Home>>தமிழ்நாடு>>சோழர்கால கத்திக்கூத்து
தமிழ்நாடுவரலாறு

சோழர்கால கத்திக்கூத்து

சோழர்கால கத்திக்கூத்துசோழர் காலத்தில் சாந்திக்கூத்து, சாக்கைக்கூத்து, விநோதக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, கழைக்கூத்து எனப் பலவகைக் கூத்துகள் இருந்தமை கல்வெட்டுகளாலும் இலக்கியங்களாலும் தெரியவரும் உண்மையாகும். இந்நாள் சர்க்கஸ் அரங்குகளில் காட்டப்படும் கத்தி வீச்சுக் காட்சிகளோடு தொடர்புடையது போலச் சோழர் காலத்தில் கத்திக் கூத்து வழக்கில் இருந்தமையைத் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் சிற்பங்கள் இரண்டால் அறியமுடிந்தது.

கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கண்டப்பகுதியில் கண்டறியப்பட்ட முதல் சிற்பம் ஐந்து ஆடவர்களும் ஒரு சிறுவனும் இணைந்து நிகழ்த்தும் கத்திக்கூத்துக் காட்சியைப் படம் பிடித்துள்ளது. ஆடவர்கள் ஐவரும் முழங்கால்வரை மடித்துக் கீழ்ப்பாய்ச்சிய ஆடையும் பனையோலைச் சுருள் செருகப்பட்ட செவிகளும் பின் கொண்டையாய் அள்ளிச் செருகிய முடிக்கற்றையும் கொண்டுள்ளனர். முதற் கலைஞர் ஒரு கையால் ஊதுகுழலை ஒலித்தபடியே மறுகையில் மற்றொரு ஊதுகுழலைப் பிடித்துள்ளார். புன்னகை மன்னரான இரண்டாமவரின் கைகளிலோ விழாக்கொடி. முறுவலித்த முகத்தரான மூன்றாமவர் தாளச் செம்மல். அவரது இரண்டு கைகளிலும் செண்டு தாளம். இடுப்பிலோ குத்துவாள். ஐந்தாமவர் இளைய கலைஞராய்க் கூத்தரை நோக்கியவாறே மத்தளம் முழக்குகிறார்.

நான்காம் கலைஞரே கூத்தின் நாயகர். இடுப்பில் கத்தி செருகியுள்ள அவரின் வலக்கையில் நீட்டிய பட்டாக்கத்தி. அதன் வெட்டுப்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியுடன் குத்துவாள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதன் கைப்பிடி மேல் ஒரு சிறுவன் முழங்கால் மடக்கி அமர்ந்துள்ளான். முழங்கை அளவில் மடக்கப்பட்ட அவனது இரு கைகளிலும் உள்ள சிறு கத்திகள் உடலின் சமநிலைக்காக ஏந்தப்பட்டவையாகலாம். கூத்தரின் இடக்கை விரிந்த நிலையில் பந்தொன்றை உயரே எறிந்து பிடிக்கிறது. நிமிர்த்திய முகத்தரான அவரது மூக்கின் மேல் கூர்முனை அமைய நிற்கிறது மற்றொரு கத்தி. மூன்று கத்திகளும் கத்தி மேல் சிறுவனும் பந்து விளையாட்டும் எனச் சோழர் காலக் கூத்தர், காற்றுக்கருவி, கஞ்சக்கருவி, தோல்கருவி எனும் மூன்று வகை இசைக்கருவிகள் முழங்க நம்மை மயக்கும் இந்தத் திறனார்ந்த காட்சி தமிழ்நாட்டுச் சிற்ப அற்புதங்களுள் ஒன்றாகும்.


நன்றி:
திரு.கலைக்கோவன்
திருமதி.மு.நளினி


கட்டுரை உதவி:
திருச்சி பார்த்தி,
ஆற்றுப்படை

Leave a Reply