“சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி”
கொரியன் படங்களை உலகம் முழுக்க உள்ள திரை ரசிகர்கள் கொண்டாட காரணம் என்னவென்று யோசித்து பார்த்தால் அவர்கள் பயன்படுத்தும் திரைக்கதை வடிவம்தான். யாருமே நினைத்து பார்க்க முடியாத ஆங்கிலத்தில் out of the box thinking என்பார்களே அந்த மாதிரி திரைக்கதைகளை தொடர்ந்து படமாக்கி கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் கடந்த வருடம் 2020 ல Lee Chung-hyun இயக்கத்தில் வெளியான Call என்ற படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
பொதுவா நாம வேற ஊர்ல ,வேற நாட்டுல ஏன் வேற கிரகத்துல இருக்கிறவங்க கிட்ட call பண்ணி பேசி பார்த்து இருப்போம்.ஆனால் இந்த call யாருக்குமே புலப்படாத ஒரு அதிசய call.
ஒரே வீட்டில் வாழும் இரண்டு பெண்கள் ஒரு தொலைபேசி அழைப்பு (landline phone call) மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள்.அதனால் ஏற்படும் பிரச்சனைகள், வாழ்க்கை மாற்றங்கள் பற்றிய கதைதான் இந்த படம்.
இதுல என்ன அதிசயம் இருக்கு. ஒரே வீட்டில் இருக்கிற ரெண்டு பேர் தொலைபேசியில் அழைத்து பேசுவதில் என்ன இருக்குன்னு நமக்கு தோன்றலாம். அங்கதான் கதையில் ஒரு திருப்புமுனை.
ஒரே வீடு தான். ஆனால் அந்த ரெண்டு பெண்களும் வாழும் காலம் வேறு.
இருவருக்குமே வயது 28. ஆனால் ஒருவர் 1999ல் அந்த வீட்டில் இருக்கிறார். இன்னொருவர் 2020ல் அதே வீட்டில் இருக்கிறார். இப்படி இந்த வேறுபட்ட காலகட்டத்தில் வாழும் இரண்டு பெண்களை ஒரு தொலைப்பேசி அழைப்பு இணைக்கிறது. அதன் பின் என்ன என்ன நடக்கிறது, இருவர் வாழ்விலும் என்ன என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும் திரைக்கதை ஜாலத்தை செய்துள்ளனர்.
Time travel படங்களில் பொதுவாக வைக்கப்படும் ஒரு தர்க்கம், இறந்த காலத்தில் போய் நாம் ஏதேனும் ஒரு மாற்றம் செய்தால் அது நிகழ்காலத்தில் பிரதிபலிக்கும் என்பதுதான். இங்கும் அதேதான் நடக்கிறது. ஆனால் liveவாக நடக்கிறது. அது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வேறு எந்த படத்திலும் காணாத காட்சியமைப்புகள் visual effects நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஆண்டுகளுக்கு முன் தனது சிறிய வயதில் செய்த ஒரு பிழையால் நடந்த ஒரு தீ விபத்தில் தன் தந்தையை இழந்தும், அதனால் தன் அம்மா மனதளவில் பாதிக்கப்பட்டும் தன் காலில் தீக்காயமும் இருந்த நிலையில் இருக்கும் கதாநாயகி, அந்த தொலைப்பேசி அழைப்பு மூலம் கடந்த கால தோழியின் உதவியால் அந்த தவறை சரி செய்து, தீ விபத்து தவிர்க்கப்பட்ட அதே நேரத்தில், இங்கே நிகழ் காலத்தில் அவளுக்கு ஏற்படும் மாற்றங்களை மகா அற்புதமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
தீக்காயத்தால் தன் காலில் ஏற்பட்ட வடு மறைவதும், தான் வசிக்கும் அந்த வீட்டின் தோற்றம் மாறுவதும்,வீட்டிற்கு வெளியே அவள் அம்மா அப்பாவோடு இருப்பதும் திரைக்கதையின் அற்புதம்.
கடந்த காலத்தில் கதாநாயகி சிறு வயதில் அதே வீட்டிற்கு தன் பெற்றோரோடு வரும் பொழுது தன் சிறு வயது குரலை அந்த அழைப்பு மூலம் கேட்டு கதாநாயகி புளகாங்கிதம் அடைவார். அப்படி ஒரு அற்புதமான காட்சி.
அதே போல அந்த கடந்த கால பெண்ணுக்கு மிகவும் பிடித்த ஒரு இசையமைப்பாளரின் சம கால பாடல்களை கதாநாயகி play செய்ய அதை தன் tape recoderல் பதிவு செய்து கடந்த காலத்தில்(1999) இருக்கும் தோழி கேட்டு ரசிப்பதும் ரொம்பவே சுவாரஸ்யமான காட்சிகள்.
தன் தந்தையை காப்பாற்றி தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிய கடந்த கால தோழிக்கு கதாநாயகி மிகப்பெரிய உதவியை செய்கிறார். இங்குதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல, அதன் பின் நடக்கும் சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. அதன் பின் படம் மிகப் பரபரப்பாக நம்மை இருக்கை நுனியிலேயே வைத்து கட்டிப்போடுகிறது.
நிகழ் காலத்தில் காரில் தனக்கு அருகில் இருக்கும் தன் அப்பா, கடந்த காலத்தில் கொல்லப்படும் போது அப்படியே தன் கண் முன்னே மறையும் காட்சி அசத்தல்..
அதே போல நிகழ் காலத்தில் கதாநாயகி வீட்டிற்கு ஸ்டாராபெரி தோட்ட முதலாளி ஒருவர் சுட்ராபெர்ரி பழங்களை கொடுக்க வருவார். அந்த பழங்களை வாங்கி ஃப்ரிட்சில் வைப்பார் கதாநாயகி, அதில் ஒரு பழம் நசுங்கி அவருடைய உடையில் கரை ஏற்பட்டுவிடும். அந்தத் தோட்ட முதலாளி அம்மா அப்பாவோடு பேசிக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகி மாடிக்கு செல்வார் தனக்கு வரும் அந்த அழைப்பிற்காக. ஆனால் இந்த முறை அந்த அழைப்பில் பேசுபவர் அந்த சுடாபெரி தோட்ட முதலாளி (கடந்த காலத்தில்). தன் உயிரை காப்பாற்றுமாறு சொல்லி உதவி கேட்பார்.
ஆனால் அந்த நேரத்தில் அவர் உயிர் போய்விடும். அவர் உயிர் போகும் அந்த நேரத்தில் இங்கே இவருடைய உடையில் உள்ள அந்த ஸ்டராபெரி கரை தானாக மறைந்து விடும். உடனே கீழே போய் பார்ப்பார் அங்கு தன் அப்பா அம்மா மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் சுடாபெரி தோட்ட முதலாளி பற்றி விசாரிப்பார். அவர்கள் புரியாமல் விழிப்பார்கள். உடனே பிரிட்சை திறந்து பார்ப்பார். அங்கே அந்த பழங்கள் இருக்காது. அதனால் வரை வெற்றிகரமாக இயங்கிய அந்த தோட்டமும் இருக்காது, அசத்தலான காட்சி.
இது போன்று கடந்த காலத்தில் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றமும் நிகழ்காலத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை மிக அற்புதமாக விளக்கி உள்ளனர். ஓவ்வொரு முறையில் கடந்த காலத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் போதும், நிகழ் காலத்தில் உள்ள அந்த சூழல் மாற்றத்தை குறிப்பாக அந்த வீட்டின் மாற்றத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
இன்னும் அற்புதமான மிக முக்கிய காட்சிகள் படத்தில் பல உள்ளன. அதை படத்தில் பார்த்து தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக படத்தை அனுபவித்து பார்க்கலாம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக படத்தின் இறுதி காட்சிகள்.
சும்மா மிரட்டி எடுத்து இருக்கிறார்கள்.
உலக சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு அற்புதமான திரை அதிசயம். உன்னதமான ஒரு திரை அனுபவம்.
“The CALL”.
—
விமர்சனம்:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.