Home>>செய்திகள்>>தமிழ் வளர்ச்சித் துறையில் நடக்கும் முறைகேடுகள் மீதான கண்டன அறிக்கை
செய்திகள்தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சித் துறையில் நடக்கும் முறைகேடுகள் மீதான கண்டன அறிக்கை

தமிழ் வளர்ச்சித் துறை அகரமுதலித் திட்ட இயக்குநராக 2018-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்த திரு. தங்க. காமராசு அவர்கள், தான் ஓய்வு பெற பத்து மாதங்களே உள்ள நிலையில் அண்மையில் தமிழ்நாடு அரசினால் பதவியிறக்கம் செய்யப்பட்டு, திருப்பூருக்கு துணை இயக்குநராகப் பணியமர்த்தியது தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், திரு. தங்க.காமராசு அவர்கள், பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு அவ்வளவாகத் தெரியாமல் முடங்கிக்கிடந்த அகரமுதலி இயக்ககத்தை பணிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தன்னலமின்றி பொதுமக்கள் இயக்ககமாக கொண்டு வரவேண்டும் என்றெண்ணி, எண்ணற்ற பல புதிய திட்டங்களை அரசின் உதவியோடு கொண்டுவந்தார். மாணவர்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கல்லூரிகள் தோறும் சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சொற்குவை எனும் புதிய திட்டத்தினை உருவாக்கி, மாணவர்களின் பங்களிப்புடன் 1,00,000-க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவருக்கு மாற்றாக அண்மையில் அகரமுதலி இயக்குநராக திரு.கோ. விசயராகவன் என்பவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் தனது அதிமுக அரசியல் செல்வாக்குப் பின்புலத்துடன் தமிழ் வளா்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டிலும் ஏழு ஆண்டுகளாக ஒரே நேரத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர் திரு.விசயராகவன்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர் திரு.விஜயராகவன் என்பதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி, பிரஞ்சு மொழிகளை கற்றுக் கொடுக்கிறேன் என்று அறிவித்து அவர் கல்லா கட்ட ஆரம்பித்ததே சாட்சி!

அதிமுக அபிமானியான விசயராகவன் மீது 36 வகையான ஊழல் குற்றச்சாட்டுகளை தக்க சான்றுகளுடன் 2019 ஆண்டில் ஊழல்தடுப்புத் துறையில் புகாரளித்ததின்பேரில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு இருப்பினும், இன்றுவரை துரிதமான நடவடிக்கையின்றி விசாரணையில் இருக்கிறது.

குறிப்பாக, போலி பற்றுச்சீட்டு மூலம் சுமார் 30 இலட்சம் மதிப்புள்ள அகராதி வெளியீடுகளை விற்று ஆதாயமடைந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர வைத்தது!

சென்ற அதிமுக ஆட்சியில் இவர் செய்த ஊழல்களுக்குக் கடும் கண்டன அறிக்கை விடுத்த அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் முதன் முதலில் அலங்கரிக்கப்பட்ட அகரமுதலி திட்ட இயக்குநர் பதவியை ஊழல்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒப்படைத்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மேலும் பேராசிரியர் நியமனங்கள், தமிழ்த்துறை விருதுகள் போன்றவற்றில் தகுதியான நபர்களைத் தவிர்த்து, பணம் கொடுப்பவர்களுக்குப் பதவி, விருதுகள் தந்தவரை இயக்குநராக நியபித்து இருப்பது மேலும் ஊழலுக்கே வழிவகுக்கும்.

சிறப்பாக இயங்க வேண்டிய தமிழ் வளர்ச்சித் துறையை ஊழல்வாதிகளிடம் கொடுத்து, மிக மோசமான நிலைக்குக்கொண்டுபோகும் திமுக அரசுக்கு வள்ளுவப் பண்பாட்டு நடுவம் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், தமிழ் வளர்ச்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும் என வள்ளுவப் பண்பாட்டு நடுவம் கோருகிறது.

மேலும், திரு. தங்க காமராசு அவர்களை மீண்டும் அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணி நியமனம் வேண்டும் என்கிற கோரிக்கையையும் தமிழ்நாடு அரசுக்கு வள்ளுவப் பண்பாட்டு நடுவம் வலியுறுத்துகிறது!


தமிழாய்வுத்துறை,
வள்ளுவப் பண்பாட்டு நடுவம்.


செய்தி சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply