அரசுப் பணிகள் தனியார் ஒப்பந்தப் பணிகளாகவும்… பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகி வரும் இன்றைய சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரை கொம்பாக மாறிவருகிறது.
RPwD Act-2016ன் படி தனியார் நிறுவனங்களும் தங்கள் பணி நியமனங்களில் 5 விழுக்காட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அரசின் சார்பில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான எவ்வித முன்னெடுப்புகளும் இல்லாத நிலையில்… தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மனுகொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் 26/10/21 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் ப.ஜீவா அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
மாவட்ட பொருளாளர் நடேசன், மாவட்ட துணைத் தலைவர் இராசையன், மாவட்ட இணைச் செயலாளர் ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கடலூர் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத் தலைவர் வசந்தகுமார், சிவக்கொழுந்து, வெற்றிமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு கேட்டு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளித்தனர்.
—
செய்தி உதவி:
மாற்றுத்திறனாளிகள் உரிமை குரல்