நல்ல அழகான இளையராசா பாடல்களை மறுக்கலவை என்ற பெயரில் பல புதிய இசையமைப்பாளர்கள் சிதைத்து சின்னாபின்னமாக்குகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த பாடலே நமக்கு பிடிக்காத அளவுக்கு சென்றுவிடுகிறது. இளையராசாவின் பாடல்களை கேட்டவர்களுக்கு இந்த மறுக்கலவை அபத்தம் புரியும். ஆனால் வருங்காலங்களில் இளையராசா யார் என்றே தெரியாத அளவுக்கு, புதிய இசையமைப்பாளர்கள் வலுவாக ஆவணப்படுத்தப்படும் போது, இந்த மறுக்கலவை செய்த பாடலின் அசல் காலப்போக்கில் வருங்கால தலைமுறைகளுக்கு தெரியாமல் போகிவிடும். பின் அந்த அபத்தமான அந்த மறுக்கலவை செய்த பாடலைதான் பலர் ஏற்றாக வேண்டும். இல்லை எதிர்க்க வேண்டும்.
ஆனால் கடைசிவரை அதன் அசல் பாடலை கேட்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இல்லாமல் போகலாம்.
காலப்போக்கில், பாடலை ரசிப்பவர்கள் அந்த புதிய இசையமைப்பாளரைத்தான் பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள்.
பாடலை விமர்சிப்பவர்களும் அதே அந்த புதிய இசையமைப்பாளரைத்தான் தூற்றுவார்கள்.
ஆனால் அந்த பாடலின் அசல் இசையமைப்பாளர் இளையராசா மறக்கடிக்கப்படுவார். நல்லதோ கெட்டதோ அந்த புதிய மறுக்கலவை இசையமைப்பாளரைத்தான் சாரும்.
இதை அப்படியே கிந்து மதத்திற்கு பொறுத்திப்பார்ப்போம்.
தமிழர்களின் சமயங்களான சைவம், வைணவம் உள்ளிட்ட சமயங்களில் உள்ள சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட தெய்வங்களை மறுக்கலவை என்ற பெயரில் அவர்களை சுற்றி அறிவுக்கு ஓப்பாத பல கட்டுக்கதைகளையும், வழிபாட்டு முறைகளையும் கூறி ஆரியர்கள் திரித்து விட்டனர். காலப்போக்கில் ஆங்கிலேயர் புண்ணியத்த்தில் கிந்து என்ற சொல் கிடைத்தது அவர்களுக்கு இன்னும் வசதியாக போய் விட்டது. இருக்கும் போது தலைவன், இறந்த பின் இறைவன் என்ற கோட்பாட்டில் இன, குல முன்னோர்களையும், இயற்கையையும் வழிபட்ட தமிழர்களுக்கு கடவுள் பற்றிய பல புனைவுக்கதைகளை கட்டிவிட்டு அதற்கு ஏற்றார்போல் தமிழர்கள் வணங்கிய சிவன், திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியோர் பெயரிலேயே இந்த அபத்த மறுக்கலவையை செய்தது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்தது.
தமிழர்களும் காலப்போக்கில் தங்கள் அடிப்படை மெய்யியலை மறந்து ஆரிய வழிபாட்டு முறையைதான் நம் வழிபாடு என்று நம்பத்தொடங்கிவிட்டனர். பின்னர் அதில் உள்ள அபத்தங்களை எதிர்ப்போர் மற்றும் அதை ஏற்றுக்கொண்டோர் என இரு பிரிவுகள் மட்டுமே உருவாகின.
ஆனால் கடைசி வரை எப்படி அந்த இளையராசாவின் அசல் பாடல் மறைக்கப்பட்டதோ அதே போலத்தான் தமிழர்களின் உண்மையான வழிபாட்டு சமயமும் மறைக்கப்பட்டுள்ளது.
தற்போதுதான் அதை மீட்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பலர் மனதில் எழுகிறது.
யாரோ ஒருவர் செய்த அபத்தமான மறுக்கலவை செய்த பாடலை சான்றாக வைத்து அசல் இளையராசாவின் பாடலை விமர்சிக்கலாமா அல்லது தவிர்க்கலாமா அல்லது இல்லவே இல்லை என்று சாதிக்கலாமா?
இவை அனைத்தும் செய்யலாம். அதற்கு முதலில் அந்த அசல் பாடலை கேட்க வேண்டும் அல்லவா??
முதலில் நம் தமிழர்களின் அசல் சமய வழிபாட்டு நெறிகளை அறிவோம். பின் அது நமக்கு ஏற்றதா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்வோம்.
இதில் இசை மீது நாட்டம் இல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை??
இசை மீது நாட்டம் உள்ளவர்கள் பல கோடி பேர் உள்ளனர். இசை மீது நாட்டம் இல்லாதவர்களுக்கு இளையராசா, பீத்தோவன் மற்றும் அனிருத் எல்லாரும் ஒன்றே. இசையில் கரைந்தவர்களுக்கு மட்டுமே அதன் வித்தியாசம் புரியும்.
கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கு கிந்து, சைவம், மாலியம், குல தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு எல்லாம் ஒன்றே. ஆனால் சமய நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே அதன் வித்தியாசம் புரியும்.
தமிழர் சமய மீட்பு என்பது இறை ஏற்பு பகுத்தறிவாளர்கள் செய்யும் அறிவுப்பூர்வமான செயல்.
இதில் இறை மறுப்பு பகுத்தறிவாளர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்ல. கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க!!
—
கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.
—
பட உதவி: Zac Bromell on Unsplash