Home>>அரசியல்>>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ம (Digital) கருவூலத்தை டி.கே.ரங்கராஜன் துவக்கி வைத்தார்!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்ம (Digital) கருவூலத்தை டி.கே.ரங்கராஜன் துவக்கி வைத்தார்!

1921 தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம் நம்முடைய இயக்கம் இந்தியாவில் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியது. இதுவரை நமது இயக்கம் ஆற்றியுள்ள பணிகளுக்கும், அந்தப் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்துக்கும் சாட்சியாக இருப்பவை, அந்தப் பணிகள் குறித்து ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆவணங்கள் தான்.

தமிழகத்தில் நமது கட்சியின் முதல் கிளை தொடங்கப்பட்டதிலிருந்து எடுத்துக்கொண்டால், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் என ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த நமது கட்சி முன்னெடுத்த பணிகள், கட்சித் தோழர்கள் செய்த தியாகங்கள் ஏராளம். இவை குறித்தெல்லாம் எவ்வளவு ஆவணங்களை நமது கட்சி வெளியிட்டிருக்கும்!

அந்த ஆவணங்களை எல்லாம் சேகரித்து digital வடிவில் பாதுகாப்பது என்பது மிக முக்கியமான பணி. அந்தப் பணியை செயல்படுத்துவதற்காக நம்முடைய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவெடுத்து, சிபிஐ(எம்) கருவூலம் என்ற டிஜிட்டல் ஆவணக்காப்பகத்தை தொடங்கி இருக்கிறது.

சிபிஐ(எம்) கருவூலத்தின் தொடக்க நிகழ்வு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று கட்சியின் மாநிலக்குழு அலுவகத்தில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் ஆவணக்காப்பகத்தைத் தொடங்கி வைத்தார். 1959 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலக்குழுவின் ஐந்தாவது மாநாட்டு அறிக்கையிலிருந்தும், 2005 ஆம் ஆண்டின் மத்தியக்குழு ஆவணமான பெண்கள் பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் கருத்தோட்டம் பற்றிய ஆவணத்தில் இருந்தும், ஒரு சில பக்கங்களை ஸ்கேனிங் செய்து ஆவணக் கருவூலத்தைத் தொடங்கி வைத்தார்.

தோழர் கே.பாலகிருஷ்ணன் தன்னுடைய தலைமை உரையில், இந்த ஆவணக்காப்பகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் வாயிலாக நடந்து வரும் பணிகள் குறித்தும் உரையாற்றினார். நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் நமது கட்சியின் ஆவணங்களைப் பாதுகாப்பதற்கு டிஜிட்டல் ஆவணக்காப்பகத்தை கட்சி உருவாக்குவது அவசியமான பணி. வெகுகாலமாக தொடங்க வேண்டும் என்ற பணி இன்று சாத்தியமாகியுள்ளது. சிபிஐ(எம்) கருவூலம் மூலம் கட்சியின் வரலாறும், அதன் வாயிலாக சமூகத்தின் வரலாறும் பாதுகாக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

சிபிஐ(எம்) ஆவணக்காப்பகப் பணிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வரும் தோழர் நர்மதா தேவி, இதுவரை நடைபெற்றுள்ள பணிகளையும், செய்யவிருக்கும் பணிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

தீக்கக்திர், செம்மலர், மார்க்சிஸ்ட் இதழ்கள், வர்க்க வெகுஜன அரங்கங்களின் இதழ்கள், கட்சி மாநில, மாவட்ட மாநாட்டு அறிக்கைகள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் மாநாட்டு அறிக்கைகள், முன்னெடுத்த களப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் குறித்த ஆவணங்கள், புகைப்படங்கள், சட்டமன்றம், பாராளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள், தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, கட்சியின் தேர்தல் அறிக்கைகள், தேர்தல்கள் பற்றிய பரீசிலனை அறிக்கைகள், பிரசுரங்கள், பத்திரிகைச் செய்திகள், மத்தியக்குழு வெளியிட்ட ஆவணங்களின் தமிழ்மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பலவகையான ஆவணங்களை சிபிஐ(எம்) கருவூலம் டிஜிட்டல் வடிவில் தொகுத்துப் பாதுகாக்க உள்ளது.

நம்முடைய கட்சி ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதன் வழியாக கட்சியின் நூறாண்டு கால வரலாற்றை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறையின் புரிதலுக்கும் பயன்பாட்டுக்கும் கடத்த முடியும். இந்தச் செயல்பாட்டின் மூலமாக நமது சமூகம் கடந்து வந்த வரலாற்றையும் நாம் பதிவுசெய்ய முடியும்.


திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்)

Leave a Reply