வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் அறிக்கை, மற்றும் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும்! என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையை கீழே பகிர்ந்துள்ளோம்.
நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இருளர் சமுதாயத்து அப்பாவி இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்டதையும், அந்த இளைஞரின் மனைவி போராடி நீதி பெற்றதையும் அடிப்படையாக வைத்து ‘ஜெய்பீம்’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவது தான் இந்தத் திரைப்படத்தின் நோக்கம் என்று படக்குழு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. நல்லது.
மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதற்கானது என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒரு திரைப்படம், உண்மைகளை மறைத்து பொய்களைக் கட்டமைக்க முயன்றிருப்பதும், தங்களின் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிக் கொள்வதற்காக, நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட முயன்றிருப்பதும், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தியிருப்பதும் அருவருக்கத் தக்கவை ஆகும். திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்திற்கும், திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அவை திரைப்படக் குழுவினரின் முகத்திரையைக் கிழித்து அகத்திரையையும், அதில் படிந்து கிடக்கும் அழுக்கு – சகதிகளையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட, அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலை நிறுத்துவதற்காகத் தான் படக்குழு பாடுபட்டிருக்கிறது. அழுக்கு மனதுடனும், வடிகட்டிய வன்மத்துடனும் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞனை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொடுமைப்படுத்தி படுகொலை செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளரை வன்னியர் என்று காட்டும் நோக்கத்துடன் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் நாட்காட்டி இருப்பது போன்று காட்சிப் படுத்தியுள்ளனர். இது வன்னியர்களுக்கு எதிரான அப்பட்டமான சாதி வன்மம். உண்மையில் நடந்த நிகழ்வில் கொல்லப்பட்டவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை அடித்துக் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர் அந்தோணிசாமி என்ற பெயர் கொண்ட தலித் கிறித்தவர் ஆவார்.
ஆனால், உண்மையான குற்றவாளியின் சாதிய அடையாளத்தை மறைத்து விட்டு, அவரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக காட்டியிருப்பதும், படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மையான பெயரே சூட்டப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் அந்தோணி சாமி என்று வைக்காமல் குருமூர்த்தி என்று வைத்திருப்பதும், அவரை அடிக்கடி குரு, குரு என்று அழைப்பதும் அயோக்கியத்தனத்தின் உச்சம் ஆகும். கருத்து சுதந்திரம் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை விதைப்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
அதேபோல், இந்த அநீதியை வெளிக்கொண்டு வருவதற்காக போராடிய கோவிந்தன் என்ற ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பழங்குடியின இளைஞரின் சாவுக்கு நீதிகேட்டு 16 ஆண்டுகள் நெடும் போராட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி, அதன்படியே தமது 39-ஆவது வயதில் தான் திருமணம் செய்து கொண்டார். கொலை மிரட்டல்கள், பணத்தாசை என பல வழிகளில் அவரை முடக்க முயற்சிகள் நடந்த போதிலும், அவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து நீதி பெற்றுத் தந்தவர் கோவிந்தன் தான். உண்மையில் இந்த நீதிப் போராட்டத்தின் கதாநாயகன் கோவிந்தன் என்ற வன்னியர் தான். ஆனால், அதை முழுமையாக மறைத்து விட்டு, சம்பந்தப்பட்ட ஊரின் ஊராட்சித் தலைவரை சாதிவெறி பிடித்தவரைப் போன்று காட்டியிருக்கின்றனர்.
கொடூரமான காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர் சங்க நாட்காட்டி இருந்தது அறியாமல் செய்த தவறு என்று ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இயக்குனரின் நாடகத்தை நம்புவதற்கு வன்னியர்கள் ஏமாளிகள் அல்ல. காவல் அதிகாரியின் வீட்டில் தொங்குவது ஏதோ ஒரு நாட்காட்டி அல்ல. அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்ட தேதியைக் காட்டும் வகையில், படப்பிடிப்புக்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டி ஆகும். அதில் எதிர்பாராமல் தவறு நடந்து விட்டதாக ஒருவர் கூறினால், அது வடிகட்டிய பொய் என்பதைத் தவிர வேறில்லை. உடல் முழுவதும் வன்மம் பரவியது மட்டுமின்றி, வன்னிய சாதி வெறுப்பு தலைக்கேறிய பிறவிகளுக்குத் தான் யாரோ செய்த கொடுமையை வன்னியர்கள் மீது சுமத்தும் மனநிலை இருக்கும்.
வன்னியர்களின் அடையாளமான அக்னிக் கலசம் இடம் பெற்ற வன்னியர் சங்க நாட்காட்டி திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னொரு காட்சியையும் ஆதாரமாக சுட்டிக்காட்ட முடியும். காவல் அதிகாரி ஒருவரும், வழக்கறிஞரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தப்பட்ட கொடூரக் காவல் அதிகாரி உள்ளூரில் சாதி பின்புலம் கொண்டவர் என்று கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஒடுக்கப்பட்ட சமுதாயம் அனுபவித்த கொடுமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக படம் எடுப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், தேவையின்றி ஒரு சாதியை, குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்த முயன்றிருப்பதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்; இது குரூர சிந்தனையின் வெளிப்பாடு.
கலை என்பது அழகு. கலைஞர்கள் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். அதிலும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தனி மனிதர் செய்த குற்றத்திற்காக, அதில் எந்த சம்பந்தமுமற்ற இன்னொரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது கலையும் அல்ல…. அழகும் அல்ல… மாறாக மிருகங்களை விட கீழான மனநிலையின் கோர வெளிப்பாடு தான். அம்பேத்கரின் அழகியக் குறியீட்டைத் தலைப்பாக வைத்து படம் எடுத்துள்ள ஜெய்பீம் குழுவினர் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவதுடன், வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்துக் காட்சிகளிலும் காவல் அதிகாரியின் பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
—
பு.தா. அருள்மொழி
தலைவர்,
வன்னியர் சங்கம்