Home>>அரசியல்>>ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

ஐயா இரட்டைமலை சீனிவாசன்சாதி ஒழிப்புப் போராளி, தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் மறைந்த நாள் இன்று, 18 செப்டம்பர் 1945.

வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் செயல்பட்ட இரட்டைமலை சீனிவாசன் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923- 1939 ஆகிய காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டோரின் குரலாக விளங்கினார். 1939இல் 30 பக்க அளவில் அவர் எழுதிய “திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” பல செய்திகளைத் தருகிறது.

இரட்டைமலை சீனிவாசன் கோவையில் பயின்ற பள்ளியில் 400 மாணவர்களில் 10 பேர் தவிர அனைவருமே பிராமணர்கள். இதை மாற்றியமைக்கப் போராடினார். வறுமைச் சூழலில் வளர்ந்தார். 1891 இல் பறையர் மகாஜன சபையை உருவாக்கினார். அதை 1892இல் ஆதிதிராவிட மகாஜன சபை என்று மாற்றினார். திராவிட மகாசபையின் மாநாடு 10 தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கும் காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தது, அவை ஒடுக்கப்பட்ட மக்களின் பல உரிமைகளை மீட்க பயன்பட்டன. 1917இல் ஆதிதிராவிட மகாசபை எம்.சி. ராஜாவால் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டம் – 1919 – இன்படி உருவாக்கப்பட்ட சென்னை மாகாண சட்டசபைக்கு 5 உறுப்பினர்கள் ஆதிதிராவிடர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 1923ல் இரட்டைமலை சீனிவாசன் சட்டசபை உறுப்பினரானார்.

22.08.1924 இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் கொண்டு வந்த தீர்மானம் மிக முக்கியமானது. பொது வழியில் நடக்கவும், அரசு அலுவலகங்களில் மற்றும் பொது இடங்களைப் பயன்படுத்தவும், கட்டிடங்களுக்கு உள்ளே செல்லவும் ஆட்சேபனை இல்லை என்பது அரசின் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. 1923 முதல் 1939வரை சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்டோர் நலம் காக்க குரல் கொடுத்தார்.

1891 பறையர் மகாஜன சபை உருவாக்கினார். அதை 1892ல் ஆதிதிராவிட மகாஜன சபை என்று மாற்றியமைத்தார். 1891 திராவிட மகாசபையின் மாநாடு நடத்தப்பட்டது அதில் இயற்றப்பட்ட 10 தீர்மானங்கள் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது பல உரிமைகளை பெறுவதற்கு இது வழி செய்தது.

1923 முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். ஒடுக்கப்பட்டோர் நலன் காக்க1922 ஜனவரி 20ஆம் தேதி எம்.சி.ராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு, ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1930- 32 இல் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார் அம்பேத்கருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கோரும் ஆவணத்தைத் தயாரித்தார். அவருடைய அரும்பணி கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராவ் சாகிப், திவான்பகதூர், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கியது. திரு.வி.க, இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு “திராவிடமணி” என்ற பட்டத்தை வழங்கினார். 1945 செப்டம்பர் 18 அன்று 86வது வயதில் இரட்டைமலை சீனிவாசன் இயற்கை எய்தினார்.

அயோத்திதாச பண்டிதரைப் போல பௌத்தத்துக்கு மதம் மாற அழைப்பு விடுக்கப்பட்டபோது, தனக்கு மதம் இல்லை, மதம் இருந்தால்தானே மாறவேண்டும் என்றார். கோயில் நுழைவுப் போராட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தினார்.

காந்தியாருக்கு லியோ டால்ஸ்டாய் திருக்குறளின் பெருமை பற்றிக் கூற, காந்தியார் திருக்குறளைக் கற்க ஆவல் கொண்டார். அவருக்கு திருக்குறள் போதித்து, தமிழில் கையெழுத்திடவும் கற்றுத் தந்தவர் இரட்டமலை சீனிவாசன்.

சாதி ஒழிப்பின் குறியீடாகவும், ஒடுக்கப்பட்ட சமூகப் போராளியாகவும் விளங்கிய ஐயா இரட்டமலை சீனிவாசன் மறைந்த நாள் இன்று!

அவருக்குப் புகழ் வணக்கம் செய்கின்றோம்!


கட்டுரை:
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்,
18 செப்டம்பர் 2021.


பட உதவி:
இணையம்.

Leave a Reply