம் இரும்புக்காலம் விளங்கிவந்ததை மேற்கண்ட செய்தி புலப்படுத்துவதாக இன்று அவரே குறிப்பிடுகிறார். சிந்துவெளி நாகரிகத்தில் செம்புக் கருவிகளும் நுண்கற்கால கருவிகளும் புழங்கி புழங்கி வந்தபோது தென்புலம் புதிய கற்கால நாகரிகத்திலிருந்தாகச் சொல்லி வந்தவரும் இவரேதாம்! இது போக, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்விலும் செம்புக் கருவிகள் கிடைத்ததைப் பற்றி அவர் இப்போது ஒப்புக்கொள்வது நல்ல மாற்றம்தான்.

ஆனால், “ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த கி. மு. 1300ஆம் ஆண்டளவில்” பண்டைத் தமிழரிடையே இரும்புக்காலம் விளங்கி வந்ததாக இன்று சொல்வதுதான் சற்று இடிக்கிறது.

வடக்கத்திய வடுகர்தாம் தங்களை ‘ஆரியர்’ எனச் சொல்லிக்கொண்டனர் என்றும், வடுகப் படையெடுப்புகளே ‘ஆரியப்’ படை யெடுப்புகள்தான் என்றும் நான் என் நூல்களில் எழுதிவந்துள்ளேன்.

மேலும், மேற்குலகம் செப்புவதைப்போல் புதிய கற்காலத்தையடுத்து முதலில் செப்புக் காலம், பின்னர் வெண்கலக் காலம், இறுதியில்தான் இரும்புக் காலம் என்பதே ஒரு தலைகீழ்ப் பாடமென ‘எண்ணியம்’ (இரண்டாம் பதிப்பு, 2021, பக்கங்கள் 251-85), ‘தமிழரின் தொன்மை’ (இரண்டாம் பதிப்பு, 2021, பக்கங்கள் 21-39) ஆகிய நூல்களில் நான் விரிவாக வழக்குரைத்துள்ளேன்.

இரும்புக் கனியத்தை நன்கு கனிந்த நெருப்பிலிட்டாலே ‘உயிரகம் குறைத்தல்’ (Reduction) எனும் முறையில் ‘கட்டி இரும்பு’ கிடைத்துவிடும். இதற்கு கடும்நுட்பமான தொழில்நுட்பம் ஏதும் தேவையில்லை.

ஆனால், செம்பை அதன் கனிமத்திலிருந்து உருக்கியெடுப்பது மிகமிகச் சிக்கலான தொழில்நுட்பமாகும். தொல்தமிழர்களைப் பொறுத்தவரையில் இரும்புக் காலத்தையடுத்துத்தான் செப்புக் காலமும் வெண்கலக் காலமும் அடுத்தடுத்து வந்தனவென்றும், இரும்பை உருக்கி எஃகு ஆக்கி அதை உலகெல்லாம் கொண்டு சென்றவர்கள்.

பண்டைய தமிழரே என்றும் உரிய சான்றுகளுடன் என் நூல்களில் சொல்லியிருக்கிறேன்.

கி. மு. 1300ஆம் ஆண்டளவில்தான் தமிழர்களிடையே இரும்புக்காலம் தோன்றியதெனப் பொருள்படும்படக் கூறுவது ஒரு குளறுபடி. 1300ஆம் ஆண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே – புதிய கற்காலத்திலிருந்து இரும்புக் காலத்திற்குப் நேரடியாக – பண்டைத் தமிழர்கள் பெயர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் மெய்.
வடக்கே இருந்துதான் நாகரிகம் தெற்கே வரவில்லை;

தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு, மேற்கு என அது பெயர்ந்தது. இதனால், சிந்துவெளி நாகரிகம் ‘வழிநாகரிக’மே (Secondary Civilization) அன்றி முதல் நாகரிகம் (Primary Civilization) ஆகாது.


கட்டுரை:
அறிஞர் குணா,
Gunaseelan Samuel

கட்டுரை உதவி:
திரு. கலைச்செல்வன்,
திருவாரூர்.

பட உதவி:
இணையம்

Leave a Reply