Home>>கலை>>“ஜெய்பீம்” தவறு தவறுதான் – பா. ஏகலையவன்
கலைசெய்திகள்தமிழ்நாடுதிரைத்துறை

“ஜெய்பீம்” தவறு தவறுதான் – பா. ஏகலையவன்

யாரு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், அறிக்கை கொடுக்கட்டும்.

ஜெய்பீம் என்ற வார்த்தையை வைத்தது பாராட்டுக்குறிய ஒன்று.

அதற்காகவே ஒடுக்கப்பட்ட சமூகம் இதில்-இதற்கு முட்டுக்கொடுத்து நிற்பது சரியல்ல.

அறிந்தோ, “அறியாமலோ’ அந்த படத்தில், அந்த அக்னிகுண்டம் குறியீடு, ராமதாஸ் MLA, ஆய்வாளர் தோளில் மஞ்சள் (பச்சையும்தான்) துண்டை எல்லாம் வைத்து ‘குறியீட்டு’ அரசியலை வைத்தது தவறு, தவறுதான். ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஏற்புடையதல்ல. தவறு தவறுதான்.

சூர்யா படிக்க வைக்கின்றார், சேவை செய்கின்றார் என்பதெல்லாம் சரிதான். மறுக்க முடியாது. அதற்காக இதை நியாயப்படுத்த முடியாது.

உண்மை சம்பவத்தையொட்டிய கதை என்றார்கள். அதில் சம்பந்தப்பட்டவரை தேடி பிடித்து, அனுமதி பெறுவதில் என்ன சிக்கல் இருந்துவிடப்போகிறது. வாங்கியிருக்க வேண்டுமா, வேண்டாமா?

எலிவேட்டை என கதை எழுதி-படப்பிடிப்பும் நடித்தி முடித்து, கடைசியாக ‘ஜெய்பீம்’ என பெயர் வைக்க வேண்டிய அவசியம் ஏன்?

நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய வீடு கட்டிக்கொடுத்ததாக காட்டப்படுவதேன்? உண்மையில் இப்போது அப்படித்தான் இருக்கிறார்களா? அந்த வீட்டை விற்று விட்டு வந்து இன்று குடிசையில் இருக்கிறார்களா?
என்றால் அது ஏன் என்பதையும் காட்டியிருக்கலாம்.

தயாரிப்பாளர் என்பதற்காகவே நடிகர் சூர்யா இதில் அதிகம் தலையை கொடுத்துக் கொண்டிருக்கின்றாரோ எனத் தோன்றுகிறது. இதில் இயக்குனரின் பங்கு என்ன? எந்த நோக்கத்திற்காக இப்படியான ‘குறியீடுகளை’ வைத்தார் என்பதற்கு இயக்குனர் தரப்பில் சரியான பதில் இல்லை.

இன்றைய ட்ரண்ட், நடிகர் சூர்யாவை ஆதரிப்பதுதான் முற்போக்கு என்கிற நிலை உள்ளது. அது அவர்களின் நிலைப்பாடு. உண்மையில் அவர் சமூக பொறுப்புடன்தான் சேவை செய்கின்றார். அதை மறுக்க முடியாது. அது வேறு.

அதற்காக, திட்டமிட்ட மாதிரி ஒரு சமூகத்தவர்கள் மதிக்கும் குறியீடு, தலைவர் பெயர்களை எல்லாம் ஏன் எதற்காக வலிய புகுத்தப்பட்டது என்பதற்கு நேரடியான பதில் இல்லை. காவல் ஆய்வாளரின் உண்மை பெயர் அந்தோணி என்பதை மாற்ற யோசித்து மெனக்கிட்டவர்கள், தேவையின்றி ‘ராமதாஸ் MLA’ என பின்னணி காட்டியின் ஏன் வைக்க வேண்டும் என்பதையும் யோசித்திருப்பார்களா, இல்லையா?

ஏன் அந்த ‘குருமூர்த்தி’ என்ற பெயர் என யோசித்jதிருப்பார்களா, மாட்டார்களா?

இப்படி நிறைய கேள்விகளுக்கு நியாயமான பதில் இல்லை.
நியாயம் பேசுகிற முற்போக்குகளுக்கு…
நேரடியாகவே வருகிறேன்.

இங்கே ஒவ்வொரு சமூகத்தவரும் ஒரு தலைவரை வரிந்து ஏற்று மதித்துக்கொண்டிருக்கின்றோம். அதில் யாரையாவது ஒரு தலைவரை இப்படி ‘குறியீட்டு’ வைத்து படம் எடுத்திருந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்பீர்களா? அல்லது கலையை கலையாக பார்ப்போம் என ஒதுங்கியிருப்பீர்களா?

அதிகம் வேண்டாம். கர்ணன் திரைப்படத்தில் “1995”-ல் நடந்த சம்பவம் என போட்டபோது, அது திமுக ஆட்சியின் போது நடந்ததாக காட்டுகிறது. சம்பவம் நடந்ததது 1996 அதிமுக ஆட்சியில் என்று எத்தனை பேர் குதித்தார்கள். மாற்றச் சொன்னார்கள். அந்த முற்போக்குகள் இப்போது ‘கலையை கலையாக பார்க்கனும்’ என சாயம் பூசி நிற்பது ஏன்?

மீண்டும் சொல்வது இதுதான். ஜெய்பீம் என்ற ஒற்றை வார்த்தைக்காக இந்த படத்திற்கு அட்டவணைப் பிரிவு சமூகத்தவர்கள் முட்டுக்கொடுத்து நிற்பது சரியல்ல. ‘ஜெய்பீம்’ என்ற தலைப்புக்காக இங்கே யாரும் எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சமூகத்தவரை தவறானவர்களாக சித்தரித்ததை எதிர்த்துதான் கலகக்குரல் எழுந்துள்ளது.

தேவையின்றி இதை இரு தமிழர் சாதி தரப்பு பிரச்சனையாக கொண்டு போகக்கூடாது, என்பதில் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது.

வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துவிட்டு அடுத்தகட்ட வேலையை பார்க்கப்போவதே சிறப்பான ஒன்று.
இதன் மறுபக்கமும் ஒன்றும் உள்ளது.

எதிர்ப்பு கருத்து எழுந்தவுடனே, நடிகர் சூர்யா அந்த காட்சிகளை நீக்கியிருக்கிறார். உள்நோக்கத்தோடு செய்யவில்லை என தெரிவித்தார். அதோடு இந்த விவகாரத்தை விட்டிருக்கலாம். இட ஒதுக்கீடு, சமூகநீதி களத்தில் எவ்வளவோ வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. நாம் அதைப் பார்க்கப் போகலாம்.
இங்கு அரசின் எல்லாத் தளங்களிலும் சமூகநீதிப்படி இடப்பகிர்வு இல்லை. யார் யாரோ அனுபவித்துக் கொண்டிருக்க மண்ணின் மைந்தர்கள் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அரசியலை முன்னெடுக்கலாம்
மாநிலத்தின் ‘இருக்கும் உரிமையையும்’ பறிக்கும் விதமாக, எல்லாமும் ஆளுநரே பார்த்துக் கொள்வார். வழிநடத்துவார், தலையிடுவார் என்கிற போக்கில் டெல்லி ஒன்றியம் செயல்படத் தொடங்கி உள்ளது. அதற்கு எதிரான வேலைகளை தொடங்கலாம்.

குறிப்பு- அந்த மார்வாடியை ‘தமிழில் பேசுய்யா’ என்று கண்ணத்தில் அடிக்கும் ‘தமிழ்ப்பற்று’? படத்தின் டைட்டிலையும் “அம்பேத்கர் புகழ் வாழ்க’ என்று தமிழிலேயே வைத்துவிட்டு போயிருக்கலாமே. ‘ஜெய்பீம்’ என ஏன் இந்தி-மராத்தி மொழியை வைத்தார்கள். (அது எல்லாம் ஒரு வர்த்தக பொழப்புபா, பொழப்பு)


கட்டுரை:
பா.ஏகலைவன்,
ஊடகவியலாளர்.


கட்டுரை சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply