“வா செத்து செத்து விளையாடலாம்”ன்னு ஒரு படத்தில வடிவேலுவை முத்துக்காளை கூப்பிட்டு வம்பிழுப்பார். அதுக்கு வடிவேலு சொல்வார் “செத்து விளையாடுறது எல்லாம் ஒரு விளையாட்டாடா”ன்னு சொல்வார்.
நகைச்சுவைக்காக எழுதப்பட்ட காட்சியாக இருந்தாலும் இந்த மாநாடு படம் பார்க்கும் போது இந்த நகைச்சுவைதான் ஞாபகம் வருது.
இந்த time loop (நேர வளையம்) எனப்படும் கருவை அடிப்படையாக கொண்டு உலக திரைப்படங்கள் பல மொழிகளில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மிக சிக்கலான இந்த கருவை தமிழில் முதன்முறையாக மாநாடு மூலம் வெங்கட் பிரபு கையில் எடுத்துள்ளார்.
புதுமையான கொஞ்சம் சிக்கலான கதைக்கருவை மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படியும், ரசிக்கும்படியும் எடுத்த வெங்கட் பிரபுவை முதலில் பாராட்ட வேண்டும்.
நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக துபாயில் இருந்து கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கும் அப்துல் காலிக் (சிம்பு), கெடுவாய்ப்பாக தமிழக முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து படுகொலை செய்யும் ஒரு சதிவலையில் மாட்டுகிறார்.
அதன் மூலம் ஒரு பெரிய மதக்கலவரம் உருவாகிறது. இதிலிருந்து சிம்பு எப்படி தப்பிக்கிறார்?? முதலமைச்சரை உயிரை காப்பாற்றி அதன் மூலம் மதக்கலவரத்தை தடுத்தாரா?? என்பதுதான் படத்தின் அடிப்படைக் கதை.
பொதுவாக இந்த மாதிரி படங்களில் கதாநாயகனின் நம்பமுடியாத சூரத்தனம் மட்டுமே முதலமைச்சர் உயிரை காப்பாற்றும். ஆனால் இந்த படத்தில் time loop (நேர வளையம்) கதாநாயகனுக்கு உதவுகிறது.
Time loop (நேர வளையம்) என்பது ஒருவர் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவருக்கான ஒரு கடமையை செய்து முடிக்க அல்லது அவரது தவறை சரி செய்ய இயற்கை ஒருவருக்கு வழங்கும் அரிய வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக வகுப்பறையில் ஒரு கணக்கு வாத்தியார் கொடுக்கும் கணக்கை தவறாக போடும் மாணவருக்கு அவர் சரியாக போடும் வரை மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது போன்றது தான் இந்த நேர வளையம்.
எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்த கணக்கை நாம் அணுகினால் சரியான விடை கிடைக்காது என்பதை நாம் ஒவ்வொரு முறை நாம் செய்யும் தவறுகள் மூலமே தெரிந்து கொள்வோம். இதே போல நம் வாழ்வில் நடந்தால் எவ்ளோ ஆச்சர்யமா இருக்கும்?? எத்தனை சுவாரசியமாகவும் இருக்கும்??
இதைத்தான் 2.30 மணி நேரப்படமாக நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பான மிக விறுவிறுப்பான ஒரு படத்தை நமக்கு வழங்கி உள்ளனர்.
பொதுவாக இந்த நேரவளையப் படங்களில் அதுபோல் நடப்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படாது. ஆனால் இதற்கு நல்ல காரணம் ஒன்றை காட்டியிருக்கிறார்கள். அதேபோல ஒரு நாள் மீண்டும் மீண்டும் வர அதற்கென தனித்துவமாக ஒரு தர்க்கம் வைத்திருப்பார்கள். அது என்ன என்பதை படத்தில் பார்த்தால் சுவாரசியமாக இருக்கும். இதற்கு மேலே படத்தின் கதையை சொல்ல முடியாத அளவுக்கு படத்தில் நாம் எதிர்பாராத பல திருப்பங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.
இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் என்றால் அது படத்தொகுப்பாளர் பிரவீன் தான். அவருக்கு இது நூறாவது படம் என்கிறார்கள். நிச்சயம் நூறு மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ரொம்ப கடினமான வேலை இந்த படத்தின் படத்தொகுப்பு தான். இந்த படத்தை பாமர மக்களுக்கும் புரியும்படி படத்தை தொகுப்பது பெரும் சவால். அது மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். மீண்டும் மீண்டும் வர காட்சிகளை பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படாத வகையிலும் அதே நேரத்தில் அவர்களுக்கு புரியும் வகையிலும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் கொடுக்க வேண்டும். மிக மிகக் கடினமான பணியை ரொம்பவே அற்புதமாக செய்திருக்கிறார்.
அடுத்து திரைக்கதை, நேர வளையம் என்பது ஒரு உலக திரைப்படத்தில் ஒரு பொதுவான கதை என்றாலும் அதற்கு திரைக்கதை வைப்பது சாதாரண விடயம் இல்லை. குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கடை கோடி மக்களும் ரசிக்கும்படி ஒரு அற்புதமான திரைக்கதை அமைத்த வெங்கட்பிரபு படத்தின் மற்றுமொரு கதாநாயகன்.
இதுநாள் வரை அவர் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கியிருக்கிறார். அவருக்கு இதுவே ஆகச்சிறந்த படம் எனலாம்.
அடுத்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு. அடிக்கடி திரும்பத்திரும்ப வரும் காட்சிகளை வெவ்வேறு கோணத்தில் காட்ட வேண்டும் என்ற கடுமையான சவாலை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்.
இசை யுவன் சங்கர் ராஜா பாடல்கள் அதிகம் இல்லையென்றாலும் பின்னணி இசையில் வழக்கம்போல் கலக்கி எடுத்திருக்கிறார்.
இந்த நால்வரும் இணைந்து ஆங்கில, கொரிய படங்களுக்கு இணையாக தமிழ் திரைப்பட உலகில் ஆகச்சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்த அனைவரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக, சிறப்பாக நடித்தாலும் S.J. சூர்யாவே முன்னணியில் உள்ளார். கதாநாயகனுக்கு இணையாக படத்தை தாங்கி செல்வது இவரின் நடிப்பு தான் இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் அளவிற்கு இவர் நடிப்பு அட்டகாசமாக உள்ளது. அதேபோல Y.G. மகேந்திரன் அவர்களின் நடிப்பும் அபாரம். சமீப காலங்களில் அவர் இந்த அளவுக்கு சிறப்பாக நடித்த எந்த ஒரு படத்தையும் பார்த்தது இல்ல என்னும் அளவிற்கு அவர் அவர் கதாபாத்திரம் மிக அழுத்தமாக உள்ளது.
வழக்கமான எந்தயொரு அலப்பறையும் இல்லாமல் கதையின் நாயகனாக அப்துல் காலிக்காக சிம்பு மிக இயல்பாக நடித்துள்ளார். அவர் தொடர்ந்து இதேபோன்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் அவர் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும் ரசிப்பார்கள்.
இசுலாமிய மக்கள் சமூகத்தில் எவ்வாறு ஒருதலைபட்சமாக தவறாக முத்திரை குத்தப்படுகிறார்கள் என்பதை படத்தின் மையக்கருவாக எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து சற்றும் மனம் தளராமல் தயாரித்து படத்தை வெளிக்கொண்டு வந்திருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் நம்பிக்கைக்கு நிச்சயம் படத்தின் வெற்றியே அவருக்கான பரிசு.
மொத்தத்தில் படம் எப்படி இருக்குன்னு கிரிக்கெட் ரசிகர்கள் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால், படம் ஆரம்பித்து முதல் அரை மணிநேரம் ராகுல் டிராவிட் ஆடுவது போல நல்ல அடித்தளம்.
பின்பு இடைவேளை வரை சச்சின் தெண்டுல்கர் ஆடுவது போல மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.
இடைவேளைக்கு பிறகு யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் இணைந்து ஆடுவது போல அதிரடி சரவெடியாக செல்கிறது. இறுதியில் டோனி முடிப்பது போல படம் மிக்கசிறப்பாவே முடிகிறது.
திரையரங்கில் குடும்பத்தோடு சென்று கண்டு களிக்க, ஆர்ப்பரித்து, கொண்டாட ஒரு மிக நல்ல பொழுதுபோக்குப் படம் “மாநாடு”.
இந்த ஆண்டில் திரையரங்குகளில் சார்பட்டா பரம்பரை படத்தை தவற விட்டதை இந்த படத்தில் பிடித்து விடலாம்.
மாநாடு – திரையில் தீபாவளிக் கொண்டாட்டம்.
—
கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.