Home>>இந்தியா>>நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றம்
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி. வேல்முருகன்நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நீட் தேர்வின் கொடுமைகளையும், அதனால் பாதிக்கப்படும் தமிழ்நாட்டு மாணவர்களின் இன்னல்களையும் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு.

குறிப்பாக, ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் நம்பிக்கையை, மருத்துவ கனவை நீட் தேர்வு குழித்தோண்டி புதைத்துள்ளதை அக்குழுவின் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.

நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழ்நாட்டில் 2016 – 17ஆம் கல்வி ஆண்டு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்த 3,000 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, 2020 – 21ஆம் ஆண்டில் 336 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கின்றனர்.

அதாவது, நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளதை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சுட்டிக்காட்டியிருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.

முக்கியமாக, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை நீட் தேர்வு சிதைத்துள்ளது. நீட் தேர்வின் வாயிலாக, ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு என்பது அனுமதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி என்பது 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்றும் சுகாதார பாதுகாப்பு முறையில் மோசமான பாதிப்பு ஏற்படும் எனவும் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீட் தேர்வு, மாநில உரிமைக்கும், மாநில பாடத் திட்டத்திற்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும், சமூகநீதிக்கு எதிரானது என்பது அக்குழுவின் அறிக்கையின் வாயிலாக அம்பலப்பட்டுள்ளது.

ஆனால், நீட் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் மூர்க்கத்தனமாகவே ஒன்றிய அரசு நடந்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

எனவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply