Home>>காவல்துறை>>மன்னார்குடியில் வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணியை சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

மன்னார்குடியில் வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணியை சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு

மன்னார்குடி முதல் தெருவில் நேற்று இரவு (22.10.2021) 7 மணிக்கு வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணி ஒருவரை தலையில் சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு நடந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது முதல்முறை அல்ல. நீண்ட காலமாகவே சங்கிலித் திருடர்கள் கைவரிசை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. முன்பெல்லாம் வாகனங்களில் சாலையில் தனியாக போகும் தாய்மார்களிடம் சங்கிலிக் கொள்ளையில் ஈடுபட்ட வந்த திருடர்கள் தற்போது நோட்டம் பார்த்து தனியாக வசிக்கும் பெண்மணியிடம் வீடு புகுந்து அவர்களை தாக்கி நகைப்பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது.

சில நாட்களுக்கு முன்பு E.B நகரில் பூட்டிய வீட்டை உடைத்து தூங்கி கொண்டு இருந்த பெண்மணியிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.

ஆட்கள் நடமாட்டத்துடன் இருக்கும் போதே பகல் நேரத்திலும் இப்படிபட்ட துணிகர சம்பவங்கள் நடக்கின்றன.
ஆனால் திருடர்கள் இன்னும் பிடிபடமால் இருப்பது சட்ட ஒழுங்கு சீரற்ற நிலையில் இருப்பதை காட்டுகிறது.

மன்னார்குடியில் தொடர் சங்கிலி பறிப்புகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. வீடு புகுந்து திருடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஆனால் இதைத்தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு தரப்பில் எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* உடனடியாக மன்னையில் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காணொலி கருவிகள் (CCTV Cameras) போர்க்கால அடிப்படையில் பொறுத்தப்பட வேண்டும்.

* காவல்துறை முகக்கவசம், தலைக்கவசம் போடாதவர்களை கண்காணிக்கும் நேரத்தை தினம் ஊர் முழுதும் ரோந்து பணியில் ஈடுபடுவதில் பயன்படுத்தவேண்டும். குறிப்பாக இரவில் பல சமூக விரோத செயல்கள் ஊரின் பல இடங்களில் நடக்கிறது. (குறிப்பாக பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில்). எனவே இரவு நேர கண்காணிப்பு பணிகள் அவசியம்.

இதுபோன்ற குற்றச்செயல்கள் செய்வதற்கான தைரியத்தை கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கொடுக்கின்றன என்று பரவலாக பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதைப் போலவே மன்னார்குடியிலும் நடப்பதாக பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

இல்லையென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தங்களால் கட்டுப்படுத்த முடியாமல் அரசே மது விற்பனை செய்வதைப் போல ஒரு கட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியாத அரசு டாஸ்மாக்கில் கஞ்சா விற்பனை செய்யும் அவலநிலை வரலாம்.

ஒரு போதைப்பொருள் பல்வேறு குற்றங்களுக்கு வழி வகிக்கிறது. அதற்கு உதாரணமாக மூன்று முகம் படத்தில் வரும் ஒரு கதையை சொல்லலாம்.

ஒருவன் சன்யாசம் மேற்கோள்ள ஒரு சாமியாரை சந்திக்க சென்றான் “சுவாமி. நான் உலக ஆசைகளை துறந்து பற்றற்ற ஒரு சன்னியாசியாக மாற வேண்டும், அதற்கு நீங்கள்தான் எனக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான். அதற்கு சாமியார் “துறவி ஆக வேண்டும் என்றால் அனைத்து ஆசைகளையும் துறக்க வேண்டும். உள்ளத்தூய்மை வேண்டும். அது உன்னிடம் உள்ளதா” என்று கேட்டார். அதற்கவன் “நான் என் வாழ்க்கையில் எந்த குற்றமும் செய்யவில்லை சாமி இதுவரை தூய்மையான மனிதனாகவே வாழ்ந்து உள்ளேன் அதனால் தான் சன்னியாசம் கொள்ள விரும்புகிறேன்” என்று பதிலளித்தான்.

அதை சோதித்து பார்க்க விரும்பியத்துறவி அவனுக்கு ஒரு சோதனை வைத்தார்.

“அப்பனே! உன் உள்ளத்தூய்மையை நான் பரிசோதிக்க வேண்டும். என்னுடன் வா” என்று அவனை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்றார்.

அந்த அறையில் ஒரு அழகான பெண், ஒரு முதியவர், ஒரு மதுக்கோப்பை என்ற மூன்றும் இருந்தன.
அதைக்காட்டிய துறவி “இந்த அறையில் மூன்று விடயங்கள் உள்ளன. அதில் மூன்று வகையான பாவங்கள் உள்ளன. நீ இதில் ஏதோ ஒரு பாவத்தை அவசியம் செய்யவேண்டும். அப்போது தான் உன் பாவத்தை உணர்ந்து வெளி வந்து உள்ளத்தூய்மை அடைய முடியும். எந்த பாவமும் செய்யாமல் அதில் இருந்து வெளிவராமல் துறவி ஆக முடியாது. எனவே நீ ஒன்று அந்த அழகிய இளம் பெண்ணை கற்பழிக்க வேண்டும். இல்லை அந்த முதியவரை கொலை செய்ய வேண்டும் இல்லையென்றால் அங்கிருக்கும் மதுவை அருந்த வேண்டும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பாவத்தை நீ செய்தாக வேண்டும். எது என்பதை நீயே முடிவு செய்துகொள்”என்றார்.

உடனே நம்ம ஆள் யோசித்தான்.கொலை, கற்பழிப்பு பெரும்பாவங்கள் எனவே அதை நாம் செய்யக்கூடாது, மது அருந்துவது ஒன்றும் பெரிய பாவம் இல்லையே அதையே செய்வோம் என்ற முடிவுக்கு வந்து அந்த முழு மதுக் கோப்பையும் குடித்து காலி செய்தான். அவன் உள்ளே சென்ற மது தன் வேலையை காட்டியது. போதையின் உச்சத்தை அடைந்தான். போதை அவன் கண்களை மறைத்து அந்த அழகான இளம் பெண் மீது காமத்தையும் கிளப்பியது. உடனே அவளை அடைய சென்றான். அவள் மறுக்கவே வலுக்கட்டாயமாக அவளை கற்பழிக்க முயற்சி செய்தான் அதை தடுக்க வந்த முதியவரையும் கடுமையாக தாக்கினான். இந்த நேரத்தில் துறவி உள்ளே புகுந்தார் அவனைத் தடுத்து நிறுத்தினார்.

உன்னிடம் உள்ளத்தூய்மை இல்லை நீ துறவறத்துக்கு லாயக்கில்லை என்று கூறி வெளியேற்றிவிட்டார்.

இதிலிருந்து நாம் சொல்ல வரும் கருத்து அனைவருக்கும் புரிந்திருக்கும். அனைத்து குற்றங்களுக்கும் மூல காரணமாக இருப்பது தவறான போதைப்பழக்கம். அதைத்தடுக்க வேண்டியது மிக அவசியம்.

செய்வார்களா??


மன்னை செந்தில்பக்கிரிசாமி.

பட உதவி: Phoebe T on Unsplash

Leave a Reply