Home>>கல்வி>>இன்மைப் பணியிட கலந்தாய்வு ஆசிரியர்களுக்குத் தேவையற்றது
கல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

இன்மைப் பணியிட கலந்தாய்வு ஆசிரியர்களுக்குத் தேவையற்றது

#NoNeedZeroVacancyCounseling

இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் அனைத்தும் காலியிடங்களாகக் (Zero Vacancy) கருதப்பட்டு பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன் அடிப்படையிலேயே ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வு நடைபெறுவதாய் விடுக்கப்பட்ட அறிவிக்கைக்கு நீதிமன்ற தடையாணை பெற்றனர். அத்தடையை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களுக்கும் பணிமூப்பு அடிப்படையில் இன்மைப் பணியிடமாக அறிவிக்கப்படும் அனைத்துப் பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். வெளிப்பார்வைக்கு இது மிகவும் நியாயமானதாகத் தோன்றினாலும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் நிறைந்த ஒன்றாகும்.

ஆண்டுதோறும் நடத்தப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் வெளிப்படையான கலந்தாய்வுகளால் பலபேர் தம் பணிமூப்பின் அடிப்படையில் தக்க இடத்தில் பணி மாறுதல் அல்லது பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகின்றனர். சொற்ப ஆசிரியர்கள் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறாமல் பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்தியதன் மூலமாக பணியில் இளையோர் ஓரளவு போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடங்களில் பணிபுரியும் சூழல் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், தமக்கும் இன்மைப் பணியிட மாறுதல் கலந்தாய்வு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் என்பன பலவகையானவை. தலைமை ஆசிரியர் பணிநிலையில் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி என்றும் ஆசிரியர் நிலையில் முதுகலை பட்டதாரி, பட்டதாரி, இடைநிலை, தொழிற்கல்வி மற்றும் உடற்கல்வி எனப் பல்வேறு பிரிவுகளும் காணப்படுகின்றன.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே மாநில அளவிலான பணி மூப்பு நிலை நடப்பில் உள்ளது. தொடக்கக்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் ஒன்றிய அலகுகள் அடிப்படையில் பணி மூப்பு கணக்கிடப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் கூட இவர்களது பணி மூப்பு கணக்கிடப்படுவதில்லை.

ஒரு தலைமையாசிரியர் தம் அருகிலுள்ள மற்றொரு ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற்று செல்ல வேண்டுமேயானால் அவர் தலைமையாசிரியர் பணிநிலைக்கு முன்பிருந்த நிலைக்குப் பதவியிறக்கம் செய்யப்படுவார். அதன்பின், அவர் புதிதாக பணிமாறுதல் செல்லும் ஒன்றியத்தில், அங்கு ஏற்கனவே பணிபுரிந்து வரும் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்களுள் மிக இளையவராகக் கருதப்படும் அவலம் உள்ளது.

இத்தகு சூழலில், பல்வேறு குழப்பங்களும் குளறுபடிகளும் அநீதிகளும் முரண்பாடுகளும் மலிந்து காணப்படும் தொடக்கக்கல்வித் துறையில் இன்மைப் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு என்பது சாத்தியமில்லை. அதேவேளையில், அரசின் நல்ல நோக்கம் பகுதியளவு மட்டுமே நிறைவுறும். மாறாக, ஆசிரியர்கள் பெரும்பாலோர் புதிய மன நெருக்கடிகளுக்கு ஆளாவர். குறிப்பாக, ஓரளவு போக்குவரத்து வசதிகள் நிரம்பிய பள்ளிகளுக்கு, பல்வேறு சிரமங்களை அதன் முன்பு அனுபவித்து, விட்டு விடுதலையாகி அண்மையில் பணி மாறுதல் மூலமாகவோ, பதவி உயர்வு காரணமாகவோ வந்து சேர்ந்த பெண் ஆசிரியைகள் பலரும் இதனால் மனக்கலக்கம் அடைந்துள்ளனர்.

பொதுவாக, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழக்கமாக ஆசிரியர்களுக்கு ஒற்றைச் சாளர பொது மாறுதல் கலந்தாய்வு முறையை நடத்தி வந்தால் போதுமானது. அதன் மூலம் தகுதியானவர்கள் தம் பணிமூப்பின் அடிப்படையில் உரிய உகந்த காலிப் பணியிடங்களுக்கு பணி மாறுதல் அல்லது பதவி உயர்வு பெற்று நிம்மதி பெறுவர். அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள வெறும் குறைந்த அளவில் உள்ள அலுவலர்களுக்கு ஒட்டுமொத்த இன்மைப் பணியிட கலந்தாய்வு என்பது ஏற்புடையதாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான பலதரப்பட்ட ஆசிரியர் பெருமக்களுக்கு இது ஒருபோதும் ஏற்புடையதாக அமையாது. இதனால், ஆசிரியர் நலன் மட்டுமல்ல மாணவர் நலனும் கல்வி நலனும் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


முனைவர். மணி கணேசன்,
பள்ளி ஆசிரியர்.


பட உதவி: Photo by Carlos Arthur M.R on Unsplash

Leave a Reply