தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும்; அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை முற்றுமுழுதாக எதிர்க்கின்றேன்! என மாநிலங்கள் அவையில் திரு. வைகோ அவர்கள் 2.12.2021 அன்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.
அவைத்தலைவர் அவர்களே,
அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இது, பொறுத்துக் கொள்ள முடியாத, இந்தியக் கூட்டு ஆட்சிக்கு எதிரான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும்.
மனித குலத்திற்கான ஒழுக்க நெறிகளை வகுத்த திருவள்ளுவர், திருக்குறளின் வான் சிறப்பு எனும் அதிகாரத்தில், மழையின் சிறப்பை வரையறுத்துக் கூறுகின்றார்.
நீர் இன்றி அமையாது உலகு எனின், யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு.
இதன் பொருள்:
நீர் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை.
அதுபோல் மழை இல்லை என்றால், மனித வாழ்க்கை இல்லை.
பக்ரா நங்கல் அணைக்கட்டைத் திறந்து வைத்து உரை ஆற்றிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், ‘அணைகளே இந்த நாட்டின் ஆலயங்கள்’ என்று சொன்னார்.
இப்போது உலகில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அணைகளைக் கட்டி இருக்கின்றது இந்தியா. இங்கே, 5254 அணைகள் உள்ளன. 44 அணைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பு, சென்னை மாகாண அரசில், பல அணைகள் கட்டப்பட்டன. ஆந்திர, கர்நாடக, கேரள மக்களை, நாங்கள் உடன்பிறப்புகளாகவே, அண்ணன், தங்கைகளாகவே கருதுகின்றோம். ஆனால் இப்போது அவர்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கின்றார்கள்; கழுத்தை நெரிக்கின்றார்கள்.
இந்த அணைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழ்நாடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இது அணைகள் பாதுகாப்புச் சட்டம் அல்ல; பேரழிவை ஏற்படுத்தும் சட்டம்.
வலுஇழந்த அணைகள், உடையக் கூடும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தமிழகத்தில் சோழப் பெருவேந்தன் கரிகாலன் கட்டிய கல் அணை, இன்றைக்கும் அப்படியே பயன்பாட்டில் இருக்கின்றது. அதைப் பார்த்த ஜெர்மானியப் பொறியாளர்கள், ‘இந்த அணையை எப்படிக் கட்டினார்கள்?’ என வியந்து போற்றினார்கள்.
கல்அணை, உலக அதிசயங்களுள் ஒன்று. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக நிற்கும்.
19 ஆம் நூற்றாண்டில், கடுமையான வறட்சி தாக்கியபோது, இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள். எனவே, கர்னல் பென்னி குயிக், சர் ஆர்தர் காட்டன், பொறியாளர் மெக்கன்சி போன்ற ஆங்கிலப் பொறியாளர்கள், பல அணைகளைக் கட்டினார்கள்.
கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் பரிதவித்துக் கொண்டு இருந்த விவசாயிகளுக்கு வாழ்வு அளித்து இருக்கின்றது.
ஆனால் நான் வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன்: ‘முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும்; வெள்ளத்திற்குள் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள்’ என்று, கேரள மாநிலத்தில் தவறான தகவல்களைப் பரப்புகின்றார்கள். அது உண்மை அல்ல.
எனவே, இரண்டு மாநிலங்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அவர்கள் இரண்டு அறிஞர்கள் குழுவை அமைத்தார்கள். ஒன்று எஸ்.எஸ்.பிரார் குழு, மற்றொன்று டி.கே. மிட்டல் குழு. இறுதியாக, நீதிபதி ஆனந்த், நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், நீதிபதி தாமஸ் ஆகிய மூவர் குழு, அணையைப் பார்வையிட்டது. எத்தகைய நில நடுக்கத்தையும் தாங்கக்கூடிய அளவிற்கு அணை வலுவாக இருக்கின்றது என அறிக்கை தந்தனர்.
ஆயினும், தவறான பரப்பு உரைகளின் விளைவாக, ‘அணையை உடைப்போம்; மக்களைக் காப்போம்’ என்ற முழக்கங்கள் கேரளத்தில் எழுப்பப்படுகின்றன.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; தமிழகம் கேட்டுக்கொண்டபடி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம்; பிறகு 152 அடிக்கு உயர்த்தலாம் என்று சொன்னது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகளை புதிதாகக் கட்டி இருக்கின்றார்கள். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அந்தக் கட்டுமானங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக, அவர்கள்தான் அணையின் உறுதித்தன்மை குறித்து பொய்யான தகவல்களை மக்கள் இடையே பரப்புகின்றார்கள். எனவே சிலர், சுத்தியல் இரும்புத் தடிகளோடு சென்று, அணையைத் தாக்கித் தகர்க்க முயற்சித்தார்கள்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், எங்களுடைய மாநில எல்லைக்கு உட்பட்ட பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என, கேரளச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியது.
இப்போதும் அவர்கள், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள்.
அப்படி அணை உடைக்கப்பட்டால், அதன்பிறகு அவர்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மாட்டார்கள். தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்கள் பாலை மணல்வெளியாக மாறிவிடும்.
1960 களில், பரம்பிக்குளம் ஆழியாறு தொடர்பாக, தமிழ்நாடு கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, முல்லைப்பெரியாறு ஆகிய நான்கு அணைகள், கேரள மாநில எல்கைக்குள் அமைந்து இருந்தாலும், அவற்றின் மீதான தமிழ்நாடு அரசின் உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. எனவே, கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும், முல்லைப்பெரியாறு அணையின் உரிமையாளர் தமிழக அரசுதான்.
இந்தச் சட்ட முன்வரைவின்படி, மாநிலங்களுக்கு இடையே நீர்ப்பங்கீடு குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், நடுவண் அரசின் அணைகள் பாதுகாப்பு மன்றத்திடமே இருக்கும் என்றாலும், பேரழிவு மேலாண்மை ஆணையமும் ஒற்றுமையாக இணைந்தே செயல்பட வேண்டும்.
எங்களுடைய கர்நாடகத்து உடன்பிறப்புகள், அண்ணன் தங்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், காவிரியின் குறுக்கே, மேகே தாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.
அதற்காக, கர்நாடக அரசு 5962 கோடி ரூபாய்களை ஒதுக்கி இருக்கின்றது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8 ஆகிய நாள்களில், கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஒருவரது இல்லத்தில், கமுக்கமாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அப்போதைய, நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சரும் பங்கேற்றார்.
“மேகே தாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை நாங்கள் வெளிப்படையாகத் தர மாட்டோம்; ஆனால், நீங்கள் அணையைக் கட்டிக் கொள்ளலாம்” என்று அவர் அந்தக் கூட்டத்தில் உறுதி அளித்தார்.
எனவே, கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இது, சென்னை மாகாணத்திற்கும், மைசூரு மாகாணத்திற்கும் இடையே, காவிரி நீர்ப்பங்கீடு குறித்து, 1924 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைந்த, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் கர்நாடகம் மதிக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டு மக்கள் அறவழிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
ஆந்திர மாநிலம் தன் பங்கிற்கு, பாலாறின் குறுக்கே தடுப்பு அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுக்கின்றது. பலநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் பெற்று வந்த தண்ணீர் இப்போது கிடைப்பது இல்லை என்பதை, நான் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றேன்.
வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, தமிழகத்தில் தென்பெண்ணை என அழைக்கப்படுகின்ற, கர்நாடகத்தின் மார்கண்டேயா ஆற்றில், ஒரு புதிய தடுப்பு அணையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைக் கர்நாடக அரசு செய்து வருகின்றது.
கர்நாடகத்தின் நந்தி மலைகளில் இருந்து புறப்பட்டு வருகின்ற தென்பெண்ணை ஆறு, கொடியாலம் என்ற இடத்தில் தமிழநாட்டுக்கு உள்ளே நுழைந்து, 320 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், கேஆர்பி மற்றும் திருஅண்ணாமலை மாவட்டத்தின் சாத்தனூர் அணைகளுக்கான தண்ணீர் அந்த ஆற்றில் இருந்துதான் வருகின்றது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கின்றது.
1892 ஆம் ஆண்டு, சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு மாகாண அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஒப்புதல் இன்றி தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை எதுவும் கட்ட முடியாது. அதை மீறி, கர்நாடகம் புதிய அணை கட்டினால், அதன்பிறகு, தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்கள் பாலை மணல்வெளியாக மாறிவிடும்.
இந்த அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு குறித்து, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை எதிர்த்து, அன்றைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கடிதம் எழுதினார். டிசம்பர் 6 ஆம் நாள் நான் தில்லிக்கு வந்து, ஒரு சகோதரனாக என் மீது அன்பு காட்டும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்தேன்.
“இந்தச் சட்டத்தை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ஒன்றியம் சிதறியது போல, இந்தியாவிலும் நடக்கும். அதன்பிறகு, சோவியத் ஒன்றியம் எங்கள் நாட்டு எல்லைக்குள் ஆக்கி இருக்கின்ற சொத்துகள் அனைத்தும், எங்களுக்கே சொந்தம் என உக்ரைன் நாடு அறிவித்தது போல, இந்தியாவிலும் நடக்கும்.
தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள தண்ணீரை, அண்டை மாநிலங்கள் தர மறுத்தால், நாளை ஒருநாள் எங்கள் பேரப்பிள்ளைகள் சொல்லுவார்கள்: தமிழ்நாட்டுக்குள் இருக்கின்ற விஜயநாராயணம் கடற்படைத் தளம் எங்களுக்கே சொந்தம்; நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, திருச்சி படைக்கலன் தொழிற்சாலை எல்லாம், எங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் காலம் வரும்”
என்று சொன்னேன்.
டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்கள். அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளைக் கைவிட்டார்கள்.
இப்போது நீங்கள் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினால், கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடுதான். எனவே, நான் இந்தச் சட்ட முன்வரைவை, முற்று முழுதாக எதிர்க்கின்றேன்.
இவ்வாறு வைகோ அவர்கள் உரையாற்றினார்கள்.
—
செய்தி உதவி:
தலைமை நிலையம்,
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை – 8
03.12.2021
—
செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.