தமிழ்மூதாட்டி ஔவையார் விநாயகரகவல் பாடியிருக்கும் போது விநாயகர் எப்படி வாதாபியிலிருந்து வந்த அந்நிய கணபதியாக இருக்க முடியும்?
விநாயகர் ஒரு ஆசீவக கடவுள்.
எங்கள் பேரளத்திற்கு அருகில் பூந்தோட்டத்திற்கு மேற்கே செதலபதியில் விநாயகர் அவதரித்த ஆதி விநாயகர் திருத்தலம் உள்ளது.
மாமல்லன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிக்கேசியை தோற்கடித்து வாதாபியை எரித்து திரும்பி வரும்போது பல்லவர்களின் தளபதியான பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்தது தான் வாதாபிக் கணபதி என்பதை கணக்கில் கொண்டு விநாயகரை வந்தேறி கடவுளாக புறங்கூறி வருகிறோம்.
ஆனால் ஒரு விடயத்தை நாம் மறந்து விட்டோம். எந்த ஒரு போரிலும் ஒரு நகரை தீக்கிரை செய்வதென்பது அரிதினும் அரிதான விடயம்.
இதுவரை எத்தனையோ போர்கள் நடைபெற்றாலும் அந்த பகை நாட்டின் தலைநகரை வென்றவர்கள் எரிப்பது என்பது வாதாபியில் மட்டுமே நிகழ்ந்து இருக்கின்றது சோழ மன்னர்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்கும் இடையே போர் நடைபெறும் போது கூட அவர்கள் எதிரியை தோற்கடித்து விட்டோம் என்பதற்காக அவர்கள் இருந்த அரண்மனையை இடித்து பிறகு அதன் மீது கழுதை பூட்டி ஏர் உழுது அதில் தினையை விதைத்துவிட்டு வருவது வரலாற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சோழர்கள், பாண்டியனின் அரண்மனையையும் பாண்டியர்கள் சோழனின் அரண்மனையையும் இதுபோன்று கழுதை பூட்டி உழுது விதைத்து வரலாற்றிலே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் தென்னாட்டில் நடந்த ஒரு போரிலேயே ஒரு தலைநகரை எரிப்பது என்பது மிகவும் வன்மம் நிறைந்த ஒன்றாக வேறு எங்கும் நடக்காத நிகழ்வாக இருக்கின்றது அதனாலேயே மாமல்லன் வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டான்.
ஒரு தலைநகரை எரிக்கும் அளவிற்கான வன்மம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும்?
பழிவாங்குதல் என்ற உணர்வு மூலமாகவே அந்த எண்ணம் ஆனது ஏற்பட்டிருக்கும். ஏன் பழிவாங்க வேண்டும்?
வாதாபி எரிக்கப்பட்டதற்கு காரணம் இதற்கு முன் கிபி 600களின் முற்பகுதியில் ஒரு போர் நடந்திருக்கின்றது அதாவது சாளுக்கிய மன்னனான முதலாம் புலிகேசி பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மன் உடன் ஒரு போர் செய்து அந்தப் போரில் நரசிம்மவர்மனை தோற்கடித்து பல்லவ நாடு முழுவதையும் கைப்பற்றிய பின் சோழமண்டலம் காவிரிக்கரை முழுவதும் கைப்பற்றி அங்கிருந்து செல்வங்களையும் தெய்வ சிலைகளையும் ஆன்மீக வழிபாட்டு தலங்களில் இருந்த சிலைகளையும் எடுத்துச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
வாதாபி எரிப்பை நியாயப்படுத்தும் வண்ணம் முதலாம் புலிகேசி இங்கிருந்து பல பெண்களையும் அதிலும் குறிப்பாக இரண்டாம் நரசிம்மவர்மனின் காதலியையும் கவர்ந்து சென்றான்.
அதனை பழிதீர்க்கும் பொருட்டு தளபதி பரஞ்சோதி தலைமையிலான பல்லவப்படை சென்று இரண்டாம் புலிகேசியை (முதலாம் புலிக்கேசி மகன்) வென்று அந்த நகரத்தை எரித்து அழித்து வரும்போது அங்கிருந்து கணபதி சிலையை கைப்பற்றிக் கொண்டு வந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களும் வரலாற்று புதின எழுத்தாளர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
ஆகையால் இது முதலாம் புலிகேசி காலத்தில் நடந்த அந்தப் போருக்கு இரண்டாம் புலிகேசி இரண்டாம் மகேந்திரவர்மனும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடிய ஒரு காலகட்டத்தை நாம் சிந்தித்துப் பார்க்கும் போது இது வெறும் பெண்களுக்காக நடைபெற்ற போர் அல்ல அக்காலங்களில் நிரை கவர்தல் போல அதாவது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வதை நிரைக்கவர்தல் என்பார்கள்.
எதிரி நாட்டு மன்னனின் பசுக் கூட்டத்தை கவர்ந்து செல்வதை அவனைத் தோற்கடித்து அவனை இழிவுபடுத்துவதாக கருத்தில் கொள்ளப்பட்டது.
அதுபோல எதிரி வணங்கும் கடவுள்களை அவமதிப்பது அவர்கள் வணங்கக்கூடிய அந்த தெய்வ விக்கிரகங்களை எடுத்துச் செல்வதையும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக அக்கால மன்னர்கள் செய்து வந்ததை உணர முடிகிறது. (செல்வ இராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் போல).
அந்த வகையிலே பல்ல முதலாம் நரசிம்மவர்மன் என்று காவிரி கரை வரை படையெடுத்துச் சென்ற முதலாம் புலிகேசி இங்கிருந்து விநாயகர் கடவுளை கைப்பற்றி சென்றிருக்க வேண்டும். அதன் பிறகு நடந்த வாதாபிப் போரில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு அந்த விநாயகர் சிலை மீட்கப்பட்டு இங்கேயே தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும் அதனாலேயே அவர் வாதாபி கணபதி என்று அழைக்கப்படுகிறார். ஆக அவர் தமிழ் ஆசிவக கடவுளே.
ஏனெனில் விநாயகர் வந்தேறி கடவுள் அல்ல என்பதற்காக ஒரு சில ஆதாரங்கள்.
தமிழ் மூதாட்டி எனப்படும் அவ்வையார் அவர்கள் விநாயகர் அகவல் என்ற அகவலை இயற்றியுள்ளார். அதே போல வாதாபி போர் நடந்தது வெறும் 600வது வருடத்தில் ஆனால் பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் சிலையும் கற்பக விநாயகர் சிலையை அதனினும் தாண்டிய ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சிலையாக கருதப்படுகின்றது.
600களில் வந்த விநாயகருக்கு 1400 வருடங்களுக்கு முன் தமிழகத்திலேயே சிலை இருந்தது எப்படி?
அதேபோல பூந்தோட்டம் அருகிலுள்ள செதலபதி என்கின்ற ஊரிலே ஆதி விநாயகர் கோவில் என்கின்ற ஒரு கோவில் உள்ளது அதிலே விநாயகர் ஆண்டவர் குழந்தை வடிவத்தில் ஆனைமுகம் அல்லாமல் அழகு முகத்தோடு சிலையானது வடிக்கப்பட்டுள்ளது அதையே ஆதிவிநாயகர் என்று இன்றளவும் வழிபாடு செய்து வருகின்றார்கள்
அத்தோடு இல்லாமல் விநாயகர் என்கின்ற அந்த வார்த்தை வினை என்றால் தமிழிலே செயல் நாயகர் என்றால் அதற்கு மூல காரணமானவர் என்கின்ற பொருள் ஆக விநாயகர் என்றால் ஒரு செயல் நடைபெற மூல முதற் காரணமாக இருக்கக்கூடிய கடவுள் என்பதற்காக விநாயகர் என்கின்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது இது முற்றிலுமான தமிழ் பெயர்.
அத்தோடு நில்லாமல் ஆசீவகத்தில் யானைக்கு மிக முக்கியத்துவமான ஒரு முக்கியத்துவம் தரப்படுகின்றது அந்த வகையில் பார்க்கும் பொழுது ஆசீவக கடவுளான விநாயகரை புலிகேசி கைப்பற்றி சென்றதை மாமல்லன் தலைமையிலான பரஞ்சோதி படைப்பிரிவு மீட்டு எடுத்து வந்து அதனை கொண்டு அதையே விநாயகர் சதுர்த்தி தினம் என்று நாம் கொள்ளலாம். ஆக விநாயகர் தமிழ் ஆசிவக கடவுளே.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மேலும் இது தரவுகளோடு நாம் இதுபற்றி ஆரோக்கியமாக விவாதிக்கலாமே.
—
கட்டுரை:
பேரளம் பேரொளி,
சமூக ஆர்வலர்.