Home>>அரசியல்>>அரியலூர் மாவட்ட அரசியல்வாதிகளே இது உங்களுக்குதான்!
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

அரியலூர் மாவட்ட அரசியல்வாதிகளே இது உங்களுக்குதான்!

நீங்களெல்லாம் உண்மையிலேயே மக்களின் குரலுக்கு செவிசாய்த்து சேவை செய்ய வந்தவர்களா அல்லது கல்யாணம் காதுகுத்து கருமாதி என்று உங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மறவாமல் சென்று தவறாமல் செய்திபோடும் பத்திரிகையாளர்களா?

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும், குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு என்பதுதானே தமிழ்மறை, இதெற்கெல்லாம் விளக்கம் அறியாத மனிதர்களா நீங்கள்? மக்களின் தேவையறிந்து சேவையாற்ற வேண்டிய நீங்கள் இன்னும் எத்தனை காலம்தான் எங்களை ஏய்த்துப் பிழைக்கத் திட்டம் தீட்டியுள்ளீர்கள்?

அரியலூர் மாவட்டத்தின் அடிப்படை பிரச்னைகளைப்பற்றி சிறிதளவேனும் சிந்தித்ததுன்டா, அரியலூர் மாவட்ட மக்கள் அன்றாடம்படும் அல்லல்களை எள்ளளவேனும் எண்ணிப் பார்த்ததுண்டா? இவற்றுக்கெல்லாம் நேரமில்லாத உங்களுக்கு கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்வதற்கும் மாவட்ட ஆட்சியரோடு மறவாமல் படம்பிடித்து செய்தி வெளியிடுவதற்கு மட்டும் எப்படி மணிக்கணக்கில் நேரம் கிடைக்கிறது? திட்டத்தை தொடங்கி வைத்தோம் என்ற செய்தியோடு தலைமறைவாகிவிடும் நீங்கள் அந்த திட்டம் முறையாக அடித்தட்டு மக்கள் வரை சென்றடைகிறதா என்று அன்றாடம் ஆய்வு செய்ததுண்டா?

சரி நீங்கள்தான் எங்களை ஏறெடுத்துப் பார்ப்பதேயில்லை, நாங்களாகவே உங்களிடம் வந்து கொடுத்த மனுக்களில் இதுவரை எத்தனை மனுக்களை ஆய்வுசெய்து தீர்வு வழங்கியுள்ளீர்கள்?

இதோ, உங்களிடம் கொடுத்து குப்பையில் வீசப்பட்ட மனுக்களில் ஒன்று இன்று குமுறிக் கொண்டிருக்கிறது.
அரியலூர் மண்ணின் வரலாறு என்பது ஏறக்குறை ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்துக்குமான வரலாறு. இந்த மண்ணில் குடிகொண்டு, கங்கையும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் மாமன்னன் இராஜேந்திரன் அரசாண்ட பூமியில் அவனின் அடையாளத்தை நிறுவ வேண்டும், அவனின் புகழை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இனியேனும் இந்த தமிழ்ச் சமூகத்தை வீரமும் விவேகமும் கொண்ட சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பும் இந்த மண்ணின் பூர்வகுடிகள் விடுத்த கோரிக்கையை இம்மியளவும் ஏறெடுத்துப் பார்க்காத நீங்களா எங்கள் பிரதிநிதிகள்?

எங்களைதான் மதுவுக்கு அடிமையாக்கி பிடி சோற்றுக்கு பிச்சையெடுக்க வைத்துவிட்டீர்கள், ஆனால் இந்த மண்ணில் குடிகொண்டு மாபெரும் படைகட்டி வீரம்செறிந்த பல போர்களை நடத்தி வெற்றிகளை மட்டுமே இந்த மண்ணுக்கு பரிசளித்துவந்த எங்கள் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பெயரை அவன் மண்ணில் நிறுவப்பட்டுள்ள ஒரு பேருந்து நிலையத்திற்கு சூட்டகூடவா அவனின் பெயர் தகுதியில்லாமல் போய்விட்டது?

அண்ணா, எம்ஜிஆர், பெரியார், கலைஞர், ஜெயலலிதா என்று திரும்பிய பக்கமெல்லாம் திராவிட திருவாளர்களின் பெயர்களை சூட்டத்தெரிந்த உங்களுக்கு இந்த மண்ணில் வாழ்ந்துமறைந்த மாவீரர்களின் பெயர்களைச் சூட்ட எது தடுக்கிறது?

உங்களையும் எங்களையும் அடிமைப்படுத்தி ஆட்சி செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து கொழுத்துக் கொண்டிருக்கும் வந்தேறிகளுக்குதான் நம் வலிதெரியாது சரி, இந்த மண்ணின் பூர்வகுடி உங்களுக்குமா மதி மழுங்கிக் கிடக்கிறது? நீங்கள் தூக்கிச் சுமக்கும் அந்த அற்ப பதவிக்காக, உங்களோடு இந்த மண்ணில் பிறந்து உங்களுக்கு அதிகாரம் கொடுத்து உங்களோடே வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த மக்களை ஏமாளிகளாகவும் கோமாளிகளாகவும் மாற்றி இன்னும் எத்தனைகாலம்தான் உங்கள் வந்தேறி தலைவர்களோடு நின்றுக் கொண்டு இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு துரோகம் செய்துகொண்டிருக்க போகிறீர்கள்?

எங்களின் கோரிக்கைகளெல்லாம் உங்களின் செவிகளுக்கு எட்டாதபோது எந்தமுகத்தோடு எங்களிடம் வாக்குகேட்டு வருவீர்கள்? இன்னும் எத்தனை காலம்தான் கொள்ளையடித்த பணத்தை வைத்து கோட்டையில் அமர்ந்து கொண்டு கும்மாளம் அடிக்கப்போகிறார்கள் உங்கள் தலைவர்கள்?

படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றான் பாரதி, அது படித்தவன் செய்யும் சூதுவாதுகளுக்கு மட்டுமல்ல, பணத்தைக் கொடுத்து வாக்குகள் வாங்கி இந்த மக்களை இலவசத்திற்கு அடிமைப்படுத்தி பகட்டு வாழ்க்கை வாழும் உங்களின் தலைமுறை போகும் போகும் ஐயோ என்று போகும் என்பதை மறவாதீர்கள்.

எங்களோடு நின்றுகொண்டு எங்களுக்கே துரோகம் இழைக்காதீர்கள். நீங்கள் எந்த கட்சியைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். முதலில் இந்த மண்ணின் மக்களுக்கு உண்மையாகவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பும் கொடுங்கள். இந்த மண்ணின் அடையாளத்தை எங்களில் ஒருவரான உங்களை வைத்தே அழிப்பதை இனியேனும் உணர்ந்து திருந்துங்கள். இல்லையேல் உறுதியாக ஒருநாள் திருத்தப்படுவீர்கள்!

உடனடியாக இந்த பெயர்பலகையை அகற்றி மண்ணின் மாவீரர்களை அடையாளப்படுத்துங்கள். வேண்டுமானால் நீங்கள் விரும்பும் உங்கள் தலைவர்களின் பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது வீட்டிற்கு சூட்டிக்கொள்ளுங்கள். பொதுச்சொத்துக்களில் உங்கள் அற்ப அரசியலை புகுத்தாதீர்கள். இதுவொன்றும் உங்கள் அப்பன் வீட்டு சொத்தை விற்று நிறுவப்பட்டதல்ல என்பதை உங்களுக்கு அழுத்தமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்!


கட்டுரை:
தமிழ்மகன்,
அரியலூர்.

Leave a Reply