சேலம் மாவட்டம், மோரூரில் தம்பி தொல்காப்பியன் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியும், அதுதொடர்பான காணொளியும் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். காவல்துறையின் முன்னிலையிலேயே நிகழ்த்தப்பட்ட இக்கொலைவெறிச்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சாதி, மதப்பூசல்களும், சமூக மோதல்களும் இல்லாது, சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே, சாதிவெறிப்போக்கை வெளிப்படையாக ஆதரித்து, வன்முறைச்செயலை வேடிக்கைப் பார்த்து நிற்பது வெட்கக்கேடானது.
ஓர் அரசியல் இயக்கத்திற்குத் தங்களது இயக்கத்தின் கொடியை ஏற்றவும், கிளையைத் திறக்கவும் இருக்கும் சனநாயக உரிமையையே முற்றாக மறுத்து, விடுதலைச்சிறுத்தைகளின் கொடியை ஏற்றியதற்காக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வன்முறையை ஏவிவிடும் சாதிவெறியர்களின் இக்கொடுங்கோல்போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அதனைச் செய்யாது, சாதிவெறிக்கும், சமூகப்பிளவுக்கும் துணைநிற்கும் மோரூர் பகுதி காவல்துறை அதிகாரிகளது செயல்பாடும், அதனைக் கண்டிக்காத தமிழக அரசின் நிலைப்பாடும் சமூக இழிவாகும்.
ஆகவே, மோரூர் பகுதியில் சாதிவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாளர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும், அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
—
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.